சிட்டியிலே வசிப்போருக்குத்தான் சுகர் கம்ஃப்ளையண்ட் ஜாஸ்தியாம்!
நம்ம மத்திய, மாநில அரசுகள் மற்றும் சமூக அமைப்புகள் பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும் கட்டுப்பாடு மற்றும் பயிற்சி இல்லாததால் சர்க்கரை நோய் வருவது தவிர்க்க முயாததாகி விட்டது. இந்த சர்க்கரை நோய் என்பது ஒரு குழந்தை தன் தாயின் கருவில் இருக்கும்போதே மரபணுவின் மூலமாக தோன்றுகிறது. அது 20 அல்லது 30 வயதில் சுற்றுப்புற சூழ்நிலை காரணங்களால் தூண்டப்பட்டு தன்னை வெளிப்படுத்துகிறது. சுற்றுப்புற சூழ்நிலை என்பது மனிதன் நினைத்தால் மாற்றிக் கொள்ள கூடிய ஒன்று ஆகும். சுற்றுப்புறச் சூழ்நிலையை வாழ்க்கை முறைகளை மாற்றி அமைத்து கொள்வதன் மூலம் சர்க்கரை நோயை தவிர்க்கலாம் அல்லது தள்ளி போடலாம்.
மனிதனின் தோற்றத்துக்கும் பரிணாம வளர்ச்சிக்கும் எப்படி ஒரு நீண்ட நெடிய வரலாறு உண்டோ அதுபோல் சர்க்கரை நோய்க்கும் வரலாறு உண்டு. எகிப்து பிரமிடுகள் மூலம் அழியா புகழ் பெற்றுள்ள எகிப்தியரின் குறிப்புகளில் சர்க்கரை நோய் பற்றி கி.மு.1500ல் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்தியாவை சேர்ந்த சஸ்ருத் என்ற மருத்துவ மேதை சர்க்கரை நோயை மதுமேகம் என தம் நூலில் குறிப்பிட்டுள்ளார். இந்நோய், சோம்பேறிகளுக்கும் எடை அதிகமாக இருப்பவர்களுக்கும் அதிகமாக உண்பவர்களுக்கும் இனிப்பு, கொழுப்பு உள்ளவர்களுக்கும் அதிகம் வருகிறது என அதில் கூறியுள்ளார். இதனிடையே கிராமங்களைவிட நகர்ப்புறங்களில் வசிப்போருக்குத்தான் சர்க்கரை நோய் பாதிப்பு அதிகமாக உள்ளது என்று தெரிய வந்துள்ளது
வாழ்க்கை முறை மாற்றம், உணவுப் பழக்கவழக்கங்களில் வேறுபாடு உள்ளிட்ட காரணங்களினால் கிராமப்புறத்தைக் காட்டிலும் நகர்ப்புறங்களிலேயே அதிக அளவு சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படுகிறது. தமிழகத்தில் 45 சதவீதம் நகர்ப்புறங்கள் உள்ளதால், நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்தப் பாதிப்பு உள்ளவர்களுக்கு இதயம், சிறுநீரகம் அதிக அளவில் பாதிக்கப்படுகிறது. மேலும், உட்கொள்ளும் பல்வேறு மருந்துகள் ஏனைய உறுப்புகளையும் பாதிக்கின்றன.
சர்வதேச சர்க்கரை நோய் கூட்டமைப்பானது இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை சர்க்கரை நோயாளிகள் கணக்கெடுப்பை நடத்துகிறது.
2015-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 6.92 கோடி பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளது. 2040-இல் இந்த எண்ணிக்கை 12.35 கோடியாக அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எம்பாக்ளிஃப்ளோஸின் (Empagliflozin) என்ற மூலக்கூறினால் தயாரிக்கப்படும் மருந்துகளை உட்கொள்வோருக்கு இருதயம் சார்ந்த பாதிப்புகளால் உயிரிழக்கும் நிலை 38 சதவீதம் குறைந்துள்ளது. மேலும் சிறுநீரக நோய்களை 39 சதவீதம் குறைப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் 7,000 ஆயிரம் நோயாளிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.இவர்களில் 163 பேர் இந்தியர்கள் என்றும் தெரிய வந்துள்ளது