மஹாகவி பாரதி வரிகளை மேற்கோள் காட்டி ஜனாதிபதி சுதந்திர தின உரை – முழு விபரம்!

மஹாகவி பாரதி வரிகளை மேற்கோள் காட்டி ஜனாதிபதி சுதந்திர தின உரை – முழு விபரம்!

இந்தியர்கள் பலவித ரசனைகள் கொண்டவர்களாக இருந்தாலும் அவர்களின் கனவு ஒன்றுதான். கடந்த 1947ம் ஆண்டுக்கு முன் இந்தியர்களின் கனவு சுதந்திர இந்தியாவிற்காக இருந்தன. இன்றைய கனவுகள் நாட்டின் விரைவான வளர்ச்சிக்காக, பயனுள்ள மற்றும் வெளிப்படையான ஆளுகைக் காக உள்ளன. இந்த கனவுகளை நிறைவேற்றுவது அவசியம் . இதனிடையே அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதால் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மக்களுக்கு அதிக பலன்கள் கிடைக்கும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தியா முழுவதும் நாளை 73-வது சுதந்திர தின விழா கொண்டாட உள்ளது. இந்த கோலாகல விழாவான சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று இரவு 7 மணிக்கு அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷன் தொலைக்காட்சிகளில் நாட்டு மக்களுக்கு சிறப்புரையாற்றினார்.

அவரின் இன்றைய உரையின் முழு விவரம் இதோ :

“எனதருமை குடிமக்களே,

73வது சுதந்திரதின விழாவையொட்டி உங்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் வசிக்கும் அன்னை இந்தியாவின் பிள்ளைகள் அனைவருக்கும் இது மகிழ்ச்சியான, உணர்ச்சிபூர்வமான நாளாகும். காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலைபெற தீரமிக்க தியாகங்கள் செய்த, பேராடிய, அரும்பாடுபட்ட, எண்ணற்ற விடுதலைப் போராட்ட வீரர்கள் மற்றும் புரட்சியாளர்களை நாம் நன்றியோடு நினைவுகூர்வோம்.

சுதந்திர தேசம் என்ற முறையில், 72 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நாம், மிகவும் தனித்துவ மான கட்டத்தில் இருக்கிறோம். நமது தேசம் விடுதலைபெற வெற்றிகரமான முயற்சிகளுக்கும் சமூகத்தின் அனைத்து ஏற்றத்தாழ்வுகளையும் மாற்றியமைக்கும் நமது தொடர் முயற்சிகளுக்கும் வழிகாட்டும் விளக்காகத் திகழ்கின்ற தேசப்பிதா மகாத்மா காந்தியின் 150வது பிறந்த ஆண்டு விழாவை ஒருசில வாரங்களில் அக்டோபர் 2ஆம் தேதி கொண்டாடவிருக்கிறோம்.

மகாத்மா காந்தி வாழ்ந்த, பணியாற்றிய இந்தியாவிலிருந்து தற்போதைய இந்தியா மிகவும் மாறுபட்டிருக்கிறது. இருப்பினும், காந்தி அவர்கள், தற்போதும் பொருத்தமானவராகவே விளங்குகிறார். நீடிக்கும் தன்மை, சுற்றுச்சூழல் உணர்வு, இயற்கையோடு இயைந்து வாழ்தல் போன்றவற்றில் அவர் அளித்த ஆலோசனை நமது காலத்தின் சவால்களை எதிர்பார்த்துக் கூறியதாகும். பின்தங்கிய மக்கள் மற்றும் குடும்பங்களுக்கான நலத்திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்தும் போதும், புதுப்பிக்கவல்ல எரிசக்தியாக சூரிய சக்தியை இணைத்துக்கொள்ள கோரும்போதும், காந்திய தத்துவத்தையே நாம் செயல்படுத்துகிறோம்.

