மகனுக்கு கட்டளையிடுங்க தாயே!- மோடி அம்மாவுக்கு விவசாயி கடிதம்!

மகனுக்கு கட்டளையிடுங்க தாயே!- மோடி அம்மாவுக்கு விவசாயி கடிதம்!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து 60 நாள்களுக்கும் மேலாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே ந்டைபெற்ற 11 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன. மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறும் வரை போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும் என விவசாயிகள் உறுதியாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், விவசாயி ஒருவர் பிரதமர் நரேந்திர மோடியின் தாயாருக்கு போராட்டம் தொடர்பாக எழுதியுள்ள கடிதம் பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஃபெரோஸ்பூர் பகுதியைச் சேர்ந்த ஹர்பீத் சிங் என்ற விவசாயி பிரதமர் மோடியின் தாயாருக்கு இந்த உணர்ச்சிமிக்க கடிதத்தை எழுதியுள்ளார். ஹர்பீத் சிங் எழுதியுள்ள கடிதத்தில், ’நான் இந்தக் கடிதத்தை கனமான இதயத்துடன் எழுதுகிறேன். மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களால் தேசத்துக்கும் உலகத்துக்கும் உணவளிக்கும் விவசாயிகள் கடுமையான இந்த குளிர்காலத்திலும் டெல்லியின் சாலைகளில் தூங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்பதை நீங்கள் அறிவீர்கள். வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் பெண்கள் என பலரும் இதில் அடங்குவர்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அந்த கடிதத்தில், ’டெல்லியில் நிலவும் காலநிலை, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை நோய்வாய்க்கு உட்படுத்துகிறது. இது மிகுந்த கவலையை அளிக்கிறது. டெல்லியின் எல்லைகளில் நடைபெற்று வரும் இந்த அமைதியான போராட்டங்களுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களின் உத்தரவால் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்கள்தான் முக்கிய காரணமாக உள்ளது. நான் இந்தக் கடிதத்தை மிகுந்த நம்பிக்கையுடன் எழுதுகிறேன். உங்களது மகன் நரேந்திர மோடி நாட்டினுடைய பிரதமர். அவரால் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய முடியும். எனவே, இந்த சட்டங்களை திரும்பப்பெற நீங்கள் உங்களது மகனிடம் வலியுறுத்த வேண்டும். தாயால் மட்டுமே மகனுக்கு கட்டளையிட முடியும். இதனால், முழு நாடும் உங்களுக்கு நன்றி தெரிவிக்கும்” என்றும் தெரிவித்துள்ளார்.

Related Posts

error: Content is protected !!