தை முதல் நாள்: இது அறுவடைத் திருநாளா அல்லது ஆன்மீகச் சூரிய வழிபாடா?
சங்க காலத்திலோ அல்லது பண்டைய காலத்திலோ உழவனுக்கு விழா, உழவர் பண்டிகை என ஏதுமில்லை. 18-ம் நூற்றாண்டுக்கு முன் அப்படி ஒரு விழா கொண்டாடப்பட்டதாக எந்த ஆதாரமுமில்லை. தை மாதம் அறுவடை நாள் என்பதெல்லாம் சரி, ஆனால் முப்போகம் விளைந்த மண்ணில் ஒவ்வொரு நான்கு மாதத்திற்கு ஒருமுறை அறுவடை நடந்து கொண்டேதான் இருந்தது. அதனால் இது ‘அறுவடை விழா’ எனச் சொல்லிவிடுவதிலும் அர்த்தமில்லை.
சூரிய வழிபாடே அடிப்படை
உழவுக்கும் உலக உயிர்களுக்கெல்லாம் ஆதாரமானது சூரியன் என்பதை உணர்ந்த இந்து மதம், அவரைப் பிரதானமாகக் கொண்டாடியது. உலக இயக்கத்தைக் கூர்ந்து நோக்கிய இந்து மதம் கிருமிகள் முதல் பயிர்கள், மானுடம் வரை உருவாகி வளர அடிப்படை காரணம் சூரியனே என வணங்கி நின்றது. உழவன் விழா, உழவர் திருநாள், தமிழர் திருநாள் என ஒன்றுமே நடந்த ஆதாரமில்லையே தவிர, இந்துக்களின் பிரதான வழிபாடான சூரிய வழிபாடு இருந்தது; அதற்குப் பல வகைக் காரணமும் இருந்தது.
சூரிய வழிபாடு ‘சௌமார பிரிவு’ எனப் பெரிதாக இருந்த இடம் இது. சௌராஷ்ட்ரா போன்ற பகுதிகள் அப்படித்தான் அழைக்கவும் பட்டன. வடக்கே கோனார்க்கில் இருந்து தமிழக சோழ மண்டல சூரியனார் கோவில் வரை ஆலயங்கள் உண்டு. கடலுள் மூழ்கிய பூம்புகாரிலும் இதர தென்னகப் பரப்பிலும் சூரிய வழிபாடு இருந்திருக்கின்றது.

வேதங்களில் சூரியன்
இதனை வேதங்கள் சொல்லும் வழிபாட்டிலும், தமிழ் பேசும் இந்துக்கள் படைத்த சங்க காலப் பாடல்களிலும் காணலாம். வேதங்களில் சூரியனுக்குத் தனி இடம் கொடுத்துப் போற்றப்படுகின்றது. மந்திரங்களில் சிறந்ததான காயத்திரி கூடச் சூரியனைப் போற்றித்தான் பாடுகின்றது. அகத்தியர் ராமனுக்கு அருளிய அந்த “ஆதித்ய ஹிருதயம்” எனும் ஸ்லோகத்தின் சக்தியும் புனிதமுமே மகா பெரிது.
-
ரிக் வேதம்: சூரியனை அக்னியின் முதல்வன் என்று போற்றுகிறது.
-
யஜுர் வேதம்: சகல உலகத்தையும் காப்பவன் என்று பாடிப் பணிகிறது.
-
சாம வேதம்: உலகத்தை ஒளிர்விப்பவன் என கீதம் இசைக்கின்றது.
-
சதபத பிராமணம்: சூரியனைச் சோதி பிழம்பு என்றும் தங்க ஆரங்களால் ஆன வட்டம் எனவும் வியந்து போற்றுகிறது.
பவிச புராணம், பிரம்ம புராணம், வராக புராணம், மச்ச புராணம், அக்னி புராணம், கருட புராணம், பவிசோதிர புராணம், காளிகா புராணம், மார்க்கண்டேய புராணம் ஆகிய பழம்பெரும் புராணங்களில் சூரிய வழிபாட்டின் மேன்மைகள் விவரிக்கப்படுகின்றன.
