மெட்ரோ ரயில் & பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் – டெல்லி முதல்வர் அறிவிப்பு!

மெட்ரோ ரயில் & பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம்  – டெல்லி முதல்வர் அறிவிப்பு!

இந்தியாவிலேயே முதல் முறையாக நவீன முறையில் அமைக்கப்பட்ட டெல்லியில் மெட்ரோ ரயில் மற்றும் அங்குள்ள பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அறிவித்துள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த 17வது மக்களவை தேர்தலில் டில்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி படுதோல்வியடைந்தது. டில்லியில், சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில், டில்லியில் மெட்ரோ ரயில் மற்றும் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி இலவசமாக பயணம் செய்யலாம் என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அறிவித்துள்ளார்.

பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் அறிவிப்புக் குறித்து அவர் பேசுகையில், ”அதிக கட்டணம் என்பதற்காக எக்ஸ்பிரஸ் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்ய முடியாத பெண்களுக்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. எனினும், டிக்கெட் வாங்கி பயணம் செய்யும் அளவுக்கு வசதி படைத்த பெண்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தாமல் உண்மையிலேயே தேவைப்படும் பெண்களுக்கு இந்த சலுகையை விட்டுக்கொடுக்க வேண்டும்” என அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.

“இதன்மூலம் பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் அணுகுமுறை முன்னேற்றம் அடையும். இந்த இலவச பயண அனுமதி திட்டத்துக்காக மத்திய அரசிடம் ஒப்புதல் கேட்கப் போவதில்லை. டெல்லி மாநில அரசே இதற்கான முழு நிதிச்சுமையை ஏற்றுக்கொள்ளும். இந்த புதிய திட்டம் 2 முதல் 3 மாதங்களுக்குள் சோதனை முறையில் அமல்படுத்தப்படும்” என்று தெரிவித்தார். இந்த திட்டத்தால் டெல்லி அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 700 கோடி இழப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் டெல்லியில் வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கான கட்டணத்தைக் குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக மின் கட்டணத்தில் ஒரு பகுதியாக உள்ள மாறாத நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டண விகிதங்களை குறைக்கும்படி மின் விநியோகக் கம்பெனிகளுக்கு தெரிவித்துள்ளோம் எனவும் கெஜ்ரிவால் தெரிவித்தார்.