அம்பான் என்ற பெயரிடப்பட்ட புயலால் வெக்கை அதிகரிக்கும்!

அம்பான் என்ற பெயரிடப்பட்ட புயலால் வெக்கை அதிகரிக்கும்!

கொரோனா பரவலை மிஞ்சு விதத்தில் , தமிழகம், புதுச்சேரியில் இன்று 9 இடங்களில் வெயில் செஞ்சுரி டிகிரி அடித்தது. அதிகபட்சமாக வேலூரில் 104.7 டிகிரி பாரன்ஹூட் வெப்பம் பதிவானது. தொண்டியில் 102.2, தருமபுரியில் 101.3, திருத்தணி, கடலூர், புதுச்சேரியில் தலா 101.1, சேலத்தில் 100.5, அதிராம்பட்டினம், பரங்கிப்பேட்டையில் தலா 100.4 டிகிரி பாரன்ஹூட் வெப்பம் பதிவாகி உள்ளது. இந்நிலையில் தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நேற்றைய முன்தினம் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வழக்கம் போல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று மதியத்திற்கு மேல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருப்பெற்றது. இதனைத் தொடர்ந்து காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் மீண்டும் வலுப்பெற்று தற்போது சூறாவளிப் புயலாக வலுப்பெற்றுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள இந்த புயலுக்கு அம்பான் ( Amphan ) என்று பெயரிடப்பட்டுள்ளது. இது தாய்லாந்து பரிந்துரை செய்யப்பட்ட பெயராகும்.

இந்த சூறாவளி புயலானது மேலும் வலுப்பெற்று அதிதீவிர சூறாவளிப் புயலாக மாறும் என்றும், நாளை வரை வடமேற்கு திசையில் நகர்ந்து பின்னர், திசையில் மாற்றம் பெற்று வடக்கு மற்றும் வட கிழக்கு திசையை நோக்கி நகரும் என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இப் புயலின் தாக்கமானது வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தின் கடலோர மாவட்டங்களில் இருக்கும் என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த அம்பான் புயல் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மற்றும் கடலோர மாவட்டங்களில் நாளை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் நகர்வு காரணமாக வரும் திங்கட்கிழமை முதல் அடுத்த 5 நாட்களுக்கு வட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்ப நிலை உயர்ந்து காணப்படும். குறிப்பாக இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக காணப்படும். இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற பகுதிகளில் 40 முதல் 42 டிகிரி வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாகவும் இதனால் மக்கள் யாரும் தேவையில்லாமல் மதிய நேரங்களில் வெளியே சுற்ற வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!