June 7, 2023

எரிபொருள் அரசியலும், பொருளாதாரத் தேக்கமும் -ரமேஷ் கிருஷ்ணன் பாபு!

மீபத்தில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்துள்ளது. முறையே பெட்ரோல் மீது ரூ 5/-ம், டீசல் மீது ரூ 10/-ம் குறைக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் இல்லாத அளவிற்கு எரிபொருட்களின் விலை ரூ 100/- க் கடந்து வாகன ஓட்டிகளை வதைக்குள்ளாக்கிய போது, விலைக்குறைப்பை எதிர்க்கட்சிகளும், சிலக் கூட்டணிக்கட்சிகளும் கூட மத்திய பாஜக அரசைக் கேட்டுக்கொண்டர். கூடவே மூன்று மக்களவைத் இடைத் தேர்தலில் இரண்டை பரம வைரியான காங்கிரஸ் கட்சியிடமு, சிவசேனாவிடமும் இழந்தது பாஜக அரசை விழிக்கச் செய்தது. பரவலான அதிருப்தியை அரசு உணர்ந்ததால் விலைக்குறைப்பு சாத்தியமானது. மேலும் விலைக்குறைப்பு இருக்குமா? அப்படி இருந்தால் அதன் விளைவுகள் எவை? அவற்றை இப்போது பார்க்கலாம்.

விலைக்குறைப்பு வெளிவந்து சில நாட்களுக்குள் மத்திய அரசு பொதுமுடக்கக்காலத்தில் புலம் பெயர்ந்தத் தொழிலாளர்களுக்காகத் துவங்கப்பட்ட கரீப் கல்யாண் எனும் இலவச கூடுதல் உணவு தானிய வழங்கலை வரும் நவம்பர் (இம்மாதம்) 30 ஆம் தேதியுடன் நிறுத்தி விடப்போவதாக திட்டவட்டமாக அறிவித்து விட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலேயே நிறுத்துவதாக அறிவித்த நிலையில் தொடர்ந்து கொரோனாவின் இரண்டாம் அலைத் தாக்குதலால் இத்திட்டத்தைத் தொடர வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்போது நிலைமை சீரடைந்து பொருளாதாரம் சீராகிக் கொண்டிருக்கும் நிலையில் இத்திட்டத்தை நிறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்திற்காக எரிபொருட்களின் மீதான வரி மூலம் ஈட்டப்படும் வருவாயைத்தான் மத்திய அரசு சார்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இது போல 4 திட்டங்களுக்கு மத்திய அரசு எரிபொருட்கள் மீதான வரியைத்தான் சார்ந்துள்ளது. குறிப்பாக கொரோனா தடுப்பூசியை இலவசமாக நாடு முழுதும் அளிக்க இந்த வருவாயைத்தான் சார்ந்துள்ளது. அதேபோல விவசாயிகளுக்கான வருடம் ரூ 6000/- வழங்கும் திட்டத்திற்கும், உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கும், இந்த நிதியே முதன்மையானது. இதற்காக உபரி வரி ஒன்றை நிதிநிலை அறிக்கையிலேயே அறிவித்தார் நிர்மலா சீதாராமன்.

உலகளவில் எரிபொருட்களின் உற்பத்தி வளைகுடா நாடுகளிடமே பேரளவில் குவிந்துள்ளது என்பது அறிந்ததே. இவர்களுடன் ரஷ்யா, மத்திய ஆசிய நாடுகள், அமெரிக்கா ஆகியவையும் எரிபொருள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். எரிபொருட்களின் மூலப் பொருளான குரூட் ஆயில் எனப்படும் கச்சா எண்ணெய்யின் விலைதான் அனைத்து எரிபொருட்களின் விலையைத் தீர்மானிக்கிறது. இதன் உற்பத்தி குறையும் போது அல்லது உற்பத்திச் செலவு அதிகரிக்கும் போதோ இதை நிர்வகிக்கும் ‘ஓபெக்’ எனப்படும் எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பு விலையை உயர்த்துகிறது. இக்கூட்டமைப்பில் இந்தியாவிற்கு சற்று சாதகமாக நடந்து கொள்ளும் சவூதி அரேபியா, ஐக்கிய அரேபிய எமிரேட் மற்றும் குவைத் ஆகியவை பொருளாதார தாக்கத்தை கணக்கில் கொண்டே செயல்படுகின்றன. இந்த அமைப்பில் ரஷ்யாவும் இடம் பெற்றுள்ளது. அது ஐரோப்பிய நாடுகளின் கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்துத் தருகிறது. எண்ணெய் மட்டுமின்றி எரிவாயு வடிவிலும் ஏற்றுமதி செய்கிறது. சென்றாண்டு பிரான்ஸ் நாட்டில் எரிபொருள் விலையை உயர்த்திய போது பெரும் போராட்டம் வெடித்தது. ஆகையால் எரிபொருளின் விலையுயர்வு உணர்ச்சிகரமான பிரச்சினையாகவே இருக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை மத்திய அரசு மட்டுமின்றி மாநில அரசுகளும் மதிப்புக் கூட்டு வரியை எரிபொருட்களின் மீது விதிக்கின்றன. மத்திய அரசு விலைக்குறைப்பு செய்த போது மாநில அரசுகள் அனைத்தும் விலைக்குறைப்பைச் செய்யவில்லை. குறிப்பாக ஆளும் பாஜகவின் முக்கிய எதிர்ப்பாளர்களான இடது சாரிகளின் கேரள அரசு வரியைக் குறைக்க மறுத்துள்ளது. காரணம், ஏற்கனவே அதிகக் கடன் இருப்பதால் வருவாய் இழப்பை அரசினால் தாங்க இயலாது என்று கூறுகிறது. இதே தர்க்கத்தைத் தானே மத்திய அரசும் சொல்கிறது? மக்கள் நலத் திட்டங்களுக்காகத்தான் வரிக்குறைப்பை தாங்கள் செய்யவில்லை என்று மத்திய அரசின் அமைச்சர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். எரிபொருள் துறையின் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தனது சமீபத்திய பேச்சில் இதைக் குறிப்பிட்டு பேசியுள்ளார். மத்திய அரசு விதிக்கும் வரியில் சுமார் ரூ 32/- (ஒவ்வொரு லிட்டர் எரிபொருளிலும்) மக்கள் நலத் திட்டங்களுக்காக செலவழிக்கப் படுகிறது என்று சுட்டிக்காட்டியுள்ளார் அமைச்சர். மேலும் எரிபொருள் வரியை ஜி எஸ் டியின் கொண்டு வருவதற்கு மாநில அரசுகளே முட்டுக்கட்டைப் போடுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஆயினும் ஜி எஸ் டி நடைமுறைக்கு வந்தப் பிறகு மாநில அரசுகளுக்கு வரி விதிக்கும் இனங்கள் குறைந்து விட்டன. எனவே எரிபொருள் மீதான வரியை ஜி எஸ் டிக்கு மாற்ற முடியாது என்கின்றனர்.

