தமிழக எம் .எல்.ஏ.வுக்கு எவ்வளவு சம்பளம், என்னென்ன சலுகைகள் என்பது தெரியுமா?

தமிழக எம் .எல்.ஏ.வுக்கு எவ்வளவு சம்பளம், என்னென்ன சலுகைகள் என்பது தெரியுமா?

முன்னொரு கால முதலமைச்சர் ராஜாஜி தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் உறுப்பினர்களுக்கு சம்பளம் வழங்குவது குறித்த சட்ட முன்வடிவின் மீது முதலமைச்சர் ராஜாஜி 1-09-1937ல் ஆற்றிய உரையில் ஒரு பகுதி வருமாறு:

நான் இப்போது சட்டமுன்வடிவின் முக்கிய விதி குறித்து – அதாவது, இரண்டு அவைகளையும் சேர்ந்த உறுப்பினர்களுக்கு சம்பளம் வழங்குவது குறித்து குறிப்பிட விரும்புகிறேன். உறுப்பினர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு வழிவகை செய்யப்பட வேண்டுமென்று உலகெங்கிலும் உள்ள அநேகப் பாராளுமன்றங்களில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாதச் சம்பளம் வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் இந்த ஆண்டுதான் அநேக மாகாணங்களில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதன்முறையாக சம்பளம் வழங்குவதற்கு வழிவகை செய்யப்பட உள்ளது. முதல் தடவையாக புதிய ஒரு பிரிவினர் சட்டமன்ற உறுப்பினர்களாக வந்திருப்பதை மக்கள் உணரவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

‘போதுமான அவகாசமும் பண வசதியும் படைத்தவர்கள் மட்டும் இப்பதவிகளில் கெளரவமாக பணி ஆற்ற வேண்டும் என்பது தற்போதைய தேவைக்குப் பொருத்தமுடையதாக இல்லை. இது குறித்து மேலும் விவாதித்து அவையினுடைய நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை. இதனுடைய நோக்கம் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. மேலும், இப்போதைய இந்திய அரசு சட்டத்தில் இதற்கான திட்டத்திற்கு வழிவகை செய்துள்ளது. அதற்கொப்ப நான் இச்சட்ட முன்வடிவை முன்மொழிகிறேன். உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பயணப்படி, தினப்படி பொறுத்தவரையில் அதற்கான விதிகளில் வரைமுறைகளை வகுத்துக் கொள்ளலாம். அவை அடிக்கடி திருத்தப்பட வேண்டியிருக்கும்.

“பயணப்படியும், தினப்படியும் அதிகம் என பலர் கருதுகின்றனர். குறிப்பாக, உறுப்பினர்களுக்கு மாதச் சம்பளம் ரூ.75 அளிக்கப்படும் நிலையில் அரசினால் புதியதாக இயற்றப்படவிருக்கும் விதிகளில் தினப்படியையும், பயணப்படியையும் குறைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு உறுப்பினரும் ரூ.75 சம்பளம் வாங்கியே ஆக வேண்டுமென்று யாரையும் நாம் கட்டாயப்படுத்தவில்லை. யாருக்கு போதுமான நிதி வசதி உள்ளதோ அவர்கள் சம்பளம் பெறும் உரிமையை விட்டுக் கொடுக்கலாம். அதற்காக இந்த சட்ட முன்வடிவில் வகை செய்யப்பட்டுள்ளது. ஏழையாக உள்ள உறுப்பினர்களுக்காகத்தான் இச்சட்டம் கொண்டு வரப்பெற்றுள்ளதே தவிர, வசதி படைத்த உறுப்பினர்களுக்காக அல்ல. உறுப்பினர்களில் பின் குறிப்பிடப்பட்ட பிரிவைச் சார்ந்த பலரும் இந்த சட்ட முன்வடிவு மூலம் அளிக்கப்படும் தங்களது சம்பளம் வாங்கும் உரிமையை விட்டுக் கொடுக்க முன்வருவார்களென நம்புகிறேன். இதன் தொடர்பாக ஒன்றை மட்டும் நான் குறிப்பிட விரும்புகிறேன். ரூ.75 என்ற விகிதத்தில் சம்பளம் வாங்கும் ஏழ்மை நிலைமையை அடிப்படையாகக் கொண்டு, படிகளின் அளவை நிர்ணயிக்க இருக்கிறோம். ஆனால், இந்த ரூ.75 மாதச் சம்பளத்தை வாங்காத வசதி படைத்தவர்களுக்கு தங்குமிடம், சாப்பாடு, பயணம் ஆகியவற்றில் கூடுதல் வசதிகளைக் கோரலாம். ரூ.75 சம்பளம் பெறுபவர்களுக்குண்டான தகுதியின் அளவுகோல், வசதி படைத்தவர்களைப் பொறுத்தவரை அவர்கள்மீது திணிக்கப்படமாட்டாது.” என்றெல்லாம் பேசியது பழங்கதை

