சமூக வலைத்தளங்களின் மூலம் வதந்திகள் பரவுவதை தடுக்க கண்காணிப்பு கமிட்டி!

சமூக வலைத்தளங்களின் மூலம் வதந்திகள் பரவுவதை தடுக்க கண்காணிப்பு கமிட்டி!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் பொதுமக்கள் கடந்த 100 நாட்களாக அமைதி வழியில் போராடி வந்தனர். இந்நிலையில் நேற்று போலீசார் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலியானதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது. ஆனால் பலி எண்ணிக்கை அதிகம் இருக்கும் என்று அஞ்சப் படுகிறது.

தமிழகத்தில் இப்படி ஒரு தாக்குதல் இதுவரை நடந்ததில்லை என்னும் அளவுக்கு தமிழகமே கொதித்துப் போய் உள்ளது. இந்த தாக்குதலை கண்டித்து தமிழகம் எங்கும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு தொடர்ந்து நீடிக்கிறது. தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுகிறது. இதற்கிடையே தூத்துக்குடி, குமரி மற்றும் நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் இணைய சேவையை முடக்க உள்துறை ஆணை பிறப்பித்துள்ளது. இப்படி திடீரென மூன்று மாவட்டங்களில் இணைய தளங்கள் முடக்கப்பட்டதை தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டுள்ளது

அதே சமயம் சமூக வலைத்தளங்களின் மூலம் போராட்டச் செய்திகள் மற்றும் வதந்திகள் பரவுவதை தடுக்க அவற்றைக் கண்காணிக்கும் விதமாக நாடு முழுவதும் 716 மாவட்டங்களில் கண்காணிப்பு கமிட்டிகள் அமைக்கவிருப்பதாகத் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தத் திட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் உள்ள 716 மாவட்டங்களையும் ஒரே இடத்தில் இருந்து கண்காணிக்க முடியும். மேலும் இதில் இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் வாசிக்கவும், சூழலோடு பொருத்தி பார்த்துப் பதிலளிக்கவும் முடியும். இந்தத் திட்டமானது அமைச்சரகத்தின் ஒளிபரப்பு பொறியியல் துறையின் (BECIL) மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மாநில ஊடகங்கள், செய்தித்தாள்கள், கேபிள் சேனல்கள், வானொலி நிலையங்கள் மற்றும் முக்கிய உள்ளூர் சமூக வலைதள பக்கங்கள் உள்ளிட்டவற்றின் தரவுகளை இந்தக் குழு சேகரித்து, அதில் உள்ள தகவல்கள் அனைத்தும் சரியானதா என்பதையும் தீவிரமாக கண்காணிக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இந்தத் திட்டத்திற்காக ரூ.20 கோடி ஒதுக்கியுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!