டெல்லி ஹோட்டல் அறைகள் இப்போது ‘தங்க விலை’: ஒரு இரவு தங்க ரூ. 60,000 வரை கட்டணம்!

டெல்லி ஹோட்டல் அறைகள் இப்போது ‘தங்க விலை’: ஒரு இரவு தங்க ரூ. 60,000 வரை கட்டணம்!

லைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் (Delhi-NCR) உள்ள ஹோட்டல் அறைகளின் வாடகை தற்போது கற்பனை செய்ய முடியாத அளவிற்கு எகிறியுள்ளது. ஒரு சாதாரண அறைக்கே ஒரு இரவுக்கு ரூ. 40,000 முதல் ரூ. 60,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக இந்திய ஹோட்டல் சங்கம் (HAI) தெரிவித்துள்ளது. இந்தத் திடீர் விலை உயர்வுக்கும், டெல்லியில் குவியப்போகும் உலகளாவிய விஐபிகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

டெக் ஜாம்பவான்கள் வருகையும் ‘AI இம்பாக்ட் சமிட்டும்’

இந்தக் கட்டண உயர்வுக்கு மிக முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுவது பிப்ரவரி 16 முதல் 20 வரை நடைபெறவிருக்கும் ‘AI இம்பாக்ட் சமிட்’ (AI Impact Summit). உலகத்தையே ஆட்டிப்படைக்கும் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் டெல்லியில் முகாமிட உள்ளனர்.

  • என்விடியா (Nvidia) சிஇஓ ஜென்சன் ஹுவாங்

  • ஓபன் ஏஐ (OpenAI) நிறுவனத்தின் சாம் ஆல்ட்மேன்

  • மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ்

  • கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை

இவர்கள் தவிர இன்னும் பல சர்வதேசத் தொழில்நுட்ப வல்லுநர்கள் இதில் பங்கேற்கின்றனர். இவர்களின் வருகையால் டெல்லியின் முக்கிய ஹோட்டல்கள் அனைத்தும் இப்போதே நிரம்பிவிட்டன.

கிரிக்கெட் மற்றும் திருமண சீசன்

இது ஒருபுறமிருக்க, இந்த மாதத்தில் நடைபெறும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளும், சுப முகூர்த்த நாட்களும் சேர்ந்து கொண்டு ஹோட்டல் துறையை பிஸியாக்கி விட்டன. சாதாரண அறைகள் மட்டுமல்லாது, மிக விலை உயர்ந்த சூட் (Suite) அறைகள் கூட 100% முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. இதனால் தேவைக்கும், விநியோகத்திற்கும் (Demand-Supply) இடையே பெரும் இடைவெளி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மத்திய டெல்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் அறை கிடைப்பது குதிரைக்கொம்பாக மாறியுள்ளது.

வருவாயை ஈடுகட்டும் ஹோட்டல்கள்

கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் ஹோட்டல் துறை எதிர்பார்த்த அளவிற்கு வருமானம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. புதுடெல்லியில் உள்ள ஈரோஸ் ஹோட்டலின் பொது மேலாளர் தவிந்தர் ஜுஜ் இது குறித்து கூறுகையில், “ஆண்டின் தொடக்கத்தில் வணிகம் சற்று மந்தமாகவே இருந்தது. சில சந்தைகளில் வருவாய் வளர்ச்சி எதிர்பார்த்த அளவை எட்டவில்லை. எனவே, இப்போது ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் தேவையைக் கொண்டு அந்த இழப்பை ஈடுகட்ட ஹோட்டல் துறை முயன்று வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

மொத்தத்தில், அடுத்த சில நாட்களுக்கு டெல்லியில் ஒரு அறை பிடிப்பது என்பது கிட்டத்தட்ட ஒரு சவாலான காரியமாகவே இருக்கப் போகிறது.

Related Posts

error: Content is protected !!