டேனிஷ் சித்திக் உடல் டெல்லி ஜாமியா பல்கலை கல்லறையில் அடக்கம்!

டேனிஷ் சித்திக் உடல் டெல்லி ஜாமியா பல்கலை கல்லறையில் அடக்கம்!

டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மற்றும் செய்தித் தொடர்பாளர் அகமது அஜீம் ஆகியோர் ராய்ட்டர் போட்டோகிராபர் டேனிஷ் சித்திக் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல சென்றிருந்தபோது,  “சித்திக்கின் உடலை பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான கல்லறையில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அவர்களின் வேண்டுகோள் ஏற்கப்பட்டுள்ளது,” என்று தெரிவித்தார்.

ராய்ட்டர் நிறுவனத்தின் புகைப்பட நிபுணர் டேனிஷ் சித்திக், கொரோனா தொற்று மரணங்கள் குறித்து எடுத்த புகைப் படங்கள் சர்வதேச அளவில் பேசப்பட்டன. ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப்படையினருக்கும், தாலிபான்களுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதலை புகைப்படம் எடுக்கச் சென்ற சித்திக் ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையருகே காந்தகார் மாநிலம் ஸ்பின் போல்டாக் மாவட்டத்தில் கடந்த 16ம் தேதி கொல்லப்பட்டார். அவரது மரணம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியரான டேனிஷ் சித்திக் உலகின் பெருமை மிக்க புலிட்சர் விருது உள்ளிட்ட பல சிறப்புகளைப் பெற்றவராவார். இந்த நிலையில் அவரது உடல் டெல்லி கொண்டு வரப்பட்டு ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான கல்லறையில் அடக்கம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

சித்திக் குடும்பத்துக்கும் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்துக்கும் நீண்ட தொடர்புகள் உண்டு. சித்திக்கின் தந்தை முகமது அக்தர் சித்திக் ஜாமியா பல்கலைக்கழகத்தின் கல்வி பிரிவில் பேராசிரியராகப் பணியாற்றிவர், ஜாமியா நகரில்தான் அவர் தங்கியிருந்தார். சித்திக் ஜாமியா பள்ளியில்தான் படித்தார். ஜாமியா பல்கலைக்கழகத்தில் பொருளாதார இளநிலை பட்டமும், மாஸ் கம்யூனிகேஷனில் முதுகலைப்படமும் பெற்றிருக்கிறார்.

இந்த நிலையில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் நஜ்மா அக்தர், சித்திக் குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்தார். அப்போது பல்கலைக்கழகத்தின் சார்பில் சித்திக் மனைவி ரிகேயிடம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார். பல்கலைக்கழக வளாகத்தில் வரும் செவ்வாய்கிழமையன்று சித்திக்கை நினைவு கூறும் வகையில் நினைவஞ்சலி கூட்டம் நடத்தப்பட உள்ளதாக கூறியுள்ளார். சித்திக்கின் புகைப்படங்களை கொண்ட ஒரு கண்காட்சி குறிப்பிட்ட காலத்துக்கு நடத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் செய்தித் தொடர்பாளர் அகமது அஜீம், துணைவேந்தர், சித்திக் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல சென்றிருந்தபோது, சித்திக்கின் உடலை பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான கல்லறையில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அவர்களின் வேண்டுகோள் ஏற்கப்பட்டுள்ளது,” என்று கூறினார்.

நிலவளம் ரெங்கராஜன்

error: Content is protected !!