இப்போது ஒவ்வொரு எம் எல் ஏ-வுக்கும் மாதம் ரூ.ஒரு லட்சத்து ஐயாயிரம் ரூபாய் சம்பளம்., ஒரு விஷயம் தெரியுமா? இந்திய அளவில் தெலுங்கானா மாநில எம்.எல்.ஏ.க்களுக்குத்தான் அதிக அளவில் சம்பளம் வழங்கப்படுகிறது. இவர்கள் மாதந்தோறும் சம்பளம் மற்றும் படிகளுடன் சேர்த்து பெறும் மொத்த தொகை ரூ.2 லட்சத்து 50 ஆயிரம்.அதேபோல், மிகவும் குறைந்த சம்பளம் வழங்கும் மாநிலம் திரிபுரா. இங்குள்ள எம்.எல்.ஏ.க்கள் மாதந்தோறும் பெறும் தொகை 17 ஆயிரத்து 500 ரூபாய் மட்டும்தான்.

ஒவ்வொரு மாநிலத்திலும் எம்.எல்.ஏ.க்கள் பெறும் சம்பள விவரம் இதோ:-

தெலுங்கானா – 2.50,000
டெல்லி – 2.50,000
உத்தரபிரதேசம் – 1,87,000
மகாராஷ்டிரா – 1,50,000
ஆந்திரா – 1,30,000
இமாசலபிரதேசம் – 1,25,000
அரியானா – 1,15,000
ஜார்க்கண்ட் – 1,11,000
மத்திய பிரதேசம் – 1,10,000
சத்தீஷ்கர் – 1,10,000

தமிழ்நாடு – 1,05,000
பஞ்சாப் – 1,00, 000
கோவா – 1,00,000
பீகார் – 1,00,000
மேற்கு வங்காளம் – 96,000
கர்நாடகா – 60,000
சிக்கம் – 52,000
குஜராத் – 47,000
கேரளா – 42,000
ராஜஸ்தான் – 40,000

உத்தரகாண்ட் – 35,000
ஒடிசா – 30,000
மேகாலயா – 28,000
அருணாசலபிரதேசம் – 25,000
அசாம் – 20,000
மணிப்பூர் – 18,500
நாகலாந்து – 18,000
திரிபுரா – 17,500

