Exclusive

தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள நடிகை குஷ்பூவின் அதிகாரங்கள் என்னென்ன தெரியுமா?.

பிரபல நடிகை குஷ்பூ தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். தொடக்கத்தில் இவர் திமுகவில் இணைந்து அரசியலில் ஈடுபட்டு வந்துள்ளார். பின்னர், காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றி வந்துள்ளார். அதன் பின்னர் பாஜகவில் இணைந்த குஷ்பூ, கடந்த சட்டமன்றத் தேர்தலில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன் பின்னரும் கட்சியில் தீவிர பணியாற்றி வரும் அவருக்கு பாஜகவில் தேசிய செயற்குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அவர் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனிடையே தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள குஷ்பூவுக்கு தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர். தன்னை தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமித்ததற்கு பிரதமர் மோடிக்கு நடிகை குஷ்பூ நன்றி தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள நடிகை குஷ்பூ, டெல்லியில் உள்ள அலுவலகத்தில் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். பிறகு இதுகுறித்து பேட்டி அளித்த கூறியதாவது; பெண்களுக்கு எதிரான வன்கொடுமை உலகளவில் இருந்தாலும், இந்தியாவில் அதிகளவில் உள்ளதாக வேதனை தெரிவித்தார். மேலும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்க, தன்னால் முடிந்ததை செய்வேன் என உறுதி அளித்த அவர், தமிழ்நாட்டு பெண்களின் பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்துவேன் என்றும் தெரிவித்தார்.

அது சரி..தேசிய மகளிர் ஆணையம் அமைப்பும் செயல்பாடும் என்ன என்று தெரிய கொள்ள விருப்பமா? இதோ பதில்

இந்திய அரசியல் அமைப்பு சாசனம் சட்டத்தின் முன் அனைவரையும் சமமாகவே கருதுகிறது. அதே அரசியல் அமைப்பு சாசனத்தின் கீழ் பெண்களுக்கும் குழந்தைகளுக்குமான நலன் காக்க சிறப்புச் சட்டங்கள் இயற்ற வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும், நடைமுறையில் பெண்களுக்கு அவ்வாறான சமமான ஒரு தளத்தை இந்தச் சமுதாயம் இன்று வரை ஏற்படுத்தித் தரவில்லை. அதனால் பெண்களின் காவல் அரண்களாக விளங்கியவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் முயற்சியின் பலனாக பெண்கள் நலனை போற்றிப் பாதுகாக்க பெண்கள் ஆணையம் அமைக்க 1990ம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது.

இந்தச் சட்டத்தின் கீழ் தேசிய மகளிர் ஆணையத்தில் தலைவராக ஒருவரும், 5 பெண் உறுப்பினர்களும் கொண்ட குழு அமைக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு பெண்களுக்காகப் பாடுபடும் உயரிய நோக்கத்தில் செயலாற்றும் ஒரு பெண்மணியை தலைவராகத் தேர்ந்தெடுக்கும். ஏனைய 5 உறுப்பினர்களும் சட்ட அனுபவமுள்ளவர்களாகவோ, சட்டம் இயற்றிய அனுபவமுள்ளவர்களாவோ, தொழிற்சங்கத்தில் ஈடுபட்டவராகவோ, ஒரு நிறுவனத்தின் தலைவராகவோ, கல்வி, உடல்நலம் மற்றும் சமூக நல காவலர்களாகவோ விளங்கியிருத்தல் அவசியம். இவர்களுள் ஒரு உறுப்பினர் பிற்படுத்தப்பட்ட இனத்தை அல்லது பழங்குடியினரைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும். மேலும், குடிமுறை அரசுப் பணியில் (சிவில் சர்வீஸ்) இருக்கும் ஒரு அதிகாரியை உறுப்பினர்- செயலாளராக நியமிப்பார்கள். உறுப்பினர்-செயலாளரைத் தவிர ஏனைய உறுப்பினர்கள் 3 ஆண்டு காலம் பதவி வகிப்பார்கள்.

இந்தப் பதவியை வகிப்பவர்களுக்குப் பின்வரும் விஷயங்களில் ஏதேனும் ஒன்று பொருந்துமெனில் பதவியினைத் தொடர்ந்து வகிக்க இயலாது.
* சட்டப்படி பட்ட கடனைத் தீர்க்க முடியாமல் நொடிந்த நிலையில் இருப்பவர்
* தவறான நடத்தைக்காக சட்டப்படி தண்டனை பெற்றவர்.
* மனநலம் பாதிக்கப்பட்டவர்.
* தனக்கு கொடுக்கப்பட்ட பணியை மறுத்தவர் அல்லது அந்தப் பணியினை செய்யும் தகுதியை இழந்தவர்.
* ஆணையத்தின் அமர்வுகளுக்கு தொடர்ந்து 3 முறை முன்னறிவிப்பின்றி வராமல் இருப்பவர்.
* தனக்கு கொடுத்திருக்கும் தலைவர் பதவியையோ,
உறுப்பினர் பதவியையோ
தவறான வகையில் உபயோகித்தவர்.
ஆணையத்தின் செயல்பாடுகள்
* அரசியல் அமைப்பு சாசனம் மற்றும் ஏனையப் பெண்கள் நலன் காக்கும் சட்டங்கள் கொடுக்கும் பாதுகாப்புகளை அவர்களின் நலனுக்காக பின்பற்றப்படுகிறதா என்று ஆராய்தல் மற்றும் கவனித்தல்.
* பெண்கள் சட்டம் கொடுக்கும் பாதுகாப்பு நடைமுறைகள் பற்றி மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தல்.
* பெண்கள் நலன் காக்க, அவர்களின் தரம் உயர அரசுக்கு பரிந்துரை அளித்தல்.
* இந்திய அரசியல் அமைப்பு சாசனம், ஏனையப் பெண்கள் நலன் காக்கும் சட்டங்கள் அனைத்தும் சரிவர நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்று பரிசீலித்து சட்ட மாற்றம் தேவை என்றால் பரிந்துரைத்தல்.
* பெண்களுக்கு எதிராக நடக்கும் அத்துமீறல்களுக்கு எதிராக குரல் கொடுத்தல்.
* பெண்களின் உரிமை தடை செய்யப்படும் போதும், சட்டங்கள் பின்பற்றப்படாமல் இருக்கும் பட்சத்திலும் தன்னிச்சையாக பெண்கள் நலன்
காக்கும் வகையில் பங்களித்தல்.
* பெண்களின் நிலை குறித்து சிறப்பு ஆராய்ச்சி மேற்கொள்ளுதல்.
* மத்திய, மாநில அரசுகளுக்கு பெண்களின் நிலை குறித்து மதிப்பீடு செய்து அறிக்கை அனுப்புதல்.
* அரசாங்கத்துக்கு பெண்கள் நிலை குறித்து அவ்வப்போது அறிக்கை சமர்ப்பித்தல்.
* பெண்கள் சிறை, பாதுகாப்பு மையங்கள் அல்லது பெண்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் இடங்களை சோதனை செய்து தேவைப்படும் உதவிகளையும் மேம்பாடுகளையும் செய்யவலியுறுத்தல்.