இந்த ஆண்டு, இந்தியாவின் மகத்தான, ஞானம் நிறைந்த, செல்வாக்கு மிக்க குருநானக் தேவ் அவர்களின், 550வது பிறந்த ஆண்டாகவும் இருக்கிறது. சீக்கியத்தின் நிறுவனராக அவர் இருந்தார். ஆனால், அவரின் போதனைகளும், பக்தியும், சீக்கிய சகோதர, சகோதரிகளுக்கு அப்பால் உள்ளவர்களிடமும் செல்வாக்கு செலுத்துகின்றன. இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள லட்சக்கணக்கானவர்களை அவை சென்றடைந்துள்ளன. இந்த நன்னாளில், அவர்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது சுதந்திரத்திற்குத் தலைமை தாங்கிய ஒப்பற்ற தலைமுறையினர் அரசியல் அதிகாரத்தை மாற்றுவதாக மட்டும் சுதந்திரத்தைக் கருதவில்லை. தேசத்தைக் கட்டமைப்பதற்கும், தேசிய ஒருங்கிணைப்பிற்குமான நீண்ட, பரந்த, நடைமுறைகளின் படிக்கட்டாகவே இதனைக் கருதினர். ஒவ்வொரு தனிநபரின் வாழக்கையை, ஒவ்வொரு குடும்பத்தின் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக சமூகத்தை மேம்படுத்துவதே அவர்களின் நோக்கமாக இருந்தது.

இந்தப் பின்னணியில், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் அந்தப் பகுதிகளுக்கு மிகுந்த பயனை அளிக்கும் என்று நான் நம்புகிறேன். நாட்டின் பிற பகுதியில் உள்ள குடிமக்கள் பெறுகின்ற, அனுபவிக்கின்ற அதே உரிமைகளை, அதே சலுகைகளை, அதே வசதிகளை அவர்களாலும் பெற முடியும்.

அவை, முற்போக்கான, சமத்துவமான சட்டங்கள்; கல்வி உரிமை தொடர்பான அம்சங்கள்; தகவல் உரிமை மூலம் மக்களுக்குக் கிடைக்கும் தகவல்கள்; பாரம்பரியமாக சிரமப்படும் சமூகங்களுக்குக் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் அளிக்கப்படும் இடஒதுக்கீடுகள் மற்றும் பிற சலுகைகள்; திடீர் முத்தலாக் போன்ற பாரபட்சமான நடைமுறைகளை ஒழித்ததால், நமது மகள்களுக்கான நியாயம் போன்றவற்றை உள்ளடக்கியதாகும்.

கோடை காலத்தின் முற்பகுதியில், மனிதகுல வராலற்றின் மிகப்பெரிய ஜனநாயக நடைமுறை யான 17வது பொதுத்தேர்தலில் இந்திய மக்கள் பங்கேற்றார்கள். இதற்காக நமது வாக்காளர்களை நான் பாராட்டுகிறேன். பெரும் எண்ணிக்கையிலான வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளில் ஆர்வத்தோடு திரண்டிருந்தனர். இவர்கள் தங்களின் வாக்குரிமையையும், வாக்களிப்பின் பொறுப்பையும் வெளிப்படுத்தினார்கள்.

ஒவ்வொரு தேர்தலும் புதிய தொடக்கத்தைக் குறிக்கிறது. ஒவ்வொரு தேர்தலும் இந்தியாவின் கூட்டு நம்பிக்கையைப் புதுப்பிப்பதாக இருக்கிறது. இந்தக் கூட்டு நம்பிக்கையை 1947 ஆகஸ்ட் 15-ன் நமது அனுபவத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியும் என்று நான் கூறுவேன். இப்போது, நம் அனைவருக்கும் இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும், நேசத்திற்குரிய நம் தேசத்தை, புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்ல, ஒருங்கிணைந்து பணியாற்றுவது அவசியமாகும்.

இது தொடர்பாக, அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மக்களவை மற்றும் மாநிலங்களவையின் நீண்ட, பயனுள்ள அமர்வுகளை நான் மகிழ்ச்சியுடன் குறிப்பிடு கிறேன். கட்சி வேறுபாடற்ற ஒத்துழைப்பு உணர்வுடனும், ஆக்கபூர்வமான விவாதத்துடனும், பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. வரும் ஐந்தாண்டுகளுக்கு நாம் பாதுகாக்க வேண்டியது எது என்பதைக் குறிப்பிடுவதாகவே இது இருக்கிறது என்று நான் நம்புகிறேன். இந்தக் கலாச்சாரம், அனைத்து சட்டப் பேரவைகளுக்கும் பரவ வேண்டும் என்றும் நான் வலியுறுத்து கிறேன்.

