June 1, 2023

ராகுல் எம்.பி. பதவி பறிபோனதற்கான அடிப்படை காரணம் என்ன தெரியுமா?

ரண்டு நாட்கள் முன் வரை எம்பியாக இருந்த ராகுல் காந்தி, தற்போது தனது அந்த பதவியை இழந்து நிற்கிறார். அவரது பதவி பறிபோனதற்கான அடிப்படை காரணம் மோடி குறித்து அவர் பேசியது அல்ல; மாறாக, கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு அவர் சரி என்று நினைத்து செய்த ஒரு செயல்தான் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும். அந்த செயல் என்ன என்பதையும், எப்படி அவரே தனது இந்த வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்துள்ளார் என்பதையும் விளக்குகிறது இந்து தமிழில் நான் எழுதிய ”ராகுல் காந்தி அன்று அந்த மசோதா நகலை கிழிக்காமல் இருந்திருந்தால்..? – எம்.பி பதவி பறிப்பு எழுப்பும் கேள்விகள்” எனும் கட்டுரை. அதோடு, இந்த விவகாரம் எழுப்பியுள்ள மற்றொரு சிக்கல் குறித்தும் அதற்கான தீர்வு குறித்தும் விவாதிக்கிறது கட்டுரை.

நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என எல்லா திருடர்களின் பெயர்களிலும் மோடி என்று இருப்பது ஏன்?” – ராகுல் காந்தியின் இந்த ஒற்றைக் கேள்விதான் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பறித்திருக்கிறது. 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது அவர் எழுப்பிய கேள்வி இது. இந்தக் கேள்வியின் மூலம் ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் ராகுல் காந்தி அவமதித்துவிட்டதாகக் கூறி குஜராத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏவான புர்னேஷ் மோடி தொடர்ந்த வழக்கில்தான் சூரத் நீதிமன்றம், ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து வியாழக்கிழமை தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை அடுத்தே, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை அவரது எம்.பி பதவி பறிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினருக்கோ நீதிமன்றம் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்குமானால், அவர் உடனடியாக தகுதி இழப்புக்கு உள்ளாகிறார் என உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்ததை அடுத்து, அதற்கு எதிராக கடந்த 2013-ம் ஆண்டு அவசரச் சட்டம் இயற்ற முயன்றது காங்கிரஸ் தலைமையிலான அப்போதைய மத்திய அரசு. அப்போது அந்த அவசரச் சட்ட நகலை கிழித்து “இது முட்டாள்தனமானது” என்று கூறி, அந்த அவசரச் சட்டத்தை தனது ‘வீட்டோ’ அதிகாரத்தால் தடுத்தவர் ராகுல் காந்தி.

அதன் பின்னர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”மத்திய அரசின் இந்த அவசரச் சட்டம் தவறானது என்பது எனது தனிப்பட்டக் கருத்து. இது ஓர் அரசியல் முடிவு. ஒவ்வொரு கட்சியுமே இதுபோன்று முடிவுகளை எடுக்கின்றன. ஆனால், இதுபோன்ற ஒரு முட்டாள்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அவசியம்” என்று தெரிவித்தார். அப்போதைய அவரது அந்த நடவடிக்கை, முதிர்ச்சியற்ற செயல் என விமர்சிக்கப்பட்டது. மத்திய அரசுக்கும், பிரதமராக இருந்த மன்மோகன் சிங்குக்கும் பொதுவெளியில் அவப்பெயரை ஏற்படுத்திவிட்டதாக ராகுல் விமர்சிக்கப்பட்டார். அதேநேரத்தில், ‘தவறு செய்யும் மக்கள் பிரதிநிதிகளுக்கு உரிய தண்டனை கிடைத்தே ஆக வேண்டும்; அதில் சமரசம் கூடாது’ என்ற ராகுலின் வாதத்திற்கும் வரவேற்பு இல்லாமல் இல்லை. ஆனால், எந்தச் சட்டம் மாற்றப்படக் கூடாது என அவர் உறுதியாக இருந்தாரோ அதே சட்டப்பிரிவின் கீழ் தற்போது அவரே சிக்கி இருக்கிறார்.

