June 3, 2023

கிரானைட் முறைகேடு வழக்கு ;துரை தயாநிதிக்கு சொந்தமான ரூ.40.34 கோடி சொத்துகள் முடக்கம்!

கடந்த சில மாதங்களாக நம் ஜனங்க மறந்திருந்த வழக்குகளில் ஒன்றான  கிரானைட் சுரங்க முறைகேடு விவகாரம் தொடர்பாக மு.க.அழகிரி மகன் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான சொத்துக்களை அமலாக்கத் துறை இன்று (ஏப்ரல் 24) முடக்கியுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரனும், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகனுமான துரை தயாநிதி மதுரையில் ஒலிம்பஸ் கிரானைட் என்ற பெயரில் ஒரு தனியார் நிறுவனத்தை நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தின் மூலம் மதுரை மாவட்டம் கீழவளவில் தமிழக கனிமவளத் துறைக்குச் சொந்தமான இடத்தை குத்தகைக்கு எடுத்து கிரானைட் கற்களை வெட்டி எடுத்து விற்று வந்தார்.

இதில் அந்த நிறுவனம் அரசின் விதிமுறைகளை மீறியும் கால்வாய் மற்றும் புறம்போக்கு இடங் களிலும் கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததாகப் புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக அரசு அமைத்த குழு விசாரணை செய்தது. விசாரணையில் அந்த நிறுவனத்தின் மீதான புகார் உறுதி செய்யப்பட்டது. அரசுக்குச் சொந்தமான இடங்களில் முறைகேடாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததில் ரூ.257 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருப்பதும் தெரியவந்தது.

இது குறித்து கீழ வளவு போலீஸார், துரை தயாநிதி உள்ளிட்ட 15 பேர் மீது கடந்த 2012-ஆம் ஆண்டு குற்ற வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த 2017-ஆம் ஆண்டு இந்த நீதிமன்றத்தில் துரை தயாநிதி உள்பட 15 பேர் மீது 5191 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

ரூ.40.34 கோடி சொத்து முடக்கம்: இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக, சட்ட விரோத குவாரி நடத்தி, சட்டவிரோதமாகப் பணம் ஈட்டியதால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் சொத்துகளை முடக்குமாறு தமிழக காவல்துறை அமலாக்கத் துறைக்கு பரிந்துரை செய்தது.

இதை அடுத்து இதுதொடர்பாக அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில், “ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனத்துக்கு சொந்தமாக மதுரை, சென்னை ஆகிய இடங்களிலுள்ள நிலம், கட்டிடங்கள், வங்கியிலுள்ள வைப்புத் தொகை உள்ளிட்ட 40.34 கோடி மதிப்புள்ள 25 அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அமலாக்கத் துறையால் முடக்கப்பட்டுள்ளது. கிரானைட் சுரங்க முறைகேடு விவகாரம் தொடர்பாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மேற்குறிப்பிட்ட சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒலிம்பஸ் நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர், பங்குதாரர்கள் மீது தமிழக போலீசார் பதிவு செய்த வழக்கு, தாக்கல் செய்த குற்றப் பத்திரிகை ஆகியவற்றின் அடிப்படையில் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி மேற்கண்ட நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.காவல்துறையின் குற்றப்பத்திரிகையில் மேற்கூறிய நிறுவனம் பல்வேறு விதிமுறை மீறல்களில் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளது. தயாநிதி அழகிரி உள்ளிட்டோர் சுரங்க முறைகேடுகளில் ஈடுபட்டு, தவறான முறையில் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியதோடு, தவறான வழியில் லாபம் ஈட்டியுள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக மேலும் சில சொத்துகளை முடக்குவதற்குரிய நடவடிக்கையில் அமலாக்கத் துறை ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.