பொதுத் துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் – தமிழக அரசு அறிவிப்பு!

பொதுத் துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் – தமிழக அரசு அறிவிப்பு!

கடந்த பல மாதங்களாக எந்த வித பணியும் செய்யாத நிலையிலும், போதிய வருவாய் வராத நிலையிலும் தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2 லட்சத்து 91 ஆயிரத்து 975 தொழிலாளர்களுக்கு 210 கோடியே 48 லட்சம் ரூபாய் போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு இதோ:

“நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் தொழிலாளர்களின் உழைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. இவர்களின் உழைப்பால்தான் நாடு சிறப்பான பொருளாதார வளர்ச்சியை அடைந்து வருகிறது. பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் அளிக்கும் வகையில், இந்த ஆண்டு தீபாவளித் திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடும் பொருட்டு 2019-20 ஆம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

கோவிட்-19 தொற்றின் தாக்கம் உலகெங்கிலும் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களாலும் உணரப்பட்டுள்ளது. நோய்த்தொற்றின் தாக்கத்தினைக் குறைக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டதால் மாநில பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் சட்டப்படியான வாரியங்கள் உள்ளடங்கிய அனைத்து வணிக நிறுவனங்களின் செயல்பாட்டைப் பாதித்துள்ளது.

குறிப்பாக, தொழிலாளர் முக்கியத்துவம் வாய்ந்த அரசு நிறுவனங்களான தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம் மற்றும் பல நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆறு மாதங்களில் பொதுப் போக்குவரத்து இயங்காததாலும், தொழிற்சாலைகள் முழு அளவில் செயல்படாததாலும் மேற்குறித்த நிறுவனங்களின் இயக்க வருமானம் மிகவும் குறைந்துவிட்டது.

இருந்த போதிலும் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் குடும்ப நலனைக் கருத்தில் கொண்டு அனைத்துத் தொழிலாளர்களுக்கும் தொடர்ந்து முழு மாத ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. லாபம் ஈட்டும் அரசு பொதுத்துறை நிறுவனங்கள் போனஸ் வழங்கத் தேவையான ஒதுக்கக்கூடிய உபரித்தொகை இருந்த போதிலும், மேற்குறித்த சவால்களையே எதிர்கொண்டுள்ளது.

திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015-இன் படி, போனஸ் பெறத் தகுதியான சம்பள உச்சவரம்பு ரூ.21,000/ என உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி போனஸ் கணக்கிட இருந்த மாதாந்திர சம்பள உச்சவரம்பும் ரூ.7,000/ ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி 2019-20 ஆம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை கீழ்க்கண்டவாறு வழங்கப்படும்.

லாபம் ஈட்டியுள்ள/ நட்டம் அடைந்துள்ள அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத் தொகை என மொத்தம் 10 விழுக்காடு வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

இதனால் போனஸ் பெறத் தகுதியுள்ள நிரந்தரத் தொழிலாளர்கள் போனஸ் மற்றும் கருணைத் தொகையாக ரூ.8,400 பெறுவர். மொத்தத்தில், தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2 லட்சத்து 91 ஆயிரத்து 975 தொழிலாளர்களுக்கு 210 கோடியே 48 லட்சம் ரூபாய் போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

அரசின் இந்த நடவடிக்கை பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் தீபாவளிப் பண்டிகையைச் சீரோடும், சிறப்போடும் கொண்டாட வழிவகை செய்யும்”.இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது

error: Content is protected !!