நம் தமிழ்நாட்டில் ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை எம்.எல்.ஏ.,க்களுக்கு மாதச் சம்பளம், 8,000 ரூபாய்; ஈட்டுப்படியாக, 7,000 ரூபாய்; தொலைபேசி படியாக, 5,000; தொகுதிப்படியாக, 10 ஆயிரம்; அஞ்சல் படி, தொகுப்பு படியாக, தலா, 2,500 ரூபாய்; வாகனப் படியாக, 20 ஆயிரம் ரூபாய்; ஒரு எம்.எல்.ஏ.,வுக்கு மாதத்திற்கு மொத்தம், 55 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்ட நிலையில் கடந்த 2018ல்தான் இதை இரு மடங்கு ஆக்கினார்கள் அதிமுகவினர் (அதன்படி எம்.எல்.ஏ.க்களின் மாத சம்பளம் ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுச்சு. அந் நேரத்தில், போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி போராட்டம் நடத்தி வந்தாய்ங்க. அதனை காரணம் காட்டி, அய்யே.. திமுக எல்.எல்.ஏக்களுக்கு சம்பள உயர்வு எல்லாம் வேண்டாம்.. பழைய சேலரியே-போதுமுன்னு அப்போ எதிர்க்கட்சி தலைவரா இருந்த ஸ்டாலின் தெரிவிச்சார். இதையடுத்து, பழைய சம்பளமான 55 ஆயிரம் ரூபாயை மட்டுமே திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு தமிழக அரசு வழங்கிய வந்த நிலையில், எதிர்க் கட்சித் துணைத் தலைவரான துரைமுருகன், ஹலோ சார் திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு புதிய சம்பளத்தை வழங்குங்கோ-ன்னு சட்டப்பேரவை செயலாளரிடம் கடிதம் அளிச்சார். அதன் அடிப்படையில், திமுக எம்.எல்.ஏ.க் களுக்கு புதிய சம்பளம் வழங்க சட்டப்பேரவை செயலாளர் உத்தரவிட்டார். இதையடுத்து திமுக எம்.எல்.ஏ க்கள் 89 பேருக்கும் 1.7 2017 முதல் கணக்கிட்டு 13 மாத நிலுவைத் தொகை 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை அரசு வழங்கியது தனி எபிசோட்).. இதுதவிர, சட்டசபைக் கூட்டத்தில் கலந்து கொண்டால், நாள் ஒன்றுக்கு, 500 ரூபாய் தினப்படியாக வழங்கப்படுகின்றன.

மேலும் மாநில அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில், எம்.எல்.ஏ.,க்கள் தனியாகவோ, குடும்பத்தினருடனோ பயணம் செய்ய, இலவச அனுமதிச் சீட்டு வழங்கப்படுகின்றன, (ஆனால் இதுவரை ஓரிரி கம்யூ எம் எல் ஏ தவிர யாரும் பஸ் பயணம் சென்றதில்லையாம்).வெளியிடங்களுக்கு செல்ல, ரயில் பயணப்படியாக, ஆண்டுக்கு இரண்டு தவணையாக, 20 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படுகின்றன. சட்டசபை கூட்டத்தொடர் காலத்தில், எம்.எல்.ஏ., அவருடன் செல்லும் குடும்பத்தினருக்கான, ரயில் கட்டணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். எம்.எல்.ஏ., ஹாஸ்டல், வீட்டிற்கு இலவச தொலைபேசி இணைப்பு, அரசு மருத்துவமனையில் தனி அறை சிகிச்சை, வெளியில் வாங்கும் மருந்துகளும் இலவசம் போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன. மாதம் ரூபாய் 250 கட்டணத்தில் ஒவ்வொரு உறுப்பினரும் சட்டமன்ற பேரவை உறுப்பினர்களின் குடியிருப்புகளில் ஒதுக்கீடு செய்யப்படும்

அத்துடன் மத்திய அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற தனியார் மருத்துவமனையில், இதயம், சிறுநீரகம், உடலின் வேறு ஏதாவது பாகம் தொடர்பான அறுவை சிகிச்சைக்கு, எம்.எல்.ஏ.,க்களுக்கு, அரசு நிதியுதவி பெற உரிமையுள்ளது. கூடவே ஆண்டுக்கு, 1,500 பெரிய கடித தாள்கள்; 3,700 சிறிய கடித தாள்கள்; பெரிய கவர்கள், 750; சிறிய கவர்கள், 1,500; ஹீரோ பேனா ஒன்று; டைரி ஒன்று; காலண்டர் இரண்டு வழங்கப்படுகின்றன.