இது ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது? வாக்களித்தவர்கள் வைத்துள்ள நம்பிக்கையோடு, தேர்ந் தெடுக்கப்பட்டவர்களின் நம்பிக்கை சமமாக இருக்க வேண்டும் என்பதால் மட்டும் இது முக்கியத் துவம் பெறவில்லை. சுதந்திரத்தின் முக்கிய மைல்கல்லான தேசக் கட்டமைப்பு எனும் தொடர் நடவடிக்கைக்கு ஒவ்வொரு அமைப்பும், ஒவ்வொரு பங்களிப்பாளரும் இணைந்து பணியாற்ற, இணக்கத்துடன் செயல்பட, ஒற்றுமையுடன் பாடுபட இது தேவை என்பதாலும் முக்கியத்துவம் பெறுகிறது. தேசக் கட்டமைப்பு என்பது வாக்காளர்களுக்கும் அவர்களின் பிரதிநிதிகளுக்கும் இடையே, குடிமக்களுக்கும் அவர்களின் ஆட்சிக்கும் இடையே, மக்கள் சமூகத்திற்கும் அரசுக்கும் இடையே உகந்த பிணைப்பை உருவாக்குவதாகும்.

செயலாற்றுபவர் மற்றும் பயன்பெறுவோருக்கு அரசும், ஆட்சியும் இங்கு முக்கியப் பங்கு வகிக்கிறது. அதேபோல், குடிமக்களால் அனுப்பப்படும் தகவல் மற்றும் மக்களின் எண்ணங்களுக்கு, முக்கியமான அமைப்புகளும் கொள்கை உருவாக்குவோரும், மதிப்பளிப்பது முக்கியமாகும். குடியரசுத் தலைவர் என்ற முறையில், நாடு முழுமைக்கும், பல மாநிலங்களுக்கும், பகுதிகளுக்கும் பயணம் செய்யவும், அனைத்துத் தரப்பு மக்களைச் சந்திக்கவும் எனக்கு உரிமை உள்ளது.

இந்தியர்கள் பழக்க, வழக்கங்களில் மிகவும் மாறுபட்டவர்களாக இருக்கலாம். ஆனால், அவர்கள் பகிர்ந்து கொள்ளும் கனவுகள் ஒரே மாதிரியானவை. 1947-க்கு முன் அந்தக் கனவுகள் சுதந்திர இந்தியாவாக இருந்தன. இன்று அந்தக் கனவுகள் துரிதமான வளர்ச்சியாக, செயலூக்கம் உள்ள, வெளிப்படையான நிர்வாகமாக, ஒவ்வொரு நாள் வாழக்கையிலும் அரசின் சிறிய தடமாவது இருக்க வேண்டும் என்பதாக இருக்கின்றன. இந்தக் கனவுகளை நிறைவேற்றுவது அவசியம். மக்களின் தீர்ப்பை அறிந்தால், அவர்களின் விருப்பங்கள் தெளிவாகத் தெரியும்.

அரசு தனது பங்களிப்பை செலுத்துவது தவிர்க்க முடியாதது என்பதால் 130 கோடி இந்தியர்களின் திறமை, புதிய கண்டுபிடிப்பு, படைப்பாக்கம், தொழில் முனைதல் ஆகியவற்றில் மகத்தான வாய்ப்பும், திறனும் இருப்பதாக நான் வாதிடுவேன். இவையெல்லாம் புதியவை அல்ல.

பல ஆயிரம் ஆண்டுகளாக நமது நாகரீகத்தில் வேரூன்றியிருப்பவை. நமது நீண்ட வரலாற்றின் பல தருணங்களில் நமது மக்கள் துயரங்களையும், சவால்களையும் எதிர்கொண்டிருக்கிறார்கள். அத்தகைய தருணங்களிலும்கூட நமது சமூகம் உறுதியானது என்பதை நிரூபித்துள்ளது.

