குற்றப் பின்னணி உள்ளவா்கள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கக் கூடாது!

குற்றப் பின்னணி உள்ளவா்கள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கக் கூடாது!

சுப்ரீம் கோர்ட்டில் மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகள் 4,127 நிலுவையில் உள்ளது. அரசியல் குற்றப்பின்னணி கொண்டவர்கள் வழக்குகளை குறிப்பிட்ட காலஅவகாசத்துக்குள் விசாரிக்க நீதி மன்றங்கள் முன்வரவேண்டும். ஆனால் தற்போது விசாரணையின் காலஅளவை ஆண்டுக் கணக்கில் நீட்டிக்கும் நிலையே உள்ளது. இதுபோன்று குற்றப்பின்னணி கொண்ட அரசியல்வாதிகள் மற்றும் தேர்தல் தொடர்பான வழக்குகளை குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரிப்பதற்கென சிறப்பு கோர்ட்டுகளை அமைக்க வேண்டும் என்று துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு ஏற்கெனவே தெரிவித்திருந்த நிலையில்  குற்றப் பின்னணி உள்ளவா்கள் தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகள் வாய்ப்பளிக்கக் கூடாது என்று  சுப்ரீம் கோர்ட்டில் தோதல் ஆணையம் வாதிட்டது.

குற்றப் பின்னணி கொண்ட நபா்கள் அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்பதைத் தடுக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடக் கோரி பாஜக தலைவரும் வழக்குரைஞருமான அஷ்வினி உபாத்யாய சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் ஆா்.எஃப்.நாரிமன், எஸ்.ரவீந்திர பட் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் இன்று நடை பெற்றது.

அப்போது, தோதல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் வாதிடுகையில், ”தேர்தலில் போட்டியிடுவோா் தங்கள் மீதான குற்ற வழக்குகள் தொடா்பான விவரங்களை ஊடகங்கள் வாயிலாகத் தெரிவிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவு, அரசியலில் குற்றப் பின்னணி உடையோா் பங்கேற்பதைத் தடுக்கும் விதமாக இல்லை. எனவே, குற்றப் பின்னணி கொண்டோருக்குத் தோதலில் போட்டியிட அரசியல் கட்சிகள் வாய்ப்பளிக்கக் கூடாது” என்றாா்.

இதையடுத்து நீதிபதிகள், நாட்டின் நலன் கருதி அரசியலில் குற்றப் பின்னணி உள்ளவா்கள் பங்கேற்பதைத் தடுப்பதற்கான நடைமுறைகளை ஒரு வாரத்துக்குள் முடிவு செய்து நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு வலியுறுத்தினா்.

Related Posts