இடைச்செருகல் ரிப்போர்ட்:

கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் 204 பேர் சமர்பித்த ஆவணங்களை ஆய்வு செய்ததில், 157 பேர் கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்து மதிப்பை கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.அதிகபட்சமாக, அண்ணா நகர் தொகுதி திமுக எம்.எல்.ஏ எம்.கே.மோகனுக்கு 170 கோடி ரூபாய்க்கு சொத்து உள்ளது. அவருக்கு அடுத்த இடத்தில் ஆலங்குளம் திமுக எம்.எல்.ஏ பூங்கோதை ஆலடி அருணா 37 கோடி ரூபாய் சொத்துடன் உள்ளார். ராணிபேட்டை திமுக எம்.எல்.ஏ., ஆர்.காந்திக்கு 36 கோடி ரூபாய்க்கு சொத்து உள்ளது.

குறைந்தபட்சமாக, பவானிசாகர் அதிமுக எம்.எல்.ஏ ஈஸ்வரன், வெறும் 4 லட்ச ரூபாய் சொத்துகளுடன் இருக்கிறார். அவரை தொடர்ந்து, கே.வி.குப்பம் அதிமுக எம்.எல்.ஏ லோகநாதன் 14 லட்ச ரூபாயுடனும், பத்மநாபபுரம் திமுக எம்.எல்.ஏ மனோ தங்கராஜ் 16 லட்ச ரூபாய் சொத்துகளுடனும் மிகக் குறைந்த சொத்துகளை வைத்திருக்கும் எம்எல்ஏக்களாக உள்ளனர். சராசரியாக அதிமுக எம்.எல்.ஏக்களின் சொத்து மதிப்பு 3 கோடியே 49 லட்ச ரூபாயாகவும், திமுக எம்.எல்.ஏக்களின் சொத்து மதிப்பு 9 கோடியே 49 லட்சமாகவும் உள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 7 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு 3 கோடியே 72 லட்ச ரூபாயாக உள்ளது.

தற்போது பதவியில் உள்ள 38 எம்.எல்.ஏக்கள், தங்கள் மீது மோசமான குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளதாக ஆவணங்களை சமர்பித்துள்ளனர். அதில், 22 பேர் திமுகவையும், 13 பேர் அதிமுகவையும் சேர்ந்தவர்கள் ஆவர். மேலும், 89 எம்.எல்.ஏக்களின் கல்வித் தகுதி 5 முதல் 12ம் வகுப்பு வரையில் மட்டுமே எனவும், 110 பேர் மட்டுமே பட்ட படிப்பை முடித்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

‘மாஜி’க்களின் சலுகைகள் :

எம்.எல்.ஏ., ஒருவர், தொகுதிக்கு வெளியே எதிர்பாராதவிதமாக இறக்க நேரிட்டால், சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு செல்வதற்கான வாகனத்தின் வாடகை, அரசால் வழங்கப்படுகிறது.பதவிக்காலத்தில் இறந்த எம்.எல்.ஏ.,க்களின் குடும்பத்திற்கு, பதவிக்காலம் முழுமைக்கும், மாதத்துக்கு, 1,000 ரூபாய், குடும்ப படியாக வழங்கப் படுகிறது. அக்குடும்பத்திற்கு, ஒட்டுமொத்த படியாக இரண்டு லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. மரணமடைந்த எம்.எல்.ஏ.,க்களின் குடும்பத்திற்கு, ஓய்வூதியாக, மாதம், 6,000 ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது. முன்னாள் எம்.எல்.ஏ.,க்களுக்கு, மாதத்துக்கு, 12 ஆயிரம் ரூபாய் வீதம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.முன்னாள் எம்.எல்.ஏ., குடும்பத்தினருடன், அடையாள அட்டையை பயன்படுத்தி, அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம். அரசு மருத்துவமனையில், ‘அ’ அல்லது ‘ஆ’ பிரிவில் இலவசமாக தங்கி, சிகிச்சை பெறலாம். மேலும், ஆண்டுக்கு, 12 ஆயிரம் ரூபாய் மருத்துவப் படியாக வழங்கப்படுகிறது.

