June 2, 2023

இந்தியாவின் முதல் அட்வகேட் ஜெனரல்- வி.பாஷ்யம் அய்யங்கார்!

‘உயர்நீதிமன்ற வளாகத்தில் அவருக்கு சிலை வைப்பதா? அதை தரிசனம் செய்துவிட்டுத்தான் நாங்கள் நீதிமன்றத்திற்குள் வரவேண்டுமா? அதெல்லாம் முடியவே முடியாது’ என்று ஒரேயடியாக நீதிபதிகள் அடம் பிடித்தார்கள். வழக்கறிஞர்கள் சிலர் விடவே இல்லை. தொடர்ந்து போராடி, அவர் மறைந்து 19 ஆண்டுகள் கழித்து ஒரு வழியாக சிலை வைத்தார்கள். புகழ் பெற்ற சிற்பி எம்.எஸ்.நாகப்பா தத்ரூபமாக வடித்த அந்த சிலை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் வந்த பிறகு, நீதிபதிகள் வேறு விதமாக வெறுப்பைக் காட்டினர். சென்னை உயர்நீதிமன்றத்தின் வடக்குப் பக்க வாசல் வழியாக வந்தால் அந்த சிலையைப் பார்த்துக் கொண்டு வர வேண்டியிருக்கும் என்பதால், தெற்குப் புற வாசலை அதிகம் பயன்படுத்தினார்கள்.

சத்தமில்லாமல் இன்னொரு வேலையையும் செய்தார்கள். நீதிமன்றத்தின் வடக்கு மற்றும் தெற்கு பகுதி கட்டடங்களை இணைக்கும் பாதையின் பக்கங்களில் நிர்வாக அலுவலகங்களையும், ஆவணக் காப்பகத்தையும் செயல்பட செய்துவிட்டார்கள். அப்படி என்றால் அந்தப் பகுதிக்கு அதிகம் செல்ல வேண்டி இருக்காதல்லவா? எவ்வளவு வன்மம் பார்த்தீர்களா? சிலை வைப்பதற்கே இவ்வளவு எதிர்ப்பென்றால் அவர் வாழ்ந்த காலத்தில் என்னவெல்லாம் செய்திருப்பார்கள்? அப்படிப்பட்ட ஆங்கிலேயரின் இனவெறி எதிர்ப்புகளை முறியடித்து, சட்டத் தொழிலில் வென்றவரான வி.பாஷ்யம் அய்யங்கார், இப்போதும் சென்னை உயர்நீதிமன்றத்தில் கால் மேல் கால் போட்டபடி கம்பீர சிலையாக உட்கார்ந்திருக்கிறார்.

நீதிபதி பதவியிலிருந்து விலகிய பிறகு வழக்கறிஞராக மீண்டும் தொழில் செய்ய ஆரம்பித்தார். 1908 நவம்பரில் முக்கிய வழக்கு ஒன்று, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சர்.அர்னால்டு ஒயிட், நீதிபதி அப்துர் ரகீம் முன்பு விசாரணைக்கு வந்தது. அதில் காலையிலிருந்து வாதங்களை முன்வைத்த அய்யங்கார் திடீரென மயங்கி விழுந்தார். அடுத்த இரண்டு நாட்கள் அளித்த சிகிச்சை பலனின்றி இதே நவம்பர் 18 அன்று மரணமடைந்தார்.

வாழ்ந்த காலத்திலும் அத்தகைய கம்பீரமான வாழ்க்கைக்குச் சொந்தக்காரராகவே திகழ்ந்தவர் பாஷ்யம். பணத்திற்கும் பாரம்பரியத்திற்கும் குறைவில்லாத சென்னை வெம்பாக்கம் அய்யங்கார் குடும்பத்தில் 1844ம் ஆண்டு ஜனவரி மாதம் பிறந்தவர். பள்ளிப்படிப்பில் கெட்டிக்காரரான அவர், பட்டப்படிப்பை முடித்துவிட்டு சட்டம் படிக்க ஆரம்பித்தார். அப்போது அரசாங்கப் பணி தேடி வந்தது. படிப்பதே அரசுப்பணிக்காகத்தான் என்ற நிலை இருந்த காலம் அது.

அதற்குத் தகுந்தாற்போல ஆட்களை உருவாக்குவதற்கு வசதியான கல்வித்திட்டத்தைத்தான் மெக்காலே உருவாக்கி இருந்தார். வந்த வாய்ப்பை நிராகரிக்க பாஷ்யம் குடும்பத்தாருக்கு மனமில்லை. சட்டப்படிப்பை விட்டுவிட்டு சார்பதிவாளர் வேலையில் சேர்ந்தார். தொடக்கத்தில் ஆர்வமாக பணிக்குச் சென்றவருக்கு, அரைத்த மாவையே அரைத்த ‘சப் ரிஜிஸ்ட்ரார்’ வேலை நாளடைவில் சலிப்பானது. அதிலிருந்து வெளியேறி மீண்டும் சட்டப்படிப்பைத் தொடர்ந்தார்.

