டைரக்டர் ஷங்கரின் கற்பனையை நிஜமாக்கிய எலான் மாஸ்க் – வீடியோ!
சமீபத்தில் எலான் மஸ்க் தலைமையிலான செயற்கை நுண்ணறிவு (AI) ஸ்டார்ட்அப் நிறுவனமான எக்ஸ்.ஏஐ (xAI) ஆனது அமெரிக்காவில் உள்ள அதன் பயனர்களுக்காக க்ரோக் ஏஐ (Grok AI) எனும் சாட்போட்டை அறிமுகம் செய்தது. இப்போது இந்த சாட்போட் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் பல நாடுகளில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனாலும் எக்ஸ் பிரீமியம்+ திட்டத்திற்கு பணம் செலுத்தியவர்கள் மட்டுமே, தங்கள் எக்ஸ் கணக்கிலிருந்து இந்த ஏஐ சாட்போட்டை பயன்படுத்த முடியும். எக்ஸ் பிரீமியம்+ பயனர்கள் தங்களின் விண்டோஸ், ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸில் இருக்கும் எக்ஸின் மெனுவில் இந்த க்ரோக் ஏஐ சாட்போட்டை காணலாம் என்ற தகவலே பலரும் போய் சேரும் முன்னால் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் தனது புதிய மனித ரோபோவைஅறிமுகம் செய்து இந்த மேம்படுத்தப்பட்ட ரோபோ வேகமாக நடக்கும், நடனம் ஆடும், மற்றும் முட்டைகளை வேக வைக்கும் என்று கூறப்பட்டுள்ள காணொளி ஒன்றினைப் பகிர்ந்துள்ளது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஆப்டிமஸ் ஜென் 2 (Optimus Gen 2) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ இதற்கு முன் டெஸ்லா அறிமுகம் செய்த ரோபோக்களை விட அதிக திறன்களைக் கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் மேம்படுத்தப்பட்ட தொழிநுட்பங்கள் மூலம் வடிவமைக்கப்பட்டு மனிதன் போலவே காட்சியளிக்கும் இந்த ரோபாவின், சமன் திறன் (Balance control) மேம்படுத்தப்பட்டுள்ளது. தயங்கி தயங்கி நடந்து வந்த ஆப்டிமஸ் இப்போது விறுவிறுவென நடக்கும் காணொளி பலரை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. முட்டை ஒன்றினை மிருதுவாகக் கையாளும் திறனையும் அந்தக் காணொளியில் காண முடிகிறது.
டெஸ்லா பாட் என மக்களால் அழைக்கப்படும் இந்த ஆப்டிமஸ் ரோபோ, வெகுநாட்களுக்கு மக்களிடையே எந்த ஆர்வத்தையும் ஏற்படுத்தாமல் இருந்தது. அதற்கு காரணம் 2022-ல் அரையும் குறையுமாக காட்சிப்படுத்தப்பட்ட அந்த ரோபோவின் வடிவமைப்புதான். முழுதாக வடிவமைக்கப்படாத அந்த அறிமுகம், மக்களிடையே பெறும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் இணையத்தில் கேளிப் பொருளாக வலம் வந்தது. இப்போது வெளியிட்டுள்ள இந்தக் காணொளியில் அனைத்து கிண்டல்களையும் விமர்சனங்களையும் வாயடைக்கச் செய்துள்ளது டெஸ்லா. எலான் மஸ்க் தனது ரோபோ தொழில்நுட்பம் முழுமையாக வெற்றியடைந்த பின்னர், மனிதர்கள் செய்ய விரும்பாத எல்லா வேலைகளையும் இந்த ரோபோ திறப்பட செய்யும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், டெஸ்லாவின் மூத்த மென்பொருள் பொறியாளர் அந்தக் காணொளியில் எந்த வீடியோ எப்எக்ஸ் (VFX)-ம் பயன்படுத்தப் படவில்லை. ஆப்டிமஸ் செய்யும் அனைத்தும் உண்மையில் டெஸ்லா கண்ட முன்னேற்றமே என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். சமீபத்தில் கூகுள் நிறுவனம் தனது ஜெமினி செய்யறிவு தொழில்நுட்ப காணொளியில் வீடியோ எப்எக்ஸ் பயன்படுத்தி சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில் இந்த உத்தரவாதத்தை அளித்துள்ளார். காணொளியின் இறுதியில் ஆப்டிமஸ் ஜென் 2 ரோபோ நடமாடுவது அனைவர் மனதிலும் டெஸ்லா ரோபோ மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
ஆனால் இதற்கு நேர்மாறாக கூகுள் பார்ட் மற்றும் சாட் ஜிபிடி ஆகியவை இணையத்தில் உள்ள தகவல்கள், புத்தகங்கள் மற்றும் விக்கிபீடியா போன்றவற்றிலிருந்து தகவல்களை ஒருங்கிணைத்து நமக்குத் தருகிறது. மேலும், இந்தியாவில் எக்ஸ் பிரீமியம்+ திட்டத்திற்கு மாதம் ரூ. 1,300 செலவாகும். அதுவே வருடத்திற்கு ரூ.13,600 செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.