எக்ஸ்ட்ரா ரிப்போர்ட்:

மேலே சொன்ன வருவாய் எல்லாம் கணக்கில் வருபவை.. அதே சமயம் வெளியே தெரியாத கிம்பளம் எவ்வளவு என்பதை விசாரித்ததில் கிடைத்த தகவல் இது. இது கூடுமே தவிர குறைய வாய்ப்பில்லை. அந்த கிம்பள கணக்கு என்ன என்று பார்க்கலாம்.

ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு வருடத்திற்கு 2 கோடி தொகுதி மேம்பாட்டு நிதியாக ஒதுக்கப்படுகிறது. அதில் 15 சதவீதம் கமிஷன். 30 லட்சம் வருமானம்.

ஒரு தொகுதியின் ஐவேஸ் வேலைகளுக்காக ஆண்டிற்கு 15 கோடி ஒதுக்கப்படுகிறது. அதில் அமைச்சருக்கு, மாவட்ட செயலாளருக்கு, EE:க்கு என போக எம்.ஏ.வின் கைக்கு 5 சதவீத கமிஷன் வருகிறது. 75 லட்சம் வருமானம்.

பொதுப்பணி துறை வேலைகளுக்கு என ஆண்டிற்கு 5 கோடி ஒதுக்கப்படுகிறது. அதிலும் மாவட்ட அமைச்சர், மாவட்ட செயலாளர் EE;க்கு என போக நம்ப எம்.எல்.விற்கு 5 சதவீதம் கமிஷன். இதில் 25 லட்சம் வருமானம்.

உள்ளாட்சி துறை சார்பாக ஒரு ஆண்டிற்கு 20 கோடி ஒதுக்கப்படுகிறது. இதில் 20 சதவீத கமிஷன். எல்லாருக்கும் போக நமது எம்.எல்.ஏ.வின் கைக்கு 5 சதவீதம். அதாவது ஒரு கோடி வருமானம்.

பாரத பிரதமர் நிதி உதவி என்று தொகுதிக்கு சுமார் 4 லிருந்து 5 கோடி, ஆண்டொன்றுக்கு ஒதுக்கப்படுகிறது. இதில் நேரடியாக 15 சதவீத கமிஷன். நம்ப சட்டமன்ற உறுப்பினருக்கு 60 லட்சம் வருமானம்.

ஒரு தொகுதிக்கு சுமார் 500 பசுமை வீடு திட்டம் நிதி ஒதுக்கப்படுகிறது. ஒவ்வொரு வீட்டிற்கும் 20 ஆயிரம் கமிஷன். இதில் மா.செ, வட்டம் ஒன்றியம், அதிகாரிகள் என பலருக்கும் போக சட்டமன்ற உறுப்பினருக்கு மட்டும் 50 வீடு. அதாவது ஒரு கோடி ரூபாய் வருமானம்.

இதுவே ஆண்டிற்கு 3 கோடியே 90 லட்சம். சுமார் 4 கோடி ரூபாய் கிடைக்கின்றது. இதெல்லாம் வெளியில் தெரிந்த வருமானம்.

தெரியாத பட்டியில் நிறைய இருக்கின்றது. அந்தந்த பகுதி மணல் கொள்ளையர்கள், குவாரி கொள்ளையர்கள், டூப்ளிகெட் பொருட்களை விற்பவர்கள், கம்பெனிகள், கட்டப்பஞ்சாயத்துகள், இடமாற்றம், புதிய நியமனம், என்று குவியும் வருமானங்கள் கணக்கில் சேர்க்க(முடியவில்லை)வில்லை. மாதத்திற்கு பல கோடி வருமானம்? ஆண்டிற்கு பல பல கோடிகள்!

நிலவளம் ரெங்கராஜன்

error: Content is protected !!