எல்லாவற்றுக்கும் மேலாகக் கண்ணன் கீதையில், “வேத சாஸ்திரத்தில் நான் சாம வேதமாகவும், பிரகாசிக்கும் பொருட்களில் நான் சூரியனாகவும் இருக்கிறேன்” எனத் தெளிவாகச் சொல்கின்றான். ராமாயணத்தில் பாடப்படும் சூரியன் புகழ் மகாபாரதத்தின் பல இடங்களிலும் (பாஞ்சாலிக்கு அவன் அட்சய பாத்திரம் கொடுத்தது வரை) பாடப்படுகின்றது.
“த்யேயஸ்ஸதா ஸவித்ரு மண்டல மத்யவர்த்தீ நாராயண ஸரஸிஜாஸன ஸந்நிவிஷ்ட கேயூரவான் மகர குண்டலவான் கிரீடீ ஹாரி ஹிரண்யவபு: த்ருத சங்கசக்ர:” – எனும் ஒரு ஸ்லோகம் சொன்னது ஆயிரம் விளக்கங்களுக்குச் சமம்.
ஞாயிறு போற்றுதும்!
இப்படி வேதங்களும் ஸ்லோகங்களும் கொண்டாடித் தனி தேவதையாகப் பாடிய அந்தச் சூரியனைச் சிலையாகவும், கோவிலாகவும் இந்து மதம் கொண்டாடியது. வாரத்தின் முதல் நாளைச் சூரியனுக்கு என குறித்த இந்து முன்னோர்கள், நாளெல்லாம் சூரியனை வணங்கிவிட்டு வேலையினைத் தொடங்கச் செய்தனர். ஞாயிற்றுக்கிழமையினை ‘ஞாயிறு’ எனும் சூரியனுக்குப் படைத்தனர். அதுதான் இந்துக்களின் வாரத் தொடக்க நாளாக இருந்தது. சில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை சூரிய விரதம் இருக்கும் காட்சிகளும் இருந்தன.
வானியல் மற்றும் அறிவியல் காரணங்கள்
பருவகால ரீதியாகவும், வானியல் ரீதியாகவும் தை மாதம் முதல் நாளையொட்டி மகர சங்கராந்தியாக இந்து மதம் இதைப் பெரிதாகக் கொண்டாட முனைந்தது. பருவகால அடிப்படையில் அது பனி நீங்கி, மழை நீங்கிச் சூரியன் வெளிப்படும் தருணம். கடந்த சில மாதங்களாக இருந்த பனியாலும் மழையாலும் சில நோய்கள் பரவும், சூரியன் மங்கிய இடத்தில் நோய்க்கிருமிகளும் பூஞ்சைகளும் வளரும். சூரியன் வரும் காலத்தில் இனி அந்த நிலை மாறும் என்பதால் உற்சாகமாகி அதனை வரவேற்கும் விழாவாக அது இருந்தது.
சூரிய ஒளி சரியாக விழாதது மருத்துவ மொழியில் “வைட்டமின் டி” குறைபாட்டை உருவாக்கும். இதனால் சூரியன் சரியாக வரத் தொடங்கியதும் அந்த வெயில் படுமாறு எல்லோரும் வெளியில் வரவேண்டும் என்பதற்காகவே பொங்கல் காலக் கொண்டாட்டங்கள் தொடங்கின.
இன்னொரு காரணம், சூரியன் மகர ராசியில் நுழையும் காலம். மகர ராசிக்கு அதிபதி சனி பகவான். சனி பகவான் என்றால் அடிதட்டு மக்களின் மனநிலைக்குக் காரணமானவர் எனப் பொருள். அந்த ராசிக்குச் சூரியன் வரும்பொழுது சில கொண்டாட்டமும் உற்சாகமும் மனரீதியாக அவர்களுக்கு அவசியம். இதனால் வீடுகளுக்கு வெள்ளை அடிப்பதும், உணர்ச்சிப் போராட்டங்களில் சிக்கிய மனதைத் திசை திருப்புதலும் அவசியமாகிறது. வீட்டின் சுவர்கள் கூட எண்ண அலைகளைத் தாங்கி நிற்பவை என்பது இந்துக்கள் நம்பிக்கை.