சாதாரண குடும்பங்கள், அசாதாரண துணிச்சலை வெளிப்படுத்தியுள்ளன. உறுதிமிக்க பல தனி நபர்கள் வாழ்வதற்கும், வளமாவதற்கும் பலம் பெற்றிருந்தார்கள். தற்போது அரசால் வசதியான, பயனுள்ள சூழல் உருவாக்கப்படுகிறது. நமது மக்கள் எதைச் சாதிக்க முடியும் என்பதை நாம் கற்பனை செய்ய முடியும்.

வெளிப்படையான, அனைவரையும் உள்ளடக்கிய வங்கி நடைமுறை, இணையதளம் வழியாக வரி செலுத்தும் முறை, சட்டப்பூர்வமான தொழில் நிறுவனங்களுக்கு எளிதாக முதல் கிடைத்தல் ஆகிய வடிவங்களில் நிதிக் கட்டமைப்பை அரசு உருவாக்க முடியும். ஏழைகளிலும் ஏழைகளாக உள்ளவர்களுக்கு வீட்டுவசதி, எரிசக்தி, கழிப்பறைகள் வசதி செய்தல், ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் போன்ற வடிவத்தில் கட்டமைப்பு வசதிகளை கட்டுமான அரசு செய்ய முடியும்.

நாட்டின் ஒரு பக்கத்தில் பெரு வெள்ளம், இயற்கைச் சீற்றங்கள், மறுபக்கத்தில் தண்ணீர் தட்டுப்பாடு என்பதை எதிர்கொள்ள அமைப்புரீதியான கட்டமைப்புகளை அரசு உருவாக்க முடியும். அகலமான, சிறந்த நெடுஞ்சாலைகள், பாதுகாப்பான, விரைவான ரயில் வண்டிகள், நாட்டின் உட்புறப்பகுதி களில் விமான நிலையங்கள், கடலோரப் பகுதிகளில் துறைமுகங்கள் என்ற வடிவில், போக்கு வரத்துக் கட்டமைப்பை அரசு உருவாக்க முடியும். அனைத்து தகவல்களும் கிடைக்கச் செய்யும் டிஜிட்டல் இந்தியா திட்டத்திலிருந்து சாமானிய மக்களும் பயனடைய வழிவகுக்க முடியும்.

விரிவான சுகாதார திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள், சலுகைகள் போன்ற வடிவில், சமூகக் கட்டமைப்பை அரசு செய்ய முடியும். பாலின சமத்துவத்திற்கான சட்டம் இயற்றுதல், மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்குத் தடையாக உள்ள சட்டங்களை நீக்குதல் போன்ற வடிவில் சட்டக் கட்டமைப்பை அரசு செய்ய முடியும்.

இருப்பினும், சமூகத்திற்கும், குடிமக்களுக்கும் மிகவும் முக்கியமானது என்னவென்றால், இந்தக் கட்டமைப்பைத் தங்களின் நலனுக்காகவும், தங்கள் குடும்பங்களின் நலனுக்காகவும், சமூகத்தின் நலனுக்காகவும் நம் அனைவரின் நலனுக்காகவும் பயன்படுத்தி மேம்படுத்துவதுதான்.

உதாரணமாக, விவசாயிகள் தங்களின் உற்பத்திப் பொருள்களை பெரிய சந்தைகளுக்குக் கொண்டு சென்று நல்ல விலை பெற்றால் மட்டுமே கிராமப்புற சாலைகளுக்கும் சிறந்த போக்குவரத்து தொடர்புக்கும் அர்த்தம் இருக்கும். சிறிய தொழில்களானாலும், பெரிய தொழில்களானாலும் நமது தொழில் முனைவோர் கவுரவத்திற்குரிய தொழில் நிறுவனங்களை உருவாக்கி, நீடித்த வேலை வாய்ப்புகளைத் தந்தால் மட்டுமே, நிதி சீர்திருத்தங்களும் வணிகத்திற்கான எளிய விதிமுறைகளும் பொருள் உள்ளதாக இருக்கும்.