மேலும் மது வகைகளையும் தொடர்ந்து மதிப்புக்கூட்டு வரி முறையிலேயே வைத்திருக்க விரும்புகின்றனர். எரிபொருட்களின் மீதான் வரி வருவாயக்கு அடுத்தப்படியாக மது வகைகளே அடுத்த பெரிய வருவாய் இனமாகும். மாநில அரசுகளுக்கு நிலவரி, சொத்து வரி, கனிம வளங்களின் மூலம் கிடைக்கும் வருவாய், கோயில் சொத்துக்கள் மூலம் கிடைக்கும் வருவாய் எனப் பல வரி வகைகளின் வருவாய் ஈட்டும் வாய்ப்புள்ளது. ஆனால் இவற்றை முறைப்படுத்த அவை விரும்புவதில்லை. காரணம், வாக்கு வங்கி அரசியல். மாநிலக் கட்சிகலின் உறுப்பினர்களே இந்த வரிகளைச் செலுத்த்க்கூடியவர்களாக இருந்தால் எப்படி வரியை இடுவார்கள்? சொத்துக்களின் வருமானத்தை அரசிடம் பகிர்வார்கள்? இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் இதுதான் நிலை.

சரி, அப்படியே மத்திய அரசு எரிபொருள் மீதான குறைத்து விட்டாலும் அதனால் ஜி எஸ் டி வரி வருமானம் அதிகரிக்குமா? வருமான வரி, பெரு நிறுவன வரி அதிகரிக்குமா? குறைவான எரிபொருள் விலையால நாட்டின் வளர்ச்சி அதிவேகப் பாய்ச்சலில் சென்று வரி வருவாய்களைப் பெருக்கச் செய்யுமா? இதற்கு பதில் சொல்ல சரியான தரவுகள் இல்லை. ஏனெனில் அப்படி நடக்கும் என்றால் மத்திய அரசு எப்போதோ செய்திருக்குமே? மோடியின் முழக்கமே வளர்ச்சிதானே? எதற்கு சமூக நலத் திட்டங்களுக்காக வரி வசூல் செய்ய வேண்டும்? சரி மத்திய அரசு குறைத்தாலும் கடன் சுமையால் பாதிக்கப்பட்டிருக்கும் மாநில அரசுகள் வரியைக் குறைப்பார்களா? சாத்தியமில்லை,. ஒருவேளை அதிகரிக்கலாம். அத்துடன் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கும் நிதியும் குறையவே வாய்ப்புண்டு., கூட்டிக் கழித்துப் பார்த்தால் எரிபொருள் மீதான வரிக்குறைப்பு எவ்விதமான சாதகமான மாற்றங்களைத் தரப்போவதில்லை.

பொது முடக்கத்திற்குப் பிந்தைய பொருளாதாரத் தேக்கத்தைப் போக்க மத்திய அரசு திட்டமிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருவதற்கு எதிராக அதன் வருவாய் சுருங்கக்கூடாது. மாநில அரசுகள் தங்களது சொந்த வருவாய் இனங்களை அதிகரிப்பதே அவற்றின் வளர்ச்சிக்கு உதவும்.

ரமேஷ் கிருஷ்ணன் பாபு

படம் : அபிஜித்