உயிருக்கு ஆபத்து: தங்க நகைகள் மீதான மோகம்! – ஓர் எச்சரிக்கை!
தங்கம்! அழகு, செல்வம், மற்றும் சமூக அந்தஸ்தின் சின்னம். ஆனால், இன்றைய காலகட்டத்தில், அது உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும் ஒரு பொருளாக மாறி வருகிறது. நகை விலை உயர்ந்து கொண்டே போகிறது. ஓரிரு நாட்களில் ஒரு பவுன் ஒரு லட்சம் ரூபாயைத் தொடும் நிலை வரலாம். செய்கூலி, சேதாரம் என்று கணக்கிட்டால், விலை இன்னும் அதிகமாகும். இவ்வளவு விலை உயர்ந்தாலும், நம் மக்களின் தங்கத்தின் மீதான மோகம் மட்டும் குறைவதில்லை.
அசைக்க முடியாத மோகம்
திருமண விழா, கோவில் திருவிழா, மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் போது, நம் மக்களில் பலர் நகைகளை அணிந்து செல்வதை ஒரு பெருமையாகக் கருதுகின்றனர். இது வெறும் ஆபரணம் அல்ல; அது அவர்களின் சமூக மதிப்பீட்டின் அடையாளமாக இருக்கிறது. “பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும்” என்று சொல்வார்கள். ஆனால், இன்றைய காலகட்டத்தில், அது பழமொழியைத் தாண்டிச் சென்றுவிட்டது. தங்கத்தைக் கண்டால் பிணம் மட்டுமல்ல, மண்ணைத் தோண்டிப் புதைக்கப்பட்ட பிணம்கூட எழுந்து வந்து பறித்துவிடும். அந்த அளவிற்குத் தங்கத்தின் மீதான மோகம் மனிதர்களிடம் தலைவிரித்தாடுகிறது.

விலை உயர்ந்த ஆபத்து
இன்றைய மனிதர்களிடம் குறைவாகப் பத்துப் பவுன் நகையாவது இருக்கும். இதன் மதிப்பு சுமார் பத்து லட்சம் ரூபாய். நல்ல காரியங்களுக்குச் செல்லும் போது, “நம்மிடம் தான் நகை இருக்கிறதே” என்று கயிறு போன்று கழுத்தில் செயின், கவர்னர் மாலை, நல்ல பட்டை வைத்த செயின் எனப் பல வகையான நகைகளைப் போட்டுக்கொண்டு செல்வார்கள். ஆனால், இது ஒருபோதும் பாதுகாப்பானது அல்ல; மாறாக, இது உங்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.
பாதுகாப்புதான் முக்கியம்
குறைவான நகைகளை அணிந்து செல்வதே உங்களுக்குப் பாதுகாப்பு. தாலி செயின் அணிபவர்கள், முடிந்தவரை குறைந்த அளவில் அணிவது நல்லது. அப்படி இல்லையென்றால், பாரம்பரிய மஞ்சள் கயிறு அணிவதும் நல்லதுதான். அதிக நகைகளைப் போட்டுக்கொண்டு வெளியே சென்றால், கழுத்தை மூடிக்கொண்டுதான் போக வேண்டிய சூழ்நிலை வரும். நகைகளைப் பறிகொடுப்பதுடன், உங்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் வரலாம். உயிர் முக்கியமா, நகை முக்கியமா என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
ஒரு சமூகப் பொறுப்பு
தங்கம் வெறும் முதலீடு அல்ல, அது உயிரின் விலை. உங்கள் நகைகள் உங்களைச் சுற்றியுள்ளோரின் கண்களில் படும்போது, அது பேராசையைத் தூண்டக்கூடும். ஒரு சிறு கவனக்குறைவு கூட, ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தலாம். எனவே, பொது இடங்களில் அதிக நகைகள் அணிவதைத் தவிர்த்து, உங்கள் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள். சமூகத்தின் ஒரு பொறுப்பான அங்கமாக, நாம் அனைவரும் இந்த உண்மையை உணர்ந்து செயல்பட வேண்டும்.
தனுஜா


