ஜி-20 டெல்லி உச்சி மாநாடு: அடுத்த மாநாட்டை நடத்தும் அதிகாரம் பிரேசில் நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஜி-20 அமைப்பின் இந்த ஆண்டுக்கான தலைமையை இந்தியா ஏற்றிருக்கிறது. இதையடுத்து, நாடு முழுவதும் பல்வேறு மாநாடுகள் நடைபெற்றன. இந்நிலையில், ஜி-20 உச்சி மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் உட்பட பல்வேறு உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில் இரண்டாம் நாளான இன்று (செப்.10) காலை டெல்லி ராஜகாட் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு உலகத் தலைவர்கள் வருகை தந்தனர். மழைக்கு நடுவே வருகைதந்த தலைவர்களை பிரதமர் மோடி வரவேற்றார். காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் உலகத் தலைவர்கள் மாநாடு நடைபெறும் பாரத் மண்டபத்துக்கு வந்தனர். அங்கே அவர்கள் மரக்கன்றுகளை நட்டனர். பின்னர் ஜி20 உச்சி மாநாட்டில் முக்கிய கருத்தரங்குகள் நடைபெற்றன.
அதன் தொடர்ச்சியாக ஜி-20 கூட்டமைப்பின் அடுத்த மாநாட்டை நடத்தும் அதிகாரத்தை பிரதமர் மோடி பிரேசில் நாட்டு அதிபரிடம் ஒப்படைத்தார். பின்னர் பேசிய அவர், டிசம்பர் மாதம் வரை ஜி20 தலைமைப் பொறுப்பில் இருப்பதால் நவம்பரில் காணொலி மூலமாக ஒரு கூட்டத்தை நடத்தவிருப்பதாகவும் அறிவித்தார். பின்னர் பிரதமர் மோடி ஜி20 கூட்டம் நிறைவு பெறுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
மாநாட்டின் இறுதி உரையின்போது பிரதமர் மோடி பேசுகையில், “நண்பர்களே.. எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. நாங்கள் பிரேசிலுக்கு முழு ஆதரவை வழங்குவோம். அவர்களின் தலைமையின் கீழ் ஜி20 அதன் இலக்குகளை மேலும் மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம். பிரேசில் அதிபர் மற்றும் எனது நண்பர் லூலா டி சில்வா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். ஜி20 தலைமை பதவியை அவர்களிடம் ஒப்படைக்கிறேன்.
நீங்கள் அனைவரும் அறிந்தபடி, நவம்பர் மாத இறுதி வரை ஜி20 தலைமையில் இந்தியாவுக்கு பொறுப்பு உள்ளது. இன்னும் இரண்டரை மாதங்கள் உள்ளன. கடந்த இரண்டு நாட்களில், நீங்கள் அனைவரும் இங்கு பல விஷயங்களை முன்வைத்து, பல பரிந்துரைகளை வழங்கியுள்ளீர்கள். மேலும், புதிதாக பல திட்டங்களையும் முன்வைத்துள்ளீர்கள். நீங்கள் வழங்கியிருக்கும் பரிந்துரைகள், அவற்றின் மீதான அடுத்த கட்ட நகர்வுகள், அவற்றை எவ்வாறு இயக்க முடியும் என்பது குறித்து முடிவு செய்ய வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது. நவம்பர் பிற்பகுதியில் ஜி20 உச்சி மாநாட்டின் மெய்நிகர் அமர்வை (virtual session) நடத்த வேண்டும் என்று நான் முன்மொழிகிறேன். அந்த அமர்வில், இந்த உச்சி மாநாட்டின் போது முடிவு செய்யப்பட்ட திட்டங்களை நாம் மதிப்பாய்வு செய்யலாம். இதற்கான விவரங்கள் அனைத்தையும் உங்கள் அனைவருடனும் எங்கள் குழு பகிர்ந்து கொள்ளும். நீங்கள் அனைவரும் அதில் பங்கு பெறுவீர்கள் என நான் நம்புகிறேன்.
இதன் மூலம், இந்த ஜி20 உச்சி மாநாட்டின் நிறைவை அறிவிக்கிறேன். “ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்” எனும் கோட்பாட்டின் வழித்தடம் பயனுள்ளதாக அமைய வேண்டும். “ஸ்வஸ்தி அஸ்து விஸ்வஸ்ய!” – அதாவது, “உலகம் முழுவதிலும் அமைதியும் நம்பிக்கையும் தழைத்தோங்கட்டும்.” 140 கோடி இந்தியர்களின் வாழ்த்துக்களை உங்களுக்கு தெரிவிக்கிறேன். உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. இவ்வாறு பிரதமர் மோடி தனது நிறைவுரையில் கூறினார்.