‘பி.எல்’ படிப்பில் மெட்ராஸ் மாகாணத்திலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றார். அப்போது அட்வகேட் ஜெனரலாக இருந்த ஓ.சல்லிவன் என்கிற ஆங்கிலேயரிடம் ஜூனியராகச் சேர்ந்தார். சட்டத் தொழிலை நுணுக்கமாக கவனித்து கற்றுத் தேர்ந்தார். ஆனால், வழக்காடுவதில் தனக்கென தனி பாணியை வகுத்துக் கொண்டார். அழகு மிளிர, கேட்பவரை மயங்கடிக்கும் ஆங்கிலப் பேச்சாற்றல் அவரிடம் இல்லை. அடுக்குமொழியில் சுவை ததும்ப அவர் பேசியதில்லை.

தேவையற்ற ஆர்ப்பாட்டங்களோ, குரல் உயர்த்துதல்களோ இவரது வாதங்களில் இருக்காது. மென்மையாக, அலங்காரமின்றி அதே நேரத்தில் அழுத்தமாக விவரங்களை எடுத்துவைப்பார். வழக்கின் வெற்றிக்கு ஏற்ற கோணங்களை தெள்ளத் தெளிவாக சொல்வார். ஒன்றன்பின் ஒன்றாக துல்லியமாக பாஷ்யம் முன் வைக்கும் அம்சங்களை எதிர்த் தரப்பு மறுப்பது கடினமான காரியம். இதைவிட அய்யங்காரிடம் இருந்த அபார நினைவாற்றலைப் பார்த்து வியக்காதவர்கள் இல்லை.

எவ்வளவு பெரிய வழக்கானாலும் கையில் சிறு குறிப்பு கூட வைத்துக் கொள்ளாமல் வாதாடுவார். அந்தளவுக்கு வழக்கு மொத்தத்தையும் உள்வாங்கி வைத்திருப்பார். கிரிமினல் வழக்குகள் பக்கமே அவர் போனதில்லை. சொத்துப்பிரச்னை போன்ற சிவில் வழக்குகளில் தனிக்காட்டு ராஜாவாகத் திகழ்ந்தார். அதனால் அதுவரை இந்தியர் யாரும் வகித்திராத சென்னை மாகாண அரசு தலைமை வழக்கறிஞர் பணி இவரைத் தேடி வந்தது.

முதன்முறையாக 1897ல் ‘ஆக்டிங் அட்வகேட் ஜெனரல்’ பொறுப்பேற்ற அய்யங்கார், 1899ம் ஆண்டு வரை அப்பதவியில் இருந்தார். சட்டத்தில் பெற்றிருந்த நிபுணத்துவத்தால், 1897ல் சென்னை மாகாண சட்ட மேலவை உறுப்பினராக (எம்.எல்.சி) நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 1899, 1900 ஆகிய ஆண்டுகளிலும் எம்.எல்.சி. ஆக நியமனம் செய்யப்பட்டார். அந்தக் காலகட்டத்தில் அரசின் சட்டங்களுக்கு வடிவம் கொடுக்கும் பணியில் துணை நின்றார்.

முன்பே கிடைத்திருக்க வேண்டிய நீதிபதி பதவி, வெள்ளைக்கார நீதிபதிகள் தடுத்து வந்ததனால், தாமதமாக 1901 மார்ச் 8 அன்று பாஷ்யத்திற்கு கிடைத்தது. முதலில் தற்காலிக நீதிபதியாகப் பொறுப்பேற்ற இவர், அதே ஆண்டில் ஆகஸ்ட் முதல் தேதியிலிருந்து பணி நிலைப்பு பெற்றார். 2 ஆண்டுகள் 9 மாதங்கள் நீதிபதியாக இருந்தபோது அவர் அளித்த தீர்ப்புகள், புதையல் போன்ற கருத்துகளைக் கொண்டதாக இருக்கும்.

இந்திய பாராம்பரியத்தை, பண்பாட்டைப் பற்றி அக்கறை கொண்டதாக அமைந்திருக்கும். வழக்கறிஞர்கள், தொழிலின் மீது அக்கறை கொண்டவர்களாக இருக்க வேண்டுமென்று விரும்புவார். சரியான தயாரிப்பு, துல்லியம், அலட்சியமின்மை ஆகிய மூன்றும் வக்கீலுக்கு அவசியமென்பதை அடிக்கடி வலியுறுத்துவார். ஒரு முறை வழக்கைச் சரியாக உள்வாங்கிக் கொள்ளாமல் வாதாடிய மூத்த வழக்கறிஞரைப் பார்த்து, ‘காகிதத்தைப் பார்த்து வாசிப்பது, வழக்காடுவதாகாது’ (Reading is not pleading) என்று கடிந்து கொண்டார்.

