தேவர் ஜெயந்தி – சில நினைவுகள்!
இந்திய அரசியலையே பசும்பொன்னை சுற்றி வர செய்தவர் முத்துராமலிங்க தேவர்.ஆங்கிலேய அரசை எதிர்த்துப் போராட, சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்திய தேசிய ராணுவத்திற்கு தமிழகத்தில் இருந்து பெரும் படையினைத் திரட்டி அனுப்பிய பெருமை தேவரையேச் சாரும். 1920-ஆம் ஆண்டு அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தில் ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் அமலில் இருந்த மிகவும் கொடுமையான குற்றப்பரம்பரை என்கிற சட்டத்திற்கு எதிராக முதன் முதலில் போராடி அச்சட்டத்தினை அகற்றியவர் தேவர் ஆவார். அப்பேர்ப்பட்டவர் பிறந்த & காலமான நாளையே தேவர் ஜெயந்தி என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தை சேர்ந்த உக்கிரப்பாண்டி தேவர், இந்திராணி தம்பதிக்கு கடந்த 30.10.1908ம் ஆண்டு மகனாக பிறந்தவர் தான் முத்துராமலிங்கத்தேவர். வீரம், விவேகம், நேர்மை ஆகியவற்றுடன் வாழ்ந்த ஆதி முத்துராமலிங்கத் தேவரின் பெயரையே வைக்க வேண்டும் என்று உறவினர்கள் விரும்பியதால் அப்பெயரை வைத்ததாக கூறப்படுகிறது.
முத்துராமலிங்க தேவர் 6 மாத கைக்குழந்தையாக இருந்தபோது அவரது தாய் இந்திராணி இறந்துவிட்டார். இதனால் உக்கிரப்பாண்டி தேவர் 2வது திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணும் சிறிது காலத்தில் இறந்துவிட்டதால் மேலும் ஒரு பெண்ணை உக்கிரப்பாண்டி தேவர் மணமுடித்தார். இதனால் பாட்டி பார்வதியம்மாள் அரவணைப்பில் பசும்பொன்னை அடுத்துள்ள கல்லுபட்டி என்கிற கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவர் வளர்ந்தார். அப்போது கமுதியை சேர்ந்த ஆயிஷா பேபி என்ற முஸ்லிம் பெண்ணிடம் முத்துராமலிங்க தேவர் பால் குடித்து வளர்ந்துள்ளார். இதனால் அந்த முஸ்லிம் பெண்ணை முத்துராமலிங்க தேவர் ஒருபோதும் மறந்தது இல்லை. முத்துராமலிங்க தேவர் தனது 6 வயதில் கல்வி வாழ்க்கை தொடங்கினார். அந்த கால வழக்கத்தின்படி குருகுல வாழ்க்கையை கல்வியாக திண்ணைப்படிப்பு தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த ஆசிரியரிடம் கற்றார்.
இதன் பிறகு 1917ம் ஆண்டு கமுதியில் இருந்த அமெரிக்க மிஷன் ஆரம்ப பள்ளியில் சேர்ந்து முத்துராமலிங்க தேவர் கல்வி பயின்று வந்தார். கடந்த 1924ம் ஆண்டு 5ம் வகுப்பை முடித்த முத்துராமலிங்க தேவர் மதுரையில் புகழ்பெற்று விளங்கும் ஐக்கிய கிறிஸ்தவ பள்ளியில் உயர்நிலை கல்வி பயின்றார். இந்நிலையில் கடந்த 1927ம் ஆண்டு குடும்ப சொத்து வழக்கு தொடர்பாக பிரபல காங்கிரஸ் பிரமுகரும், முன்னணி வழக்கறிஞருமான சீனிவாசனை சந்திக்க முத்துராமலிங்க தேவர் சென்னை சென்றார். அப்போது சென்னையில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்துக்கு முத்துராமலிங்க தேவரை அழைத்துச்சென்ற வக்கீல் சீனிவாசன் சிறப்பு பார்வையாளர் பகுதியில் அமர வைத்ததால் சுபாஷ் சந்திரபோசின் உணர்ச்சிமிகு உரையை கேட்டு, விடுதலை போராட்டத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து கொள்ள முத்துராமலிங்க தேவர் தீர்மானித்தார்.
அன்று முதல் விலை உயர்ந்த ஆடைகளை உடுத்துவதை நிறுத்திக்கொண்ட முத்துராமலிங்க தேவர் தூய்மையான கதர் ஆடைகளை விரும்பி அணிய தொடங்கி முழு காங்கிரஸ்காரராக தன்னை மாற்றிக்கொண்டார். வழக்கறிஞர் சீனிவாசன் இல்லத்தில் தங்கி இருந்தபோது பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் தேசிய உணர்வை கண்டு மகிழ்ந்தார் நேதாஜி.
