வேலைப் பார்க்க விடுங்கப்பூ – புரொடியூசர்ஸ் கோரஸ் – வீடியோ
கொரோனா வைரஸ் தாக்கத்தை தொடர்ந்து கடந்த 50 நாட்களுக்கும் மேலாக தமிழ்த் திரைப் படத் துறையில் படபிடிப்பு உள்ளிட்ட அனைத்து வேலைகளும் முடங்கிக் கிடக்கின்றன. தியேட்டர்களும் மூடப்பட்டு இருக்கின்றன இதனால் திரைப்பட தயாரிப்பாளர்கள் கடும் நெருக்கடிக்கும் நஷ்டத்திற்கும் ஆளாகி உள்ளனர்.இந்நிலையில் நேற்று கேரள அரசு திரைப்பட போஸ்ட் புரடக்சன் வேலைகளை தொடங்கலாம் என்று அனுமதி கொடுத்தது. இதைத் தொடர்ந்து தமிழ் தயாரிப்பாளர்கள் தனஞ்ஜெயன் , சிவா உள்ளிட்ட சிலர் இதே கோரிக்கையை வைத்து அமைச்சர் கடம்பூர் ராஜூவை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளனர்.
அம்மனுவில், “தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களின் பணிவான வணக்கம். தமிழகத்தில் ஊரடங்கு சட்டம் அமலுக்கு வரும் முன்பே, தமிழ் திரைப்படத்துறை படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்டப் பணிகளை 16.3.2020 முதல் அமல்படுத்தி தற்போது 50 நாட்களுக்கு மேலாக திரைப்படத் துறை சம்பந்தப்பட்ட எந்த வேலைகளும் நடக்கவில்லை. 50 படங்களுக்கு மேல் இதனால் தடைப்பட்டு, ஏறக்குறைய 500 கோடி ரூபாய் முதலீடு முடங்கியுள்ளது. 50க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரம் இதனால் கேள்விக்குறியாக மாறியுள்ளது.
சென்னை நகரம் சிவப்பு மண்டலமாக இன்னும் இருப்பதால், 50 முதல் 100 பேர் செயல்படும் படப்பிடிப்பு செய்வதற்கு அனுமதி கொடுக்க முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் படப்பிடிப்பு இல்லாத பணிகளான இறுதிக்கட்டப் பணிகளுக்கு அனுமதி வழங்கினால், ஏற்கெனவே படப்பிடிப்பு முடிந்து இந்தப் பணிகளுக்காக தற்போது 50 நாட்களாகக் காத்திருக்கும் தயாரிப்பாளர்கள் அவற்றை முடித்து, படங்களை தயார் செய்ய முடியும்.
தற்போது 11 தொழிற்துறைகளுக்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கியிருப்பதை போன்று, திரைப்படத்துறைக்கும் இறுதிக்கட்டப் பணிகள் செய்வதற்கு, ஏற்கெனவே தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் தங்களிடம் கேட்டுக்கொண்டபடி, நிபந்தனைகளோடு அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இதன் மூலம், அந்தப் பணிகளில் உள்ள தொழிலாளர்களுக்கும் வேலை கிடைக்கும். கேரளா அரசாங்கமும் இந்தப் பணிகளுக்கு நேற்று முதல் அனுமதி அளித்துள்ளதை தங்களின் பார்வைக்குச் சமர்ப்பிக்கிறோம்.
தங்களின் அனுமதியைக் கோரும் இறுதிக்கட்டப் பணிகள்:
படத்தொகுப்பு (Editing) – அதிகபட்சம் முதல் 4 பேர் 5 பணியாற்றும் அலுவலகம்.
ஒலிச்சேர்க்கை (Dubbing) – அதிகபட்சம் 4 முதல் 5 பேர் பணியாற்றும் அலுவலகம்.
கம்ப்யூட்டர் மற்றும் விஷூவல் கிராபிக்ஸ் (VFX/CGI) – 10 முதல் 15 பேர் பணியாற்றும் அலுவலகம்.
டி.ஐ. (DI) எனப்படும் நிற கிரேடிங் – அதிகபட்சம் 4 முதல் 5 பேர் பணியாற்றும் அலுவலகம்.
பின்னணி இசை (Re-Recording) – அதிகபட்சம் 5 பேர் பணியாற்றும் இடம்.
ஒலிக் கலவை (Sound Design/Mixing) – அதிகபட்சம் 4 முதல் 5 பேர் பணியாற்றும் அலுவலகம்.
மேற்கூறிய இறுதிக்கட்டப் பணிகளை நாங்கள் சமூக இடைவெளியுடனும், முக கவசம் மற்றும் சானிடைசர் உபயோகித்தும், மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் அனைத்து கட்டுப் பாடுகளையும் பின்பற்றி சுகாதாரமான முறையில் செய்வோம் என்று தயாரிப்பாளர்களாகிய நாங்கள் உறுதி கூறுகிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.