Gen-Zயின் சென்சிடிவும், பெற்றோரின் கடமையும்!
இதுவரை வாழ்ந்தவர்களில் மிகுந்த சென்சிடிவான தலைமுறை, இப்போது இருக்கும் Gen-Zயின் பிற்பாதி பிள்ளைகள்தான். ஆல்பா இன்னும் எப்படி வருவார்கள் எனக் கற்பனை செய்யவே முடியவில்லை. இவர்களின் முதல் அடையாளம் என்பது ’எல்லாவற்றையும் மிக மிக எளிதாக அடையப் பெற்றவர்கள்’. ஒருவகையில் யதாத்தமானவர்களாகத் தோன்றினாலும், சிலந்தி வலையை முறுக்கியதுபோல இல்லாத பலவற்றைச் சிக்கல்களாக மனதிற்குள் பின்னி வைத்துள்ளனர். இந்த சிக்கல்களை விடுவிக்காமல், ‘ஒண்ணும் பிரச்சனையில்ல’ என மேம்போக்காக விடுவதால் அது ஒருபோதும் சரியாகிவிடுவதில்லை.
15 முதல் 25 வரை வயதுள்ள பிள்ளைகள், பல்வேறு நிலைகளில் மனதில் மூச்சு முட்டி வதைபடுவதை ஆங்காங்கே காண்கிறேன், கேள்விப்படுகிறேன். இவர்களை வாழ்வில் வென்றெடுக்க வைப்பதெல்லாம் மிகப் பெரிய சிரமம் இல்லை. காலம் அவர்களுக்கு மிகப் பெரிய வாய்ப்புகளை தன் வசம் வைத்து வழங்கிக்கொண்டுதான் இருக்கின்றது. ஆனால், இவர்களை ஒருகட்டம் வரைக்கும் தக்க வைப்பதுதான் பெற்றோர்களின் மிகப் பெரிய கடமை என்பதை பெற்றோர்கள் புரிந்துகொண்டே ஆக வேண்டும்.
‘பொருள் தேடி, புகழ் தேடி, தேடியவற்றைத் தக்க வைக்க இரவு பகலாக ஓடிக்கொண்டே இருக்கிறேன், அதற்கே என் நேரம், ஆற்றல் சரியாக இருக்கின்றது. அவர்களுக்காகத்தான் ஓடுகிறேன். அவர்கள் தாமாக வளர்ந்துவிடுவார்கள்!’ என நம்புவது என்னைப் பொறுத்தவரையில் போதுமானது அல்ல. அவர்களோடு இணைந்து பயணிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவற்றைச் செய்தே ஆகவேண்டும். ‘அது என்னனே தெரியல’ எனும் சமாளிப்பு ஏற்கத்தக்கது அல்ல. தெரியாதைத் தெரிந்துகொள்வதுதான் மனிதர்களின் பலம்.
உங்கள் தொழிலை, குடும்பத்தை, செல்வத்தையெல்லாம் நிர்வகிப்பது எப்படி என்று கற்றுக்கொள்ள விரும்புவதில் அர்த்தம் இருக்கிறது. மன அழுத்தம் என்பது விட்டுத் தொலைக்க வேண்டிய விஷயம் அல்லவா? அதைக் கூடவே வைத்துக் கொண்டு நிர்வகிப்பது எப்படி என்று எதற்காகக் கற்றுக் கொள்ள வேண்டும்?
நவீன வாழ்க்கையில் மன அழுத்தம் என்பது தவிர்க்கவே முடியாதது என்றாகிவிட்டது. காரணம், வளர்ச்சி என்றாலே அதிக செல்வம் என்று நினைத்துவிட்டதால் வந்த குழப்பம் இது. வாழ்வின் மற்ற பல முக்கிய அம்சங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு, பணமே மனிதனை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டதால் ஏற்பட்ட ஆபத்து இது.
நிர்வாகம் என்றாலே, அதைப் பொருளாதாரத்துடன் தொடர்புபடுத்தும் அவலத்தால் வந்த நிலை இது. மற்றவர்களை நிர்வகிக்கும் திறனை நீங்கள் முழுமையாகப் பெற வேண்டுமென்றால், அடிப்படையில் உங்களை அல்லவா முதலில் நிர்வகிக்கத் தெரிந்திருக்க வேண்டும்? உங்கள் உடலை, மனதை, உணர்ச்சிகளை எல்லாம் திறமையாகக் கையாளக் கற்றுக் கொண்ட பின்தானே, நீங்கள் மற்றவர்களை நிர்வகிக்க முனையலாம்?
முதலில் பிள்ளைகளைக் காப்போம்!