June 2, 2023

நாடெங்கும் விற்பனைப் பொறுப்புகளில் பாலின இடைவெளி!

ந்தியாவில் விற்பனைத் துறையின் தலைமைப் பொறுப்புகளில் பெண்கள் 13% மட்டுமே உள்ளனர் என்றும், இந்தியாவில் விற்பனைப் பணியாளர்களில்/ விற்பனைத்துறை உழைப்புச் சக்தியில் பெண்கள் 19% மட்டுமே உள்ளனர் என்றும் உலகின் மிகப் பெரிய இணைய தொழில் முறை வலைத்தளம் லிங்க்ட் இன் தகவலை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான பெண் விற்பனை நிர்வாகிகள் ஹைதராபாத், பெங்களூரு மற்றும் சென்னை போன்ற அடுக்கு 1 நகரங்களில் உள்ளனர். தகவல் தொழில் நுட்பச் சேவைகள், சில்லறை விற்பனைத் துறைகள் ஆகியவை விற்பனையில் பெண்களை உள்ளடக்கியவையாக இருக்கின்றன. ஆனால் அதிக பாலின இடைவெளியைக் கொண்ட துறைகளில் வாகனத் துறையும் உள்ளது. விற்பனைப் பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் இந்திய நிறுவனங்கள் இன்னமும் பெண்களை விட ஆண்களையே அதிகம் வேலைக்கு அமர்த்துகின்றன என்றும் லிங்க்ட் இன் அறிக்கை கூறுகிறது.

இந்தியாவில் விற்பனையில் பெண்களின் நிலை குறித்த அதன் தரவுகளின்படி, இந்தியாவில் விற்பனைப் பணியாளர்களில் பெண்கள் 19% மட்டுமே உள்ளனர். விற்பனைத் தலைமைப் பொறுப்புகளில் பெண்கள் 13% மட்டுமே உள்ளனர். இந்தியாவில் உள்ள விற்பனைப் பணியாளர்களின் எண்ணிக்கையில் பாதி அளவைக் கூட பெண்கள் எட்டவில்லை என்றாலும், அடுக்கு-1 நகரங்களில், குறிப்பாகத் தென்னிந்தியாவில் தகவல் தொழில்நுட்பச் சேவைகள் மற்றும் சில்லறை வணிகத் துறைகளில் பாலின இடைவெளி சற்றுக் குறைவாகவே உள்ளது.

இந்தியா முழுவதும் விற்பனைப் பொறுப்புகளில் பாலின இடைவெளி உள்ளது. ஆனால் முதலாளிகள் விழிப்பின்றி ஒரு சார்பான தேர்வுகளுக்கு பதில் திறமைகளுக்கு முன்னுரிமை அளித்து பணியில் அமர்த்துவதால் பாலின இடைவெளி குறையும் என்ற நம்பிக்கை உள்ளது என்று லிங்க்ட் இன் இந்தியாவின் திறமை, கற்றல் தீர்வுகளின் மூத்த இயக்குனர் ருச்சி ஆனந்த் கூறினார்.

ஹைதராபாத் (26%), பெங்களூரு (25%), சென்னை (22%) போன்ற அடுக்கு 1 நகரங்களில் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் விற்பனை நிர்வாகிகளாக உள்ளனர். ஆனால் அடுக்கு 2 நகரங்களான அகமதாபாத் (14%), லக்னோ (13%), ஜெய்ப்பூர் ( 13%) அதிகமான பெண்களைப் பணியிடங்களுக்குக் கொண்டு வருவதற்கான பரந்த திறனை உறுதியளிக்கிறது என்றும் லிங்க்ட் இன் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதேபோல், தகவல் தொழில்நுட்பச் சேவைகள், சில்லறை விற்பனைத் துறைகள் பெண்களை உள்ளடக்கிய துறைகளாக உள்ளன. அவற்றில் முறையே 27% மற்றும் 23% பெண்கள் விற்பனைப் பொறுப்புகளில் பணி புரிகின்றனர். மறுபுறம் மருந்து (10%), உற்பத்தி (14%) வாகனத் தொழில்கள் (14%) ஆகியவை அதிக பாலின இடைவெளியைக் கொண்ட துறைகளாக உள்ளன. துறை வாரியாகக் கல்வி, வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலமே பாலின இடைவெளியைக் குறைக்க முடியும். அனைத்து அரசு, தனியார் நிறுவனங்கள் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும். பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதா குழி தோண்டிப் புதைக்கப்பட்டது.

அது குறித்து நீண்ட காலமாகத் தொடரும் கள்ள மௌனத்தை கவிதா உடைத்துள்ளார். தெலங்கானா முதல்வரின் மகளும், பி.ஆர்.எஸ் கட்சியின் மேலவை உறுப்பினருமான கவிதா, அரசியல் ஆதாயத்தின் அடிப்படையில் இந்த நகர்வை முன்னெடுத்திருந்தாலும் இது பாராட்டுதலுக்கு உரியதே. ஆனால் அதுவும் ஒரு நாள் செய்தியாகிப் போனதுடன் சரி. கள்ள மௌனம் தொடர்கிறது. கள்ள மௌனத்தைக் கட்டிக் காப்பதில் ஆண் அரசியலாளர்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர்.

பெண்கள் அனைவரும் அணி திரண்டு போராட்டத்தை முன்னெடுக்காவிடில் இந்நிலையை எள்ளளவு கூட மாற்ற முடியாது. கள்ள மௌனம் என்றென்றைக்கும் நிரந்தரமாகி விடும். ஆகவே தயாராகுங்கள் பெண்களே! போராட்டக்க ளத்திற்குப் புறப்படுங்கள் பெண்களே!

கே. எஸ். சமந்தா