டிரம்புக்கு ஒரு நோபல் பரிசு பார்சலேய் – நார்வே எம்.பி., பரிந்துரை!
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இஸ்ரேல் இடையே ஒப்பந்தம் ஏற்பட காரணமாக இருந்த அமெரிக்க அதிபர் டிரம்புக்கு, அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என நார்வே எம்.பி., பரிந்துரை செய்துள்ளார்.
இது தொடர்பாக நார்வே பார்லிமென்ட் எம்.பி.,யும், நேடோ பார்லிமென்டின், நார்வே நாட்டு பிரதிநிதியுமான கிறிஸ்டியன் டைபிரிங் அளித்துள்ள பரிந்துரையில், அமைதிக்காக நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டவர்களை விட டிரம்ப் அதிகம் பணியாற்றியுள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இஸ்ரேல் இடையே உறவு ஏற்படும் வகையில் போடப்பட்ட ஒப்பந்தத்திற்கு டிரம்ப் நிர்வாகம் முக்கிய பங்காற்றியுள்ளது.
இதனால், மத்திய கிழக்கு நாடுகள், யு.ஏ.இ., யை பின்பற்ற துவங்கும். மத்திய கிழக்கு பகுதியில் ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கு இந்த ஒப்பந்தம் ஒரு திருப்பு முனையாக அமையும்.
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியா பாகிஸ்தானை தொடர்பு கொள்வதிலும், வட கொரியா மற்றும் தென் கொரியா பிரச்னையில் சம்பந்தப்பட்ட நாட்டு தலைவர்களுடன் பேசுவதிலும் டிரம்ப் முக்கிய பங்காற்றியுள்ளார். வட கொரியாவின் அணு ஆயுத பலத்தை சிறப்பாக கையாண்டுள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அதிகளவு அமெரிக்க படைகளை திரும்ப பெற்றுள்ளார். இதனால், 39 ஆண்டுகளில், அமெரிக்க அதிபர்களாக இருந்தவர்களின் வரலாற்றில், போரை துவக்காமலும், சர்வதேச ஆயுத பிரச்னைக்கு அமெரிக்கா காரணமாக இல்லாத வகையிலும் டிரம்ப் சிறப்பாக பணியாற்றியுள்ளார்.
இவ்வாறு அவர் தனது பரிந்துரையில் தெரிவித்துள்ளார்.