இந்தியாவில் ‘டே ஜீரோ’ எனச் சொல்லப்படும் முற்றிலும் வறட்சி! எச்சரிக்கை ரிப்போர்ட்

இந்தியாவில் ‘டே ஜீரோ’ எனச் சொல்லப்படும் முற்றிலும் வறட்சி! எச்சரிக்கை ரிப்போர்ட்

நாம் வாழும் பூமியில் 70 % சதவீதம் நீர் இருந்தாலும், அதில் வெறும் 3% சதவீதம் மட்டுமே தூய்மையானதாக உள்ளது. உலகில் சுமார் ஒரு கோடி மக்கள் போதுமான தண்ணீர் கிடைக்காமல் துன்பத்தில் உள்ளனர் என முன்னரே ஐ நா தெரிவித்துள்ளது. இந்தக் குடிநீர் பஞ்சம் உலகம் முழுக்க இருக்கிறது, அதை நிவர்த்தி செய்வதற்கான வழிகளை அரசும் மேற்கொள்வதில்லை – மக்களும் அதற்கு முறையாக ஒத்துழைப்பதில்லை. ஆனாலும் சர்வதேச அளவில் பெரும் தண்ணீர் பஞ்சம் ஏற்படபோகிறது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் டிவியிலும், சமூக வலைதளங்களிலும் எச்சரித்து வருவதை நம்மில் பலர் நம்பவில்லை. ஆனால் நம் இந்தியாவிலும் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்படப்போகிறது என்பதற்கான புதிய ஆதாரமாக செயற்கைக்கோள் தரவுகள் வெளியாகியுள்ளன.

ஆம்.. உலகம் முழுவதும் உள்ள நாடுகளின் நீர்நிலைகள் வற்றிப்போவதை ஆராய்ச்சி செய்த செயற்கைக்கோள் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு அபாய சங்கை ஊதியுள்ளது. இந்தியா மட்டுமின்றி, மொராக்கோ, ஈராக், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என தெரிவித்துள்ளது. இது குறித்து தி கார்டியன் நாளிதழில் வெளியான தகவலின் படி, உலகில் உள்ள 5 லட்சம் அணைகளின் நீர் அளவீடுகளை ஆய்வு செய்த செயற்கைக்கோள், பருவநிலை மாற்றத்தால், இந்தியாவில் ‘டே ஜீரோ’ எனச் சொல்லப்படும் முற்றிலும் வறட்சியை சந்திக்கும் தருணம் முன்பு கணிக்கப்பட்டதை விட முன்கூட்டியே வரும் என எச்சரிக்கிறது.

இந்தியாவில் ஏற்கனவே நதிநீர் பங்கீடு விவகாரத்தில் மாநிலங்களுக்கு இடையில் மோதல் முற்றியுள்ள நிலையில், வருங்காலம் இன்னும் மோசமாக இருக்கும் என்கிறது இந்த ஆய்வின் முடிவுகள்.

குறைவான மழைப்பொழிவு காரணமாக மத்திய பிரதேசத்தில் உள்ள சாகர் அணை இதுவரை இல்லாத அளவுக்கு குறைவான நீர்மட்டத்துடன் காட்சியளிப்பதாகவும், இதனால் 30 மில்லியன் மக்கள் தண்ணீருக்காக தவித்துவருவதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

இதனிடையே பி.டி.ஐ ஏஜன்சி செய்தியின்படி, வறட்சி காரணமாக, தற்காலிகமாக பயிர் நடவேண்டாம் என விவசாயிகளை கேட்டுக்கொண்ட குஜராத் அரசு, பாசன சேவைகளை நிறுத்திவிட்டது. இப்படியாக பல மாநிலங்களில் வறட்சி தலைவிரித்து ஆடத்தொடங்கிவிட்டது.

இத்தனைக்கும் 3 ஆண்டு கடுமையான தண்ணீர் பஞ்சத்தின் எதிரொலியாக தென் ஆப்ரிக்காவின் கேப்டவுன் அண்மையில் டே ஜீரோவை சந்திக்கப்போவதாக வெளியான செய்தி சர்வதேச அளவில் செய்திகளில் இடம்பெற்றது. மொராக்கோவின் இரண்டாவது பெரிய நீர் தேக்கமான அல் மசீரா 3 ஆண்டுகளில் 60 சதவீதம் சுருங்கிப்போயுள்ளது. இதே போன்று ஸ்பெயினிலும் கடந்த 5 ஆண்டுகளில் நீர் பஞ்சம் அதிகரித்துவிட்டது, 60 சதவீத நீர்பரப்பு சுருங்கிவிட்டது. ஈராக்கின் மோசுல் அணையிலும் இதே நிலை தான்.

இதையடுத்து உலக நாடுகள் நீர் மேலாண்மையையும், உள்கட்டமைப்பையும் மேம்படுத்த முயற்சிகள் எடுத்து வருகின்றன. எனினும் மக்களும் தங்களால் முயன்ற அளவு நீர் சேமிப்பை கொண்டு வந்தால் மட்டுமே தண்ணீர் பஞ்ச நிலைமையை சமாளிக்க முடியும் என்பதே நிதர்சனமான உண்மை என்றாலும் இன்னும் எச்சரிக்கை தேவை என்பதே நிஜம்.

error: Content is protected !!