இதே போல, சாட்சியங்களை விசாரிக்கும்போது நாகரீகத்தைக் கடைப்பிடிக்கவேண்டும் என்பார். குறுக்கு விசாரணைகளில் வரம்பு மீறப்படுவதை எப்போதும் அனுமதிக்கமாட்டார். வழக்கு, வாதம், கட்சிக்காரர்கள், வீடு தாண்டி வேறெதிலும் பாஷ்யம் ஈடுபாடு காட்டியதில்லை. ஒரு முறை அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட போது, ‘உங்களுக்கு மனதளவில் கொஞ்சம் ஓய்வு தேவை; மகிழ்ச்சி அளிக்கக்கூடிய புத்தகங்கள் எதையாவது படியுங்கள்’ என டாக்டர் அறிவுறுத்தினார்.

அப்போதும் கூட மனைவியை அழைத்து அவர் எடுத்து வரச் சொன்ன புத்தகம், சட்டம் பற்றிய பெரிய நூல் ஒன்றுதான். இவற்றுக்கு அப்பால், மயிலாப்பூர் லஸ் பகுதியில் நாள்தோறும் ஆர்வமாக நடைப்பயிற்சி செல்வார். வாதத்தின்போது என்றில்லாமல், வாழ்க்கையிலும் வார்த்தைகளை அளந்துதான் பேசுவார். மிகக்குறைவானவர்களோடுதான் நட்பு பாராட்டினார். எனினும் தன்னைச் சுற்றி நடப்பவற்றைப் பற்றி அறிந்து வைத்துக்கொள்வார்.

முன்னரே சொன்னது போல் ரொம்ப பிடித்த கறுப்பு அங்கியோடு நீதிமன்றத்தில் வாதாடும் போதே நினைவிழந்த பாஷ்யம் அய்யங்கார், ‘அச்சமில்லாமல், செய்யும் தொழிலின் மீது ஈடுபாடு காட்ட வேண்டும்’ என்ற தன் வாழ்வின் தாரக மந்திரத்தை இறுதி மணித்துளிகளிலும் மெய்ப்பித்தார். மயிலாப்பூர் லஸ் பகுதியில் அமைந்த பாஷ்யம் அய்யங்காரின் பங்களா மிகப்பிரபலமானது. முன்னொரு காலத்தில் ரிசர்வ் வங்கியின் பணப்பட்டுவாடா மையமாக இருந்த அந்த பங்களா, பிற்காலத்தில் ‘காமதேனு’ திரையரங்கமாக மாறியது.

காலவெள்ளத்தில் தியேட்டரும் போய், இப்போது கல்யாண மண்டபமாகி நிற்கிறது. இந்த வீட்டுக்கு வந்து அரசாங்கத்திலும் இன்ன பிற இடங்களிலும் வேலைக்காக பரிந்துரை பெற்றுச் சென்றவர்கள் ஏராளமானோர். அப்படி வருபவர்களைப் பார்ப்பதற்கே நாள்தோறும் தனியாக நேரம் ஒதுக்கியிருந்தார். பாஷ்யம் அய்யங்காரின் பெயருக்கு சென்னைப்பட்டினத்தில் அன்றைக்கு இருந்த மரியாதையே தனி. அவரது முகவரி அட்டையைக் (விசிட்டிங் கார்டு) கொடுத்தாலே வேலை கிடைத்தது. அதிலே அவர் கையெழுத்து போட்டுக் கொடுத்துவிட்டால் இரட்டிப்பு மரியாதை நிச்சயம். பெரிய வேலையும் உறுதி. அந்தளவுக்கு செல்வாக்காக வாழ்ந்த அவருக்கு குழந்தைச் செல்வங்கள் நிறைய உண்டு. அவர்களில் ஒருவரான ரெங்கநாயகி, புகழ் பெற்ற வக்கீலும் காங்கிரஸ் தலைவருமான எஸ்.சீனிவாச அய்யங்காரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் மகள் (பாஷ்யத்தின் பேத்தி) ‘பத்ம’ அம்புஜம்மாள், காந்தியவாதியாக வும் விடுதலைப்போராட்டத் தியாகியாகவும் திகழ்ந்தார்.

ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் நிறைந்திருந்த உயர்நீதிமன்றத்தில் சத்தமில்லாமல் இந்திய வக்கீல்களின் கொடியை உயரப் பறக்கவிட்டதிலும் ‘மயிலாப்பூர் வக்கீல்கள்’ என்ற பாரம்பரி யத்தை நிலைநிறுத்தியதிலும் பாஷ்யம் அய்யங்காருக்கு முக்கிய பங்குண்டு இவரது வாழ்க்கை பற்றி ஆங்கிலத்தில் நூல் வெளியாகி இருக்கிறது. ‘வி.பாஷ்யம் அய்யங்கார் அளவுக்கு வக்கீல் சமூகத்திற்கு வேறு யாரும் கௌரவம் தேடித் தந்ததில்லை’ என்ற பிரபல வழக்கறிஞர் பி.எஸ்.சிவசாமி அய்யரின் வார்த்தைகளை வரலாறு மெய்ப்பிக்கிறது.

கோமல் அன்பரசன்