இனிமேல்தான் அதீத பக்குவம் தேவை எடப்பாடி பழனிசாமிக்கு….!
நல்லதோ,கெட்டதோ பாஜக கூட்டணியிலிருந்து.. வெளியேறும் நிலைக்கு அதிமுக -தள்ளப்பட்டுள்ளது என்பதே உண்மை. இனிமேல் தான் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மிகுந்த கவனத்தோடும், பக்குவத்தோடும் அடி எடுத்து வைக்க வேண்டும். அதிமுகவை பொறுத்தவரை மறைந்த முதல்வர் எம்ஜிஆர் அவர்கள் உருவாக்கிய இயக்கம். மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களால் வளர்த்தெடுத்த ஒரு இயக்கம். தமிழகத்தில் குக்கிராமங்கள் வரை வேரூன்றி இருக்கக்கூடிய , ஒரு கோடி தொண்டர்களை கொண்ட இரண்டு மாபெரும் இயக்கங்களில் ஒன்று அதிமுக மற்றொன்று திமுக. ஆளுங்கட்சியாக இருக்கும் பொழுது இயக்கத்தையும் கட்சியினரையும் அரவணைத்து செல்வது என்பது எளிது. ஆனால் எதிர்க்கட்சி ஆக இருக்கும் போது கட்சியை வழிநடத்துவதும் , நிர்வாகிகளை தக்க வைப்பதும், ஆளுங்கட்சி எதிரான அரசியலை முன்னெடுப்பதும் ஒரு கலை மட்டுமல்ல… கடினமான சவாலும் கூட.!
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவுக்குப் பிறகு இன்று வரை எடப்பாடி பழனிசாமி எடுத்த அனைத்து நடவடிக்கைகளிலும் அவர் ஆல் பாஸ் ஆகிவிட்டார் என்பதே உண்மை. இதனை அவரது எதிரிகளே ஒப்பு கொள்வார்கள்.. ( சிலவற்றில் மத்திய பாஜக அரசோடு கைகோர்த்து சாதுரியமாக சில காய்களையும் நகர்த்தி விட்டார்) .அதிமுகவில் தலை(வ)வியாக உருவெடுத்த சசிகலா அவர்களை ஓரம் கட்டியது, அதிமுகவை உரிமை கொண்டாடிய டிடிவி தினகரன் அவர்களை தனி கட்சி துவங்கும் அளவிற்கு வெளியேற்றியது , அடுத்ததாக அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்று திக்கு தெரியாத அளவிற்கு திண்டாடி கொண்டிருக்கும் ஓபிஎஸ் அவர்களை கட்சியிலிருந்து அப்புறப்படுத்தி ஒட்டு மொத்தமாக பொதுச் செயலாளர் என்று தன்னை பிரகடனப்படுத்தி, தலைவராக முடி சூட்டிக் கொண்டது உள்பட பல்வேறு நடவடிக்கைகளில் எடப்பாடி பழனிச்சாமி இதுவரை தேர்ச்சி ஆகிவிட்டார் என்பதே மறுக்க முடியாத உண்மை…!
தமிழக பாஜகவை பொறுத்தவரை ஆளுநராக இருக்கும் தமிழிசை சௌந்தரராஜன் தலைவராக இருக்கும் பொழுது ஓரளவிற்கு தமிழகம் எங்கும் பரவலாக பாஜக வளர்ச்சி குறித்து பேசப்பட்டது. அதன் பிறகு தற்போது மத்திய அமைச்சராக இருக்கும் எல் முருகன் அவர்கள் தலைவராக இருந்த பொழுது தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த அனைவரையும் கட்சிக்கும் உள்ளே கொண்டு வந்து தமிழக பாஜகவை பேசு பொருளாக உருவாக்கினார். அடுத்து வந்த அண்ணாமலை அவர்கள் பாஜகவை தமிழகத்தில் எதிர்க்கட்சி வரிசையில் பாஜகவை அமர்த்தி விட்டார் என்பதும் உண்மை.
