டிரம்பை பதவி நீக்க கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிராகரிப்பு!

டிரம்பை பதவி நீக்க கொண்டு வரப்பட்ட  தீர்மானம் நிராகரிப்பு!

அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவி ஏற்றது முதல் மேற்கொண்டு வரும் பல அதிரடி நடவடிக்களுக்கு பல தரப்பில் இருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் புதன்கிழமை அன்று கூடிய அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த ஜனநாயக கட்சி எம்.பி ஆல் கிரீன் தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்தார். அந்த தீர்மானத்தில் டிரம்ப்பை அதிபர் பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டது.

இந்தத் தீர்மானத்திற்கு ஆளுங்கட்சி எம்.பிக்கள் மட்டுமல்லாமல் எதிர்கட்சியான ஜனநாயக கட்சி எம்.பிக்கள் பலரும் எதிராக வாக்களித்தனர். இறுதியில் 364 பேர் எதிராக வாக்களித்ததால் இந்த தீர்மானம் தள்ளுப்படி செய்யப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு 58 பேர் ஆதரவாக வாக்களித்தனர். டிரம்ப்பின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நான்சி பெலோசி, ஸ்டெனி எச். ஹோயர் உள்ளிட்ட பலர் இந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அவர்கள் செய்தியாளார்களுக்கு வெளியிட்ட கூட்டு அறிக்கையில் ‘‘அதிபர் டிரம்ப்பின் பல செயல்பாடுகள் கண்டிக்கதக்கதாக உள்ளது உண்மைதான். அவரது கொள்கைகள் நாட்டின் பொருளாதாரத்தையும் பாதுகாப்பையும் அச்சுறுத்துவதாக அமைந்துள்ளன. இருப்பினும் அவரை பதவியில் இருந்து நீக்க இது சரியான தருணம் அல்ல’’ என அவர்கள் தெரிவித்தனர்.

எக்ஸ்ட்ரா ரிப்போர்ட்

முன்னதாக  உலக நாடுகள் மற்றும் அரபு தலைவர்களின் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க அதிபர் டிரம்ப் ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தலைநகராக நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன், ‘‘தற்போது இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேமிற்கு இடமாற்றும் பணிகளை வெளியுறவு துறை உடனடியாக துவங்கும். தூதரக பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். ’’

‘‘அதிபர் டிரம்ப் இந்த முடிவெடுப்பதற்கு முன் எங்கள் கூட்டணி நாட்டு தலைவர்கள் அனைவருடனும் நாங்கள் அலோசனை செய்தோம். இந்த முடிவால் இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே நீண்ட கால அமைதி நிலவ வாய்ப்பு ஏற்படும் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.’’ என டில்லர்சன் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

error: Content is protected !!