கேன்சர் நோயிலிருந்து மீண்டு அந்நோய்க்கெதிரான போர்- ராதிகா சந்தானகிருஷ்ணன்

கேன்சர் நோயிலிருந்து மீண்டு அந்நோய்க்கெதிரான போர்- ராதிகா சந்தானகிருஷ்ணன்

பெண்களுக்கு வரும் புற்றுநோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அந்த புற்று நோய்களுக்கான சிகிச்சையை சரியான நேரத்தில் தொடங்க வேண்டும் என்ற நோக்கத்திலும் தொடங்கப்பட்ட புற்றுநோய் மையம் தான் “பெண்நலம்” என்னும் அரசு சாரா அமைப்பு. அதன் நிறுவனர் ராதிகா சந்தான கிருஷ்ணன், இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பின்பு அதிலிருந்து மீண்டு வந்தவர்.எனவே புற்றுநோயால் பாதிப்பிற்குள்ளான பெண்களுக்கு தேவைப்படும் மருத்துவ சிகிச்சை மற்றும் மனரீதியான ஆதரவு ஆகியவற்றின் தேவைகளை அறிந்திருந்த ராதிகா சந்தான கிருஷ்ணனன், புற்றுநோய் குறித்து தன்னால் முடிந்த வேவையை சமூகத்திற்கு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பெண்நலம் என்னும் அமைப்பை தொடங்கியுள்ளார்.

woman nov 30

2009 ஆம் ஆண்டு ’பெண்நலம்’ சிறியதொரு மருத்துவமனையாக தொடங்கப்பட்டது. பின்பு அந்த சிறிய குழு விழிப்புணர்வு மற்றும் மருத்துவக் குழு என்று பிரிக்கப்பட்டு பணியாற்றத் தொடங்கியது.

எதிர்கொண்ட சவால்கள்

பெண்கள் குழுக்களை இலக்கு வைத்து பணியாற்றிய ’பெண்நலம்’, முதல் இரண்டு வருடங்களுக்கு பெண்கள் மத்தியில் இது குறித்து விழிப்புணர்வு உருவாக்க பெரும் போராட்டங்களை சந்திக்க வேண்டி இருந்ததாக பிபிசி தமிழோசையிடம் தெரிவிக்கிறார் ராதிகா சந்தான கிருஷ்ணன்.

முறையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டால், கருப்பைவாய் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும் ; மேலும் மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும். இருப்பினும் இந்திய மக்கள் தொகையில் பெரும்பாலானோர் இதை அறியாதவர்களாகவே உள்ளனர் என்றும் பலர் காலம் கடந்து கவனிப்பதால் அதிக ஆபத்திற்கு தள்ளப்படுகிறார்கள் என்று கூறும் ’பெண்நலம்’ அமைப்பு, கருப்பைவாய் புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோய் வரும் முன் பெண்களை பாதுகாப்பதே அதன் முக்கிய குறிக்கோளாக வைத்துள்ளது.

மேலும் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிப்பதுடன், மக்களை கவரும் வகையில் பொம்மலாட்டம், நாடகம், ஆவணப்படம் என பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர் ’பெண்நலம்’ அமைப்பினர்.புற்றுநோய்க்கான விழிப்புணர்வை மேலும் அதிகப்படுத்த 2014 ஆம் ஆண்டு நடமாடும் பேருந்து ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த பேருந்து பெண்கள் வசிக்கும் மற்றும் வேலை செய்யும் பகுதிகளுக்கே சென்று, பெண்களுக்கு புற்றுநோய் வரும்முன் காப்பதற்காக மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளுகிறது.

அடுத்த கட்டத்திற்கு அடியெடுத்து வைக்கும் பெண்நலம்

இன்றைய காலகட்டத்தில் புற்றுநோய் சிகச்சைகள் தனியார் மருத்துமனைகளில் பெரும் செலவுகளுக்கு வித்திடுவதால் சமூகத்தில் நடுத்தர மற்றும் பொருளாதாரத்தில் நலிந்த நிலைகளில் உள்ள பெண்களுக்கு, ’பெண்நலம்’ குறைந்த செலவில் சிகிச்சைகளை அளித்து வருகிறது.

இதுவரை சுமார் 2 லட்சம் பெண்களுக்கு மத்தியில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ள ’பெண்நலம்’, 6000 பெண்களுக்கு புற்றுநோய்க்கான சோதனையை நடத்தியுள்ளது . இது அனைத்தும் ராதிகா சந்தான கிருஷ்ணனின் முன் முயற்சியால் நிகழ்ந்தவை; தற்போது ’பெண்நலம்’ அமைப்பு அடுத்த கட்டமாக சென்னை புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் என்ற பெயரில் தனது முயற்சிகளை மேலும் விரிவுப்படுத்தவுள்ளது.

Related Posts

error: Content is protected !!