இந்நிலையில் 1935/36ல் நடந்த தலைவர் தேர்தலில் பட்டாபி சீதாராமையாவை நிறுத்தினார் காந்திஜி. அவரை எதிர்த்து நேதாஜி போட்டியிட்டார். இதனால் நேதாஜிக்கு ஆதரவாக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் களத்தில் இறங்கியதால் தேர்தலில் வெற்றி பெற்றார். காங்கிரசின் பல கொள்கைகளில் முரன் கொண்டிருந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1939ம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்குள் இருந்தபடியே ‘அகில இந்திய பாா்வா்டு பிளாக்’ என்ற இயக்கத்தை தொடங்கினார். அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சியில் பணியாற்ற தொடங்கிய முத்துராமலிங்க தேவர் தொடர்ந்து 3 முறை மக்களவைக்கு தேர்வானாா். இந்திய அரசியலில் பெரிய கட்சிகளின் ஆதரவு இல்லாமல் 3 முறை (1952, 1957, 1962) மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மட்டுமே என்பதுதான் இன்று வரை வரலாறாக உள்ளது.
கடந்த 1954ம் ஆண்டு மொழி வாரி மாநில பிரிவினையை எதிர்த்து மக்கள் நடத்திய போராட்டத்தை ராஜாஜி அரசு பலவந்தமாக அடக்கியது. அப்போது பசும்பொன் முத்துராமலிங்க தேவரை ஒரு வழக்கில் கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதில் இருந்து தப்பிக்க தலைமறைவாக இருந்தபோது சிறு வயதில் பாலூட்டி வளர்த்த ஆயிஷா பேபி காலமாகிவிட்டார். அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு முத்துராமலிங்க தேவர் எப்படியும் வருவார் என்பதால், அவரை கைது செய்ய புலனாய்வு போலீசார் கமுதியை முற்றுகையிட்டு காத்திருந்தனர். அப்போது இஸ்லாமிய பெரியவர் போன்ற தோற்றத்தில் வந்த ஒருவர் ஆயிஷா பேபி உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அடுத்த கணமே காணாமல் போய்விட்டார். அந்த பெரியவர் முத்துராமலிங்க தேவர் என்பது பிறகு தான் தெரிய வந்தது.
கடந்த 1962ம் ஆண்டு தேர்தலில் முத்துராமலிங்க தேவர் வெற்றி பெற்றும் உடல்நல குறைவு காரணமாக அவரால் நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்க முடியாமல் போனது.2 ஆண்டு காலமாக உடல் நலம் இல்லாமல் இருந்த தேவர், முதலில் மதுரை ஆஸ்பத்திரியிலும் பின்னர் வேலூர் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்றார். சிறுநீரகக் கோளாறுக்காக அவர் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்று வேலூர் டாக்டர்கள் யோசனை தெரிவித்தனர். ஆனால் தேவர் மறுத்துவிட்டார். மதுரையை அடுத்த திருநகரில் உள்ள அவர் வீட்டில் தங்கி, நாட்டு மருந்துகளை மட்டும் சாப்பிட்டு வந்தார்.
உடல் நிலை மோசம் அடைந்தது. அவரைக் காப்பாற்ற டாக்டர்கள் மிகவும் முயன்றும் பலன் இன்றி, 1963 அக்டோபர் 29 அதிகாலை 4.50 மணிக்கு (பிறந்த நாளுக்கு ஒரு நாளுக்கு முன்) காலமானார். “என் உடலை, சொந்த ஊரான பசும்பொன் கிராமத்தில் அடக்கம் செய்யவேண்டும்” என்றுஇறப்பதற்கு முன் தேவர் விருப்பம் தெரிவித்திருந்தார்.
