கடன் வாங்க ஆளில்லை: வங்கிகள் கவலை!

கடன் வாங்க ஆளில்லை: வங்கிகள் கவலை!

கடந்த நவம்பர் 8 ஆம் தேதி, பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். அதைத் தொடர்ந்து, பணப்புழக்கம் வெகுவாக குறைந்து, நாட்டில் கடும் பணத்தட்டுப்பாடு உருவானது.அதைத் தொடர்ந்து, ஜனவரி 1 ஆம் தேதி முதல், ஏடிஎம்களில் 4,500 ரூபாய் எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பெரும்பாலான ஏடிஎம்கள் வேலை செய்யவில்லை. ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்டு 65 நாட்கள் கடந்து விட்ட நிலையில் பெரும்பாலான இடங்களில் ஏடிஎம்களிலும், வங்கிகளிலும் மக்கள் நீண்ட வரிசையில் நிற்கும் நிலையே நீடிக்கிறது.

bank jan 14a

இதனிடையே கடந்த ஆண்டு நவம்பரில் வாபஸ் பெறப்பட்ட உயர் மதிப்பிலான ₹500, ₹1,000 நோட்டு 95 சதவீதத்துக்கு மேல் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டு விட்டது. டெபாசிட் மலையளவுக்கு அதிகரித்துள்ள நிலையில், வட்டி விகிதங்களும் குறைக்கப்பட்டு விட்டன. இது கடன் வாங்குவோருக்கு ஒரு வகையில் சாதகம்தான் என்றாலும், எதிர்பார்த்த அளவுக்கு பலன் தரவில்லை. பண மதிப்பு வாபசுக்கு பிறகு மக்களின் வாங்கும் திறன் வெகுவாக குறைந்து விட்டது.

ஆட்டோமொபைல் துறைக்கு இதனால் பேரிடி. 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாகன விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளது. வீடு விற்பனையும் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. இதுபோல் கடன் வழங்குவதும் குறைந்து விட்டது. உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக வழங்கப்படும் கடன் கடந்த நவம்பரில் 6.7 % சரிந்துள்ளது.

இதுகுறித்து பொருளாதார நிபுணர்களும், வங்கியாளர்கள் சிலரும், “பணம் டெபாசிட் வங்கிகளில் குவிந்து விட்டது. ஆனாலும், நாட்டின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் இல்லாததால், ஏற்கெனவே திணறும் தொழில்துறைகள் தற்போது முதலீடு செய்ய தயங்குகின்றன. இதனால் பணத்தேவை இருந்தும் கடன் வாங்க அவை முன்வரவில்லை. தொழில்துறை முன்னேற்றத்துக்கு கடன் வழங்க மத்திய அரசு வலியுறுத்தினாலும், நடைமுறையில் இது சாத்தியமின்றி உள்ளது. தற்போது வங்கியில் உள்ள டெபாசிட்டை கடன் விநியோகம் போன்ற நடவடிக்கைகள் மூலம் லாபமாக மாற்ற வங்கிகளுக்கு 9 முதல் 12 மாதங்கள் வரை ஏற்படும். டெபாசிட் அதிகரிப்பு நீண்ட கால அடிப்படையில் பலன் தரலாம். ஆனால், வரும் மார்ச் மாதத்தில் மூலதன தேவையை பூர்த்தி செய்ய மத்திய அரசு உதவினால்தான் உண்டு.

ரிசர்வ் வங்கி புள்ளிவிவரப்படி, உற்பத்தி மற்றும் சேவை துறைக்கு கடன் வழங்குதல் கடந்த 6 ஆண்டுகளில் 60 சதவீதம் சரிந்து ₹1.9 லட்சம் கோடியாக உள்ளது. இந்த இரண்டு துறைகளில், 65 சதவீத பங்களிப்பை கொண்ட உற்பத்தி துறையில் கடன் தேவை கடந்த 2011 மார்ச் 31ம் தேதிப்படி 3.1 லட்சம் கோடியாக இருந்தது. இது தற்போது 77 சதவீதம் சரிந்து வெறும் ₹72,454 கோடியாகி விட்டது. குறிப்பாக, பெரிய அளவில் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் கடன் வாங்குவது 69% குறைந்து விட்டது. சேவை துறைகளுக்கு கடன் வழங்குதல் 46% சரிந்து 2015 மார்ச்சில் ₹87,689 கோடியானது.

இது கடந்த ஆணடு மார்ச்சில் சிறிதளவே உயர்ந்து 1.1 லட்சம் கோடியானது. போக்குவரத்து துறை மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் கடன் தேவை 56 சதவீதம் குறைந்துள்ளது. பொருளாதார மந்த நிலையால் வராக்கடன் அதிகரித்துள்ளது கடன் தேவை குறைவதற்கு முக்கிய காரணமாகிவிட்டது” என தொழில்துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், ரூபாய் நோட்டு வாபஸ் ஆனதால் சிறு, குறு, நடுத்தர தொழில்துறையில் 35% வேலையிழப்பு, முதலீடு செய்ய தயங்கும் நிலையை உருவாக்கி விட்டதாக அவர்கள் கூறுகின்றனர்..

Related Posts

error: Content is protected !!