ட்விட்டரில் இருந்த பறவையை துரத்திவிட்டு நாய் முகத்தை லோகோவாக்கினார் எலான் மஸ்க்! .

சர்வதேச பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் அக்டோபர் 27, 2022 அன்று டிவிட்டரை பணம் கொடுத்து வாங்கி தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றார். அதில் இருந்து ட்விட்டரில் அவர் அவ்வப்போது பல மாற்றங்களை கொண்டு வருகிறார். பணி நீக்கம், ப்ளூ டிக் வசதிக்கு கட்டணம், செலவீனக் குறைப்பு நடவடிக்கை என பல அதிரடிகளை செய்து வருகிறார். மஸ்க்கின் நடவடிக்கைக்கு உலக முழுவதும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் எலான் மஸ்க், தற்போது உச்சபட்சமாக ட்விட்டரின் ஆஸ்தான அடையாமான நீலக் குருவி லோகோவை மாற்றி மீம்ஸ்களில் பயன்படுத்தும் பிரபலமான ‘Doge’ (நாய்) புகைப்படத்தை லோகோவாக மாற்றியுள்ளார். இது உலகம் முழுவதும் வைரலாகி பேசு பொருளாகி உள்ளது.
இந்த நாய் புகைப்படம் டோஜ்காயின் எனப்படும் கிரிப்டோகரன்சியின் லோகோவாகும். இந்த நாய் ஜப்பான் நாட்டின் பிரபலமான நாய் இனமான ஷிபா இனு வகையைத் தேர்ந்ததாகும். டிவிட்டர் லோகோ மாற்றப்பட்டதையடுத்து டோஜ்காயின் கிரிப்டோகரன்சியின் மதிப்பு மலமலவென உயர்ந்தது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகப்படியாக 30 சதவீதம் வரையில் இதன் மதிப்பு உயர்ந்ததாக கூறப்பட்டுள்ளது.
ஏன் இந்த திடீர் மாற்றம்?
@WSBChairman என்ற ட்விட்டர் பயனர் ஒருவர் முன்பு எலான் மஸ்க்கை டேக் செய்து நீங்கள் டிவிட்டரை வாங்கிவிட்டு அதன் லோகோ- வை டோஜ்காயின் ஆக மாற்றுங்கள் என்று பதிவிட்டிருந்தார். அதற்கு அப்போது மஸ்க் பதிலளித்தும் இருந்தார்.
இந்தநிலையில் தான் தற்போது ட்விட்டர் லோகோ மாற்றப்பட்டு, அந்த பழைய ஷேட்டை குறிப்பிட்டு (As promised) என உறுதி அளித்தபடி செய்ததாக கூறியுள்ளார்.
போன் செயலியில் இல்லை
எனினும் இந்த லோகோ மாற்றம் போன் ஆப் ட்விட்டரில் செயல்படுத்தப்பட வில்லை. Desktop கணினி, லேப்டாப்பில் ட்விட்டர் பயன் படுத்துபவர்களுக்கு மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, இந்த லோகோ மாற்றம் எவ்வளவு நாள் என்பது குறித்து தகவல் இல்லை. எலான் மஸ்க் நீண்ட நாட்களாகவே டோஜ்காயின் கிரிப்டோகரன்சிக்கு பல முறைகளில் ஆதரவு தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
பலரும் மீம்ஸ்களுக்கு உபயோகிக்கும் ஷிபா இனு (சீம்ஸ்) முகத்தை வேடிக்கையான வகையில் டிவிட்டர் லோகோவை எலான் மஸ்க் மாற்றியுள்ளதால் இது குறித்து பயனர்கள் பலரும் எலான் மஸ்க்கை டேக் செய்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.