அதன் படி, மதுரையில் இருந்து 90 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பசும்பொன் கிராமத்துக்கு (ராம நாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகா) தேவரின் உடல் கொண்டு போகப்பட்டது. தேவர் மரணம், தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தியது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானவர்கள் பசும்பொன் கிராமத்துக்கு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இறுதி ஊர்வலம், 30ந்தேதி காலை 11 மணிக்கு புறப்பட்டது. ஊர்வலத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
தி.மு.கழகத் தலைவர் அண்ணா, அமைப்புச் செயலாளர் என்.வி.நடராசன், அன்பழகன், நடிகர்கள் எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ராஜேந்திரன், டி.வி.நாராயணசாமி, சட்டசபை உறுப்பினர்கள் சசிவர்ண தேவர், சீமைசாமி, தமிழ்நாடு சுதந்திரா கட்சித் தலைவர் சா.கணேசன், எஸ்.எஸ்.மாரிசாமி, மூக்கைய தேவர், அன்பில் தர்மலிங்கம் மற்றும் பலர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். ஊர்வலம், தேவரின் தோட்டத்தை அடைந்தது. அங்கு உடல் அடக்கம் செய்யப்பட்டது. அங்கே நடந்த அனுதாபக் கூட்டத்தில், அனைத்துக்கட்சியினர் பேசினார்கள்.
அண்ணா பேசுகையில் கூறியதாவது:_ “தேவரை இழந்தது எனக்கு தாங்க முடியாத வேதனை அளிக்கிறது. தென்பாண்டி மக்களின் இதயத்தைக் கவர்ந்த தலைவர் அவர். எது எது மக்களுக்குத் தேவையோ, அவைகளையெல்லாம் வீரத்தோடும், அஞ்சா நெஞ்சத்தோடும் எடுத்துச் சொன்னார். ஒருமுறை சட்டசபையில் அவரைப் பாராட்டி நான் பேசினேன். “உங்களைத் திட்டும் தேவரை நீங்கள் பாராட்டலாமா?” என்று சிலர் கேட்டார்கள். “அவர் செய்யும் நல்ல செயல்களை எடுத்துச் சொல்லாவிட்டால் என் மனச்சாட்சிக்கு துரோகம் செய்தவன் ஆவேன்” என்று பதில் அளித்தேன்.” இவ்வாறு அண்ணா கூறினார்.
தேவர் மறைவு குறித்து, காமராஜர் விடுத்த அனுதாபச் செய்தியில், “தேவர் மரணம் குறித்து மிகவும் வருந்துகிறேன். சுதந்திரப் போராட்டத்தில், வீரத்துடன் ஈடுபட்டார். மனதில் சரி என்று பட்ட கொள்கையை தைரியத்துடன் சொல்லக்கூடியவர்” என்று குறிப்பிட்டு இருந்தார். சுதந்திரா கட்சித் தலைவர் ராஜாஜி விடுத்த செய்தியில், “நேர்மை, பக்தி, தைரியம் ஆகி யவை ஒரு தனி மனிதனை நன்கு பிரகாசிக்கச் செய்யும். அந்தப் பண்புகளைக் கொண்டவர் முத்துராமலிங்க தேவர். அதனால் அவர் புகழுடன் பிரகாசித்தார்” என்று கூறியிருந்தார்.
இதை அடுத்து அரசியல் வரலாற்றில் இன்றும் தேவரின் பிறந்த நாள் முக்கிய இடம் வகிக்கிறது. முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி முதல் ஜெயலலிதா வரை முத்துராமலிங்கத் தேவருக்கு முக்கியத்துவம் அளித்து வந்தனர். மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் முத்துராமலிங்கத் தேவருக்கு சிலை வைத்தார். அவரது சொந்த ஊரான பசும்பொன்னில், மறைந்த தலைவருக்கு கருணாநிதி நினைவிடம் கட்டினார். 1994-ம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு 13.5 கிலோ தூய தங்கக் கவசத்தை வழங்கினார். இன்றும் தேவரின் நினைவு நாளில் அவருக்கு சிறப்பாக பூஜைகள் செய்யப்பட்டு, தங்க கவசம் அணிவிக்கப்படுகிறது.
💥பத்தாம் வகுப்பு வரை படித்த தேவர், ஆங்கிலத்திலும், தமிழிலும் மணிக் கணக்கில் பேசக் கூடிய ஆற்றல் படைத்தவர். தமிழ் நாட்டின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.
💥விடுதலைப் போராட்டத்தில் பல முறை சிறை சென்றார். அவர் வாழ்ந்த நாட்கள் 20,075. அதில் சிறையில் கழித்த நாட்கள் 4,000. ஜமீன் பரம்பரையில் பிறந்தாலும், எளிய வாழ்க்கை நடத்தினார்.
💥33 கிராமங்களுக்கு சொந்தக்காரர் என்றாலும், வருமானத்தில் பெரும் பகுதியை ஏழை மக்களுக்காக செலவிட்டார். பொதுத்தொண்டு செய்வதை முழு நேரப்பணியாக மேற்கொள்ள விரும்பி திருமணம் செய்து கொள்ளாமல் துறவிபோல் வாழ்ந்தார்
கட்டிங் கண்ணையா!