பப்ஜி உள்பட மேலும் 118 செயலிகளுக்கு இந்தியாவில் தடை! – மோடி அரசு அதிரடி!
முன்னரே கிட்டத்தட்ட59 சீன செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில், பப்ஜி உள்ளிட்ட மேலும் 118 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இந்தியா – சீனா எல்லைப்பகுதியில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து சீன நிறுவனங்களுக்குச் சொந்தமான ஆப்’களை இந்தியாவில் தடைசெய்ய இந்திய அரசாங்கம் உத்தரவிட்டது. டிக்டாக் உள்ளிட்ட 59 சீன ஆப்’களை மொபைல் மற்றும் மொபைல் அல்லாத இணையம் சார்ந்த சாதனங்களில் பயன்படுத்துவதை தடைசெய்தது இந்திய அரசாங்கம். இந்தியாவின் தரவுகளை இந்தச் செயலிகள் மூலம் சீனா பெறுவதாக சர்ச்சை எழுந்தது. இதைத் தொடர்ந்தே இந்த முடிவை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதாவது இந்திய இறையாண்மை, ஒருமைப்பாடு, நாட்டின் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு அச்சுறுத்தலாகவும் ஊறுவிளைவிப்பதாக வும் இருக்கும் என்பதால் 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டது. இதில், டிக்டாக், ஷேர் இட், யூசி பிரௌசர், கேம் ஸ்கேனர், வீ சாட் உள்ளிட்ட மக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய செயலிகளும் அடங்கும்.
இதையடுத்து, ஏற்கெனவே தடை செய்யப்பட்ட செயலிகளுடன் தொடர்புடைய மேலும் 118 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. பிரபல ஆன்லைன் விளையாட்டான பப்ஜி, வீ சாட், லூடோ, ஆப் லாக், கிளீனர்- போன் பூஸ்டர், எம்.வி.மாஸ்டர், ஆப் லாக் என மேலும் 118 செயலிகளுக்கு தடை விதித்து மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.