ஓடிய பஸ்ஸில் தீ: குழந்தைகள் உள்பட 18பேர் பலி – பாகிஸ்தானில் அதிர்ச்சி சம்பவ வீடியோ!

ஓடிய பஸ்ஸில் தீ: குழந்தைகள் உள்பட 18பேர் பலி – பாகிஸ்தானில் அதிர்ச்சி சம்பவ வீடியோ!

பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியில் இருந்து ஹைதராபாத் நோக்கி நேற்றிரவு தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து நூரியாபாத் என்ற பகுதியை அடைந்த போது பேருந்தின் ஏர் கண்டிஷன் யூனிட்டில் திடீரென தீப்பிடித்ததாகக் கூறப்படுகிறது.

முதலில் புகை ஏற்பட்ட நிலையில், மெல்ல தீவிரமாக தீ பரவத் தொடங்கியுள்ளது. தீப்பற்றியதை அறிந்து முதலில் விழித்துக்கொண்ட பயணிகள் பேருந்து கண்ணாடிகளை உடைத்து தப்பிக்க முயற்சித்துள்ளனர். பேருந்தில் பயணித்த சிலர் சமயோசிதமாகத் தப்பி பிழைத்த நிலையில், தீவிபத்தில் சிக்கி 18 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் பல குழந்தைகளும் அடக்கம் என முதல் கட்ட தகவல் தெரிவிக்கின்றது.பேருந்தில் 35 பேர் பயணித்த நிலையில், சம்பவத்தில் சிக்கி காயமடைந்த பலரும் ஜம்ஷாரோ என்ற பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி வேறு இடத்திற்கு பலர் குடியேறும் சூழல் ஏற்பட்டது. அவ்வாறு குடியேறிய மக்கள் தான் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல இந்த பேருந்தில் பயணித்துள்ளனர்.

பாகிஸ்தானில் சாலை விபத்துகள் அதீத வேகம், மோசமான சாலை கட்டுமானம், காலாவதியான வாகன பயன்பாடு போன்ற காரணங்களால் தான் ஏற்படுகிறது. 2017ஆம் ஆண்டு அந்நாட்டில் எண்ணெய் டேங்கர் வாகனங்களில் மோதி ஏற்படுத்திய தீவிபத்தில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்பதும் நினைவு கூறத்தக்கது.

error: Content is protected !!