போகியும் இந்திர வழிபாடும்
இப்படித் தொடங்கிய சூரிய விழாவின் முந்தைய நாள் இந்திரனுக்கானது என்பது மரபு. இந்திர வழிபாடு பூம்புகார் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் இருந்தது. சுகமும் போகமும் தருபவன் அவன்தான் என்பதால் அவனுக்கு நன்றி சொல்லும் நாளே ‘போகி’ என்றானது. மறுநாள் மகர ராசிக்கு வரும் சூரியனை வரவேற்று வழிபாடுகள் நடக்கும். உணவு, உடை, பால், இனிப்பு, ஆடுமாடு என எல்லாம் சூரியனிடம் இருந்து வந்ததை காட்டி நன்றி தெரிவிக்கும் நாள் அது.
தமிழ் இலக்கியங்களில் சான்றுகள்
தென்னக மக்களும் சூரியனைப் பல வகையில் வணங்கியதை சங்கப் பாடல்கள் சொல்கின்றன. நக்கீரர் திருமுருகாற்றுப்படையில்: “உலகம் உவப்ப வலனேர்பு திருதரு பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாங்கு ஓவற விமைக்கும் சேணவிளங் கவிரொளி” – என்று செவ்வேல் குமரனுக்குப் பரிதியை உவமை கூறுகின்றார்.
தொல்காப்பியம் சூரிய வழிபாட்டைச் சொல்கின்றது: “கொடிநிலை கந்தழி வள்ளி யென்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றுங் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே” (தொல்.பொருள்.புறம்,நூ-33)
நச்சினார்க்கினியர், சூரியனை “எல்லா நிறத்திற்கும் பொதுதெய்வம்” எனப் பாடி மகிழ்கின்றார். சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் “ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும்” என்கிறார். மேலும் “பகல் வாயிலுச்சிக் கிழான் கோட்டம்” எனக் கோவில் பெயரைச் சுட்டுகிறார். உச்சிக்கிழான் என்பவன் சூரியன். அடியார்க்கு நல்லார் உரையும் இதையே உறுதிப்படுத்துகிறது. அப்பர் சுவாமிகள் “அருக்கன் பாதம் வணங்குவர்” என்று சூரியனைப் போற்றுகின்றார்.
ஆக, பொங்கல் என்பது அறுவடை நாள் அல்ல, உழவர் திருநாள் அல்ல. அப்படிச் சொல்லப்பட்டதெல்லாம் இந்துக்களின் மரபை உடைக்கவும் குழப்பவும் சொல்லப்பட்ட ஏற்பாடுகள். பிரிட்டிஷ் காலத்தில்தான் அவை உருவானதைக் கவனிக்கலாம். இது உண்மையில் சூரிய வழிபாடு.
அந்த வழிபாட்டைக் கொண்டாடும் எல்லா இந்துக்களுக்கும் “மகர சங்கராந்தி” வாழ்த்துக்கள். சூரியன் போல் உங்கள் வாழ்வும் வளமும் பிரகாசிக்கவும், எந்நிலையிலும் பலன் எதிர்பாராது கடமை மட்டும் செய்யும் சூரியன் போலத் தேசத்துக்கான, இந்து மதத்துக்கான கடமைகளைச் செய்யச் சூரிய பகவான் எல்லா நலனையும் அருளட்டும்.
சூரிய பகவான் மந்திரம்:
“ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே பாச ஹஸ்தாய தீமஹி தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்
ஓம் பாஸ்கராய வித்மஹே திவாகராய தீமஹி தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்”


