கடம்பூர் பேரூராட்சி தேர்தல் ரத்து: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

கடம்பூர் பேரூராட்சி தேர்தல் ரத்து: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

டம்பூர் பேரூராட்சி தேர்தலில் விதிமீறல் நடந்துள்ளதால் அனைத்து வார்டுகளிலும் தேர்தலை ரத்து செய்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளையும், தேர்தல் விதிமுறைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. இதில் 1,605 ஆண் வாக்காளர்கள் 1,690 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 295 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1, 2 மற்றும் 11 வார்டுகளில் தலா இருவர் மட்டுமே வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில் தி.மு.க.வை சேர்ந்த ஜெயராஜ், சண்முகலட்சுமி, சின்னத்துரை ஆகியோர் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் முன்மொழிந்தவர்கள் கையெழுத்து போலியானது என தெரிய வந்ததால், பரிசீலனையில் அவை நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து சுயேட்சை வேட்பாளர்களான எஸ்.வி.எஸ்.பி. நாகராஜா, ராஜேஸ்வரி மற்றும் சிவகுமார் ஆகியோர் போட்டியின்றி தேர்வாகும் சூழல் உருவானது. மற்ற 9 வார்டுகளுக்கு மட்டும் தேர்தல் உறுதியானது.

இதையடுத்து 1, 2 மற்றும் 11 வார்டுகளில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர்களான நாகராஜா, ராஜேஸ்வரி மற்றும் சிவகுமார் ஆகியோர் கடம்பூர் பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களுடன் திரண்டு வந்து தாங்கள் போட்டியின்றி தேர்வானதாக அறிவிப்பு செய்ய வேண்டும். அதற்கான சான்றிதழை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடம்பூர் பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி சுரேஷ் குமாரிடம் கோரிக்கை வைத்தனர்.

உரிய பதில் கிடைக்காத காரணத்தால் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் அதிகாரிகளை 8 மணி நேரம் சிறைப்பிடித்தனர். இதனால் அப்பகுதியில் அசாதாரண சூழல் உருவானது. தேர்தல் நடத்தும் அதிகாரிகளை கண்டித்து மக்கள் தொடர்ந்து கண்டன கோஷமிட்டனர். உடனே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் 3 டிஎஸ்பிக்கள் 5 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட போலீசார் கடம்பூரில் முகாமிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நள்ளிரவு ஒரு மணியளவில் கடம்பூர் பேரூராட்சி அலுவலகத்தில் மாநிலத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவு நகல் நோட்டீஸ் போர்டில் ஒட்டப்பட்டது. அந்த அறிவிப்பில், மாநில தேர்தல் ஆணையத்தால் சொல்லப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளையும் தேர்தல் விதிமுறைகளையும் பின்பற்றாத காரணத்தினால் கடம்பூர் முதல் நிலை பேரூராட்சியில் அனைத்து வார்டுகளுக்கும் தேர்தல் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளும்படி தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு ஆணையிடப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட கடம்பூர் முதல் நிலை பேரூராட்சி தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து காலை 10 மணி முதல் இரவு 1 மணி வரை நீடித்த 13 மணிநேரம் போராட்டம் முடிவுக்கு வந்தது.

error: Content is protected !!