ஐ.பி.எல். நம்ம சென்னை சூப்பர் கிங்ஸ் டீமில் நம்ம தோனி!

ஐபிஎல் போட்டிகளில் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கே தோனி திரும்புகிறார், பழைய அணியில் இருந்து 5 வீரர்களை அணிகள் தக்கவைத்துக்கொள்ளலாம் என ஐபிஎல் ஆட்சிக்குழு அறிவித்துள்ளது. கொல்கத்தாவில் நடைபெற்ற ஐபிஎல் ஆட்சிக்குழு கூட்டத்தில் ஏலம் குறித்து புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளின் தடைக்காலம் ஜூலை மாதத்துடன் முடிவடைந்தது. இதனால் இரு அணிகளும் மீண்டும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கின்றன.
கடந்த இரு ஆண்டுகளாக புனே, குஜராத் அணிகளுக்காக விளையாடிய வீரர்களிலிருந்து சென்னை, ராஜஸ்தான் அணிகள் தங்களுக்கான வீரர்களைத் தேர்வு செய்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புனே, குஜராத் அணிகளில் விளையாடிய வீரர்களில் தோனி, சுரேஷ் ரெய்னா, ஜடேஜா, பென் ஸ்டோக்ஸ், ஸ்மித், மெக்குல்லம், டுபிளெஸ்ஸி போன்ற முக்கிய வீரர்கள் இடம்பெற்றார்கள். எனவே இந்த வீரர்களைத் தேர்வு செய்ய சென்னை, ராஜஸ்தான் அணிகள் மிகுந்த ஆர்வம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக 2013-ம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக புகார் எழுந்தது. அதுதொடர்பாக விசாரணை நடத்தி உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த்ரா மற்றும் அவர்கள் சார்ந்த அணிகள் குற்றவாளிகள் என்று முத்கல் குழு கூறியிருந்தது.
அந்த அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை விதிப்பது குறித்து முடிவெடுக்க ஆர்.எம்.லோதா தலைமையிலான மூவர் குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது. 6 மாத கால விசாரணைக்குப் பிறகு தனது தீர்ப்பை லோதா குழு 2015ம் வருடம் ஜூலை 14-ஆம் தேதி அளித்தது. அந்த தீர்ப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள், ஐபிஎல் போட்டிகளில் 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருந்தது. தடை நிறைவடைந்த நிலையில் 2 அணிகளும் வரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்கின்றன.
சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய என். சீனிவாசன், ஐபிஎல் போட்டியில் தோனியின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் களமிறங்கும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கே தோனி திரும்புகிறார். அதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.