ஒரு வகையில் ராகுல் காந்திக்கு இது தற்காலிக பாதிப்புதான் என்றாலும், இதில் இருந்து சட்டப்படி அவர் வெளியே வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம் இருக்கின்றன. ஏனெனில், இது ஊழல் வழக்கு அல்ல; அவதூறு வழக்குதான். அதோடு, மோடி எனும் ஒபிசி சமூகத்தை ஒட்டுமொத்தமாக ராகுல் காந்தி அவமதித்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு மேல் நீதிமன்றத்தில் நிற்காது. ஏனெனில், அதற்கான உள்நோக்கோடு அவர் பேசவில்லை என்பதை மேல் நீதிமன்றத்தில் நிரூபிக்க வாய்ப்பு அதிகமிருக்கிறது. கீழ் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு மேல் நீதிமன்றம் – அது உயர்நீதிமன்றமோ அல்லது உச்ச நீதிமன்றமோ – தடை விதிக்குமானால் ராகுல் காந்தி எதை இழந்தாரோ அது மீண்டும் பெறுவார்.

அதேநேரத்தில், ராகுல் காந்தி கிழித்தெறிந்த அந்த அவசரச் சட்டம் உண்மையில் முட்டாள்தனமானதா என்ற கேள்வி தற்போது எழுகிறது. ஏனெனில், அத்தனை பெரிய குற்றமாக இல்லாத ஒரு விஷயத்திற்காகக்கூட ஒரு எம்எல்ஏ அல்லது எம்பி-யை நீதிமன்றம் கடுமையாக தண்டிக்க முடியும் என்பதும், அதன் காரணமாக அவர் தனது பதவியை இழக்க நேரிடும் என்பதும் ஏற்கத்தக்கதுதானா என்ற கேள்விக்கு விடை கண்டாக வேண்டும்.

உண்மையில், இதற்கான விடையைத்தான் மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய காங்கிரஸ் அரசு, மசோதா வடிவில் கொடுத்தது. ஒரு எம்எல்ஏ அல்லது எம்பிக்கு எதிரான வழக்கில் கீழ் நீதிமன்றம் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தாலும், அந்த எம்எல்ஏ அல்லது எம்பியின் பதவி உடனடியாக பறிபோகாது. மேல் முறையீட்டில், மேல் நீதிமன்றம் அந்த தீர்ப்புக்கு தடை விதிக்கும் வரை அவர் சம்பளம் இல்லாத வாக்களிக்கும் உரிமை இல்லாத உறுப்பினராக தொடருவார். மேல் நீதிமன்றம் – அதாவது உச்ச நீதிமன்றமானது, கீழ் நீதிமன்றத் தீர்ப்பை உறுதிப்படுத்தினால் மட்டுமே அவர் பதவி இழப்பை எதிர்கொள்வார்.

உண்மையில், இந்த மசோதா முட்டாள்தனமானது அல்ல; அவசியமானது. ராகுல் காந்திதான் உணர்ச்சிப் பெருக்கில் அந்த மசோதாவை தடுத்துவிட்டார் என்ற கருத்தும் இப்போது விவாதிக்கப்படுகிறது. ஏனெனில், எல்லா வழக்குகளிலும் கீழ் நீதிமன்றங்கள் ஆழமான சட்ட அறிவுடனும், விசாலமான பார்வையுடனும் தீர்ப்பளிப்பதாக சொல்லிவிட முடியாது. கீழ் நீதிமன்ற தீர்ப்புகளை மேல் நீதிமன்றங்கள் மாற்றுவது நமது நாட்டில் மட்டுமல்ல உலக அளவிலுமே சகஜமான ஒன்றுதான். இதைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் ஒரு சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினரின் பதவி உடனடியாக பறிக்கப்படுவது என்பது ஏற்கத்தக்கதல்ல.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினரால் ஓர் அரசே (வாஜ்பாய் தலைமையிலான அரசு) கவிழ்ந்த வரலாறு நம் நாட்டுக்கு உண்டு. ஒரு சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினரின் பதவி பறிக்கப்படுவதால் ஏற்படும் தொடர் விளைவுகளை கருத்தில் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். கீழ் நீதிமன்றத்தின் நீதிபதியாக இருக்கும் ஒற்றை நபரை, ஒட்டுமொத்த நாட்டின் அரசியல் போக்கை தீர்மானிக்கும் இடத்திற்கு உயர்த்துவது ஆபத்தானது என்ற கருத்தும் இப்போது கவனிக்கப்படுகிறது.

பால. மோகன்தாஸ்