சென்னை மாநகரச் சாலைகளில் மாமரமும், பலா மரமும் காய்த்து தொங்குவதைக் கற்பனை செய்து பாருங்கள்.
சென்ற ஆண்டு மழையும் இந்த ஆண்டு புயலும் சென்னையை உலுக்கி போட்டன. ஆயிரக்கணக்கான மரங்களும், மின்கம்பங்களும் அலைபேசி கோபுரங்களும் தரையில் சாய்ந்தன. விதியை மீறி வைக்கப்பட்ட விளம்பர பலகைகளை எடுக்க வேண்டும் எனப் போராடிய டிராபிக் ராமசாமியின் போராட்டமும், உயர்நீதிமன்ற உத்தரவுகளும் செய்யாததை ஒரு புயல் செய்து முடித்தது. பிய்த்து எறியப்பட்ட கூரைகளும், சாய்க்கப்பட்ட விளம்பரப் பலகைகளும் ஏராளம். மரங்களெல்லாம் அனாதைகளாகச் சாலையில் கவிழ்ந்து கிடந்தன.
அரசு, சென்றமுறைபோல் கையைப் பிசைந்து கொண்டு நிற்கவில்லை. சாலையில் விழுந்த மரங்கள் எல்லாம் மின் ரம்பங்களாலும், கை ரம்பங்களாலும் அறுகைகப்பட்டு புயல் ஓய்ந்த ஒரே நாளில் அப்புறப்படுத்தப்பட்டன. பகுதி பகுதியாக மின்சார இணைப்புகள் தரப்பட்டன. எதிர்பார்த்ததைவிட வேகமாக நிலைமை கட்டுக்குள் வந்தது.ராஜாஜி முதல்வராக இருந்தபோது ஒரு புயலை அவருடைய அரசு சந்தித்தது. அப்போது சென்னை ராஜதானியாக இருந்த நேரம். முதல்வர் பிரீமியர் என்றுதான் அழைக்கப்பட்டார்.
புயலில் மரங்கள் விழுந்து சாலைப் போக்குவரத்து தடைபட்டது. பிரீமியர் ஆன ராஜாஜியிடம் அதிகாரிகள் அரசு சொத்தான மரங்களை வெட்டி ஏலம் போட்டு, விற்று வரும் பணத்தை அரசு கஜானாவில் சேர்க்க ஆணை தயார் செய்து கையெழுத்துக்காக வந்தனர்.இதைச் செயல்படுத்த எத்தனை நாளாகும் என்று கேட்டார் ராஜாஜி. 15 நாளாகும் என சொன்னார்கள் அதிகாரிகள். அத்தனை நாள்கள் சாலையில் மரம் கிடந்தால் போக்குவரத்து தடைபடாதா? மக்கள் அவதிப்படமாட்டார்களா? விளம்பரச் செலவு, வெட்டும் செலவு என்று செலவாகும் தொகையைவிட ஏலத்தில் வரும் பணம் கூடுதலாக எவ்வளவு வரும் என்று கேட்டு அதிகாரிகளின் திட்டத்தை ராஜாஜி நிராகரித்துவிட்டார். சாலையில் நிற்கும் அரசு மரங்கள் கருப்பு பெயிண்ட் அடித்து வெள்ளையில் எண் எழுதப்பட்டிருக்கும். அந்த மரங்கள் அரசின் சொத்துகளாகும். அதை வெட்டுவது சட்டப்படி குற்றம். ராஜாஜி ஓர் அரசு அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, சாலையில் விழுந்து கிடக்கும் மரங்களை யார் வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் தங்கள் செலவில் 24 மணி நேரத்தில் வெட்டிக் கொண்டு செல்லலாம் என அறிவிப்பு வெளியானது. சாலையில் விழுந்து தடை ஏற்படுத்திய மரங்கள், ராஜாஜியின் அறிவிப்பால் 24 மணி நேரத்தில் வெட்டப்பட்டு சரி செய்யப்பட்டது.