இந்தியாவின் பெண்களுக்கு அதிகாரம் அளித்து, அவர்களின் கவுரவத்தை அதிகரித்து, வீட்டிற்கு வெளியே வந்து உலகத்திற்குள் செல்லும் கிரியாஊக்கியாக அமைந்து, அவர்களின் விருப்பங்களை அடையும்போது மட்டுமே அனைவருக்கும் கழிப்பறை வசதி, வீடுகளுக்குக் குடிநீர் என்பது பொருள் உடையதாக இருக்கும். தாய்மார்களாக, வீட்டைப் பராமரிப்பவர்களாக,  தொ ழில் முறையாளர் களாக, தங்களின் வாழ்க்கையைத் தாங்களே தீர்மானிக்கும் தனிநபர்களாக, எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானித்து அதனை நிறைவேற்றிக் கொள்ள அவர்களால் முடியும்.

இத்தகைய கட்டமைப்பு இந்திய மக்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் சொந்தமானது. இதனைப் பராமரிப்பதும், பாதுகாப்பதும், பாடுபட்டு வென்ற சுதந்திரத்தின் இன்னொரு அம்சத்தைப் பாது காப்பதாகும். சமூக அக்கறையுள்ள இந்தியர்கள் இத்தகைய கட்டமைப்பு வசதிகளை மதித்து உரிமை கொண்டாடுவார்கள். அவ்வாறு அவர்கள் செய்யும்போது, நமது முப்படைகளிலும் துணை ராணுவப்படையிலும், காவல்படையிலும் பணியாற்றுகின்ற துடிப்பு மிக்க ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இணையான உணர்வை வெளிப்படுத்துகின்றவர்கள் ஆவார்கள்.

எல்லைப் பகுதிகளில் நமது தேசத்தை நீங்கள் காவல் காப்பதாக இருந்தாலும், ஓடும் ரயில் மீது அல்லது வேறெந்தப் பொதுச் சொத்தின் மீது கல்லெறிவதற்கு முன் அந்தக் கையைத் தடுத்து நிறுத்துவதானாலும் அதன் நன்மைக்காகத்தான்; ஒரு வேளை கோபத்தில் அப்படிச் செய்தாலும் கூட்டுச் செல்வத்தை நீங்கள் பாதுகாக்க வேண்டும். இது வெறுமனே சட்டத்திற்குக் கீழ்ப்படியும் விஷயம் அல்ல; இது மனசாட்சிக்கு பதிலளிப்பதாகும்.

அரசும், சமூகமும், ஆட்சியும், மக்களும் ஒருவரை ஒருவர் எப்படி பார்க்க வேண்டும், ஒருவரோடு ஒருவர் எப்படி ஒத்துழைக்க வேண்டும் என்பது பற்றி இதுவரை நான் பேசியிருக்கிறேன். இந்தியர் களாகிய நாம் இன்னொரு விஷயத்தை எப்படிப் பார்க்க வேண்டும் என்பது பற்றி, பேச விரும்புகிறேன். மற்றவர்கள் நமக்கு என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ அதை மற்றவர்களுக்கு நாம் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கும்.

பல ஆயிரம் ஆண்டுகளாக, பல நூற்றாண்டுகளாக இந்தியா, நியாயம் வழங்கும் சமூகமாக இருந்துள்ளது. வாழு, வாழவிடு என்ற கோட்பாட்டுடன் அமைந்திருப்பதால் அது எளிதாக சென்று கொண்டிருக்கிறது. பிறந்த பகுதி, மொழி, கடவுள் நம்பிக்கை அல்லது நம்பிக்கையின்மை எதுவாக இருந்தாலும் ஒருவர் மற்றவரின் அடையாளத்தை மதிப்பவர்களாக நாம் இருக்கிறோம். இந்தியாவின் வரலாறும், வாழ்க்கை முறையும், இந்தியாவின் கடந்த காலமும், எதிர்காலமும் – சகவாழ்வு, சீர்திருத்தம், மனம் திறந்து மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் செயல்பாடாக இருக்கிறது.