ஆளுங்கட்சியான திமுகவுக்கு எதிராக அரசியல் களமாடுவதில் அண்ணாமலை அவர்கள் முதலிடத்திலும், நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இரண்டாவது இடத்திலும் வலம் வருகிறார்கள் . அப்படியானால் எடப்பாடி என்ன ஆச்சு என்று கேள்வி எழக்கூடும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை பொறுத்தவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக குருசேத்திர போரிலே இருந்தது போல கட்சியை காப்பாற்ற நீதிமன்றம், தேர்தல் ஆணையம், பொதுக்குழு என போராடி, ஒரு வழியாக ஓ.பி.எஸ். அவர்களை கழற்றி விட்டுவிட்டு, ஒற்றை தலைமையாக உருவெடுக்க கடின முயற்சிகள் மேற்கொண்டு தனது பலத்தை நிரூபித்து அதிமுகவை தக்க வைத்துள்ளார்.
இந்த நேரத்தில் தான் அண்ணாமலை அவர்களின் அதிரடி பேச்சும்,மத்திய அமைச்சர் அமித் ஷா அவர்களின் புறக்கணிப்பும் அதிமுகவை புதிய வழியை ,(வலியை ) தேர்ந்தெடுக்க வேண்டிய நிலைக்கு அதிமுக வந்துள்ளது.1. அதே வேளையில் அண்ணாமலை நாடாளுமன்றத் தேர்தல் வரை அமைதியாக இருந்துவிட்டு அதன் பிறகு தனது அரசியல் காய்களை நகர்த்தி இருந்தால் பாஜகவுக்கு வரும் தேர்தலில் இன்னும் பலம் சேர்த்து இருக்கும்.
ஏதோ கொஞ்சம் அவசரப்பட்டு விட்டார் அண்ணாமலை என்றே தோன்றுகிறது . இந்த நேரத்தில் தான் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நிதானமாக சாதூர்யமாக செயல்பட்டு பக்குவமான அரசியலை கையாள வேண்டும். குறிப்பாக பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம், தமிழ் மாநில காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்ற கட்சிகளை தங்களது கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான காய்களை நிர்வாக நகர்த்த வேண்டும்… ! இன்னும் சொல்லப்போனால் நாம் தமிழர் கட்சியுடன் கை கோர்க்கவும் அதிமுக தயாராக வேண்டும். இது மட்டுமல்லாமல் புதிதாக அரசியல் களத்தில் குதிக்கவிருக்கும் நடிகர் விஜய் மன்றத்தையும் அரவணைத்துச் செல்லும் சூழலை மேற்கொள்ள வேண்டும்.
கடந்த முறை தேமுதிக டிடிவி தினகரன் புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளை கூட்டணிக்கல் கொண்டுவர தவறியதன் காரணமாக திமுக அரியணையில் ஏறுவதற்கு எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதமும் ஒரு காரணம் ஆகிவிட்டது என்பதே உண்மை. ஆனால் இந்த முறை நாடாளுமன்ற தேர்தல் தானே என்று மெத்தனமாக இல்லாமல் அடுத்த வரும் சட்டமன்ற தேர்தலுக்கான அடித்தளமாக இந்த தேர்தலை மனதில் கொண்டு எடப்பாடி களம் இறங்கினால் அதிமுகவை கரைசேர்க்க முடியும்.அதிமுக தொண்டர்களை இன்னும் உற்சாகப்படுத்த எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தொகுதிகள் தோறும் மாநாடு நடத்த வேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறார்
அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர பகைவனும் இல்லை என்பதனை மனதில் கொண்டு சூழலுக்கு ஏற்றால் போல் எடப்பாடியார் தனது அடியை எடுத்து வைத்தால் அதிரடியாக இருக்கும்.இல்லையெனில். சறுக்கலை சந்திக்க நேரிடலாம்….!
வி.எம். சுப்பையா
ஊடகவியலாளர், சென்னை .