அரசு நிலத்தில் தெரிந்தோ, தெரியாமலோ சிலர் மரங்களை வளர்த்து விடுவார்கள். அப்படி அரசு நிலத்தில் தனியார் வளர்க்கும் மரங்களுக்கு அரசு தரும் பட்டாவின் பெயர் மரப் பட்டா அல்லது “2 சி’ பட்டா எனப்படும். “2 சி’ பட்டா வைத்திருந்தால் அரசு நிலத்தில் தனியார் வளர்த்த மரம் என்பது பொருள்.இதை போர்டு ஸ்டாண்டிங் ஆர்டர் எனப்படும் வருவாய் நிலை ஆணை உறுதிப்படுத்துகிறது. மரங்களின் பலனும், மரம் வெட்டப்படும்போது மரத்தின் விலையும் பட்டாதாரர் மற்றும் அரசால் சரிசமமாகப் பிரித்துக் கொள்ளப்படும்.
நான் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோது அரசுப் பண்ணையில் உள்ள தென்னை மரக்கன்றுகள் விற்பனை ஆகவில்லை என்ற தகவலை அமைச்சர் தெரிவித்தார். “அரசு குழந்தைகளுக்கு சத்துணவு போடுகிறது.சத்துணவு சாப்பிடும் ஒவ்வொரு குழந்தைக்கும் அரசு ஒரு தென்னங்கன்றை இலவசமாகக் கொடுத்தால் அவர்கள் வீட்டிலோ இடம் இல்லாவிட்டால் பள்ளியிலேயே அந்த மரங்களை வளர்க்கலாம்’ என்று ஆலோசனை கூறினேன்.அதை உடனடியாக ஏற்றுக் கொண்டு அன்று அரசு செயல்பட்டதால், இன்று பல வீடுகளில் தென்னை மரங்கள் வளர்ந்து பயன் தந்து கொண்டிருக்கின்றன.
தமிழக அரசுக்கு ஒரு ஆலோசனை. பெரிய சாலைகளில் எங்கெல்லாம் புயலால் மரங்கள் விழுந்துள்ளனவோ அங்கெல்லாம் அரச மரங்களையும், வேப்ப மரங்களையும் நட்டு வளர்க்க வேண்டும். தெருக்களில் விழுந்த மரமானால், யார் வீட்டின் முன்பு மரம் விழுந்திருக்கிறதோ அவருக்கு இடத்துக்கு தக்கபடி மா, பலா, புளி, காட்டு நெல்லி, நாவல் போன்ற பலன் தரும் மரங்களை தந்து அவர்களையே வளர்க்கச் சொல்லி விடலாம்.
நாள்பட்ட கன்றுகள் கவனத்துடன் தண்ணீர் விடப்பட்டு முறையாக வளர்க்கப்படுவதை இதன்மூலம் உறுதி செய்ய முடியும்.பலன் தரும் காலத்தில் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.50 அல்லது ரூ.100 “2 சி’ பட்டா வரியாகச் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கலாம். இதனால் அரசு செலவில்லாமல் மரங்களை வளர்க்க முடியும்.தேவையானால் தகுந்த விதிகளையும் ஏற்படுத்திக் கொள்ளலாம். இப்படிச் செய்வதால் அரசுக்கும் ஒரு வருமானம் கிட்டும். மேலும் ஐந்து ஆண்டுகளில் மரங்களின் பலன் சமுதாயத்திற்கு கிடைக்கும்.
பொதுவாக சாலையோரத்து மரங்களில் கிளிகளும், புறாக்களும், மைனா, குருவி, காக்கை போன்ற பறவைகளும் கூடுகட்டி வசிக்கும். இந்த புயலில் மனிதர்கள் மட்டுமல்ல பறவைகளும் தங்கள் வீடுகளை இழந்துவிட்டன.
ஆனால், புயலில் சிக்கிப் பறவைகள் இறந்ததாகப் பெரிய செய்திகள் இல்லை என்பதுதான் ஆச்சரியம். இந்த பறவைகள் இயற்கை சுழற்சியின் அச்சாணிகள். பறவைகளைப் பாதுகாப்பது அரசின் கடமை மட்டுமல்ல, ஒவ்வொரு குடிமகனின் கடமையும் கூட.தெருக்களில் பழ மரங்களை வளர்த்தால் அவை பழங்களைத் தருவதோடு இயற்கை சூழ்நிலையைப் பாதுகாக்கும்.
லண்டன் தெருக்களில் ஆப்பிள் மரங்கள் காய்த்து குலுங்குவதைப்போல சென்னை மாநகரச் சாலைகளில் மாமரமும், பலா மரமும் காய்த்து தொங்குவதைக் கற்பனை செய்து பாருங்கள்.
டி.எஸ்.ஆர். வேங்கடரமணா