இந்த ஒற்றுமை உணர்வை நாம் நமது அரசியல் செயல்பாடுகளில் கொண்டுவந்திருக்கிறோம். இதே போல், அனைத்து கண்டங்களிலும் உள்ள நட்பு நாடுகளுடன் நமது அனுபவங்களையும் நமது பலத்தையும் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டிருக்கிறோம். உள்நாடாக இருந்தாலும், வெளிநாடாக இருந்தாலும் உள்நாட்டுத் திட்டங்களாக இருந்தாலும், வெளியுறவுக் கொள்கையாக இருந்தாலும் நாம் எப்போதும் இந்தியாவின் தனித்துவமான உணர்வில் கவனமாக இருப்போம்.

நாம் ஒரு இளமை ததும்பும் நாடாக இருக்கிறோம். நமது இளைஞர்களால் சமூகத்தை மேம் படுத்துவது அதிகரித்துள்ளது. விளையாட்டிலிருந்து விஞ்ஞானம் வரை கல்வி உதவித்தொகை யிலிருந்து கணினித் திறன் வரையிலான பல திசைகளில் நமது சிறப்பான தேடலை முறைப்படுத்தி வருகிறோம்.

இது, இதயத்திற்கு இதமாக இருக்கிறது. நமது இளைஞர்களுக்கு அடுத்து வரும் தலைமுறை களுக்குக் குறிப்பாக வகுப்பறைகளில் நாம் வழங்கவேண்டிய பெரும் பரிசு என்பது, ஆர்வம் என்கிற பண்பாட்டை நிறுவனப்படுத்துவதாகவும் ஊக்குவிப்பதாகவும் இருக்க வேண்டும். நமது குழந்தை களுக்கு செவி சாய்ப்போம் – எதிர்கால முணுமுணுப்புகளை நம்மீது வீசாமல் இருப்பதற்காக.

மிகவும் நலிந்த குரலுக்கும் செவிசாய்க்கும் குணத்தை இந்தியா ஒருபோதும் இழந்துவிடாது என்ற நம்பிக்கையோடு இதை உங்களிடம் தெரிவிக்கிறேன். தொன்மை மிக்க சிந்தனைகள் மீதான பார்வையை அது ஒருபோதும் இழந்து விடாது. நியாய உணர்வையும் சாகச உணர்வையும் அது ஒருபோதும் மறந்து விடாது. இந்தியர்களாகிய நாம் நிலவையும், செவ்வாயையும் ஆய்வு செய்யத் துணிந்துள்ளோம்.

இயற்கைக்கும் அனைத்து உயிரினர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் இந்தியர்களாகிய நாம் நமது புவிக்கோளில் உள்ள நான்கு புலிகளில் மூன்றுக்கு அவை விரும்பும் வசிப்பிடங்களை உருவாக்கிப் பாதுகாத்து வருகிறோம். ஏனென்றால் இயற்கைக்கும், இதர உயிரினங்களுக்கும் கருணை காட்டுவது இந்தியத் தன்மையின் சிறந்த குணமாக இருக்கிறது.

100 ஆண்டுகளுக்கு முன்னால், கீழ்க்காணும் கவிதை வரிகளில், உத்வேகம் அளிக்கும் கவிஞர் சுப்ரமணிய பாரதி நமது விடுதலை இயக்கத்திற்கும், அதன் விரிவான இலக்குகளுக்கும் குரல் கொடுத்துள்ளார்.

मंदरम् कर्पोम्, विनय तंदरम् कर्पोम्
वानय अलप्पोम्, कडल मीनय अलप्पोम्
चंदिरअ मण्डलत्तु, इयल कण्डु तेलिवोम्
संदि, तेरुपेरुक्कुम् सात्तिरम् कर्पोम्

மந்திரம் கற்போம் வினைத் தந்திரம் கற்போம்
வானையளப்போம் கடல் மீனையளப்போம்
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்
சந்திதெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம்.

இந்த சிந்தனைகளும், கற்றலுக்கும் கேட்டலுக்கும் அளிக்கப்படும் முக்கியத்துவமும், ஆர்வமும், சகோதரத்துவமும் எப்போதும் நம்முடன் இருக்கட்டும். இது நம்மை, இந்தியாவை, எப்போதும் வழிநடத்தட்டும்.

இத்துடன் உங்களுக்கும், உங்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் சுதந்திரதின விழாவில் மீண்டும் எனது சிறப்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.

Related Posts

error: Content is protected !!