மகளிர் ஆணையங்களுக்கு உரிமையியல் (சிவில்) நீதிமன்றங்களுக்குரிய அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் அவற்றின் ஆணைகளை நீதிமன்ற ஆணைகளுக்கு ஒப்பாக நடைமுறைப்படுத்த இயலாது. உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் மாண்புமிகு வி.ஆர். கிருஷ்ணய்யர் மகளிர் நல ஆணையங்களைப் பற்றி குறிப்பிடுகையில், ‘எவ்வளவு அதிகாரம் இருந்தாலும், இரும்புக்கரம் கொண்டு செயல்படுத்த இயலாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது வருந்தத்தக்க விஷயமே’ என்று குறிப்பிட்டுள்ளார். எனினும், மகளிர் ஆணையங்களின் முன் வரும் வழக்குகளிலோ அல்லது அவர்கள் தன்னிச்சையாக எடுத்துக்கொள்ளும் வழக்குகளிலோ, அந்த வழக்குக்குத் தேவையான நபரை கொண்டு வந்து நிறுத்தவும், சத்திய பிரமாணத்தின் முன் விசாரிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

* வழக்குக்குத் தேவையான எந்தவிதமான ஆதாரங்களையும் தன் முன் சமர்ப்பிக்க வைப்பது.
* யாரிடம் இருந்தும் சாட்சி வாக்குமூலம் பெற்றுக்கொள்ளும் அதிகாரம் உண்டு.
* அனைத்துவிதமான அரசு ஆவணங்களையோ, நீதிமன்ற ஆவணங்களையோ கோர வழிவகை செய்யப்பட்டுள்ளது.
* சாட்சிகளையோ, ஆவணங்களையோ விசாரிக்கவோ, சரிபார்க்கவோ தன்னுடைய இடத்தில் எந்த நபரையும் நியமிக்க உரிமை உண்டு.
மகளிர் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் பொது ஊழியர்கள் (பப்ளிக் சர்வன்ட்) என்று கருதப்படுவார்கள். மத்திய அரசாங்கம் இவர்களுக்கான ஊதியத்தை சலுகைகளாக தருகிறது. இந்த ஆணையம் ஆண்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மத்திய அரசு அந்த ஆண்டு அறிக்கையில் அவர்கள் கொடுத்த ஆலோசனையின் பேரில் எடுத்த நடவடிக்கையுடன், தணிக்கை அறிக்கையையும் சேர்த்து பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

பெண்களின் நலன் காக்கவும், அவர்கள் வாழ்வின் தரத்தை முன்னேற்ற பரிந்துரை அளிக்கவும், சமூகத்தில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்காக குரல் கொடுக்கவும் இந்த ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும், மாநில மகளிர் ஆணையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

aanthai

Recent Posts

பொம்மை -டிரைலர் 2!

https://www.youtube.com/watch?v=wKZe1Iik1p8

56 mins ago

இப்படியான விபத்துகளில் அரசுகள் பாடம் கற்றுக்கொள்ளும் பக்குவத்தை கடந்து விட்டன!

கிட்டத்தட்ட ஐம்பது சதவீத ஊழல். ஊழியர் பற்றாக்குறை, நிர்வாகக் குளறுபடிகளால் பராமரிப்பின்மை இவற்றால் எளிய மக்களின் பொதுப் போக்குவரத்து பெரும்…

3 hours ago

சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் 10 ஆம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ படித்தவர்களுக்கான அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு !

சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் அப்ரண்டிஸ் பயிற்சி பெறுவதற்கான அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. தொழில்பழகுநர் சட்டம் 1961, விதிகளுக்கு…

3 hours ago

சர்ச்சில் புகைத்த பாதி சுருட்டு.. ஏலத்துக்கு வருது!

இரண்டாம் உலகப் போர் நடந்த காலத்தில் நாயகர்களாக விளங்கியவர்களில் ஒருவர் சர்ச்சில். இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இருந்தவர். 1940 -…

4 hours ago

ஒடிசா ரயில் விபத்து; 300 பயணிகள் பலி? 1000 பேர் படுகாயம்!

முன்னொரு காலம் ஒரிசா என்றழைக்கப்பட்ட ஒடிசாவில் சரக்கு ரயில் மீது மோதியதால் கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த ஷாலிமர்…

1 day ago

This website uses cookies.