அடடே லூப் போக்குவரத்து : நம்ம நாட்டுக்கு ஆறு வருஷத்துல வருதா? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

அடடே லூப் போக்குவரத்து : நம்ம நாட்டுக்கு ஆறு வருஷத்துல வருதா? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

லூப் டிரெயின் எனும் அதிவிரைவு போக்குவரத்து அடுத்த போக்குவரத்து தொழில்நுட்பப் புரட்சி என்கிறார்கள். காற்று நீக்கம் செய்யப்பட்ட பிரம்மாண்டக் குழாயில் சுமார் 1,200 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் இந்த டிரெயின் காந்த விசையின் இழுவையால் இயக்கப்படுகிறது. இதன் சோதனை ஓட்டம் சமீபத்தில் நடந்து அதன் காணொளி )  உலகம் முழுதும் பார்க்கப்பட்டது. இந்தத் தொழில்நுட்பத்தை டெஸ்லா நிறுவனமும், வெர்ஜின் எனும் விமான நிறுவனமும் போட்டி போட்டுக்கொண்டு மேம்படுத்தி வருகிறார்கள். இதில் முக்கியமானது வெர்ஜின் இந்தியாவில் எங்கெங்கு இந்த லூப் வசதியை நிறுவுவது என்று முடிவு செய்துள்ளதாம். இதன் தலைமைச் செயல் அதிகாரி ஜீஜெல் கூறும்போது, “இப்போதைக்கு துவக்க கட்டத்தில் இருக்கும் லூப் போக்குவரத்து வணிக ரீதியில் 2027 ஆம் ஆண்டில் செயல்பாட்டிற்கு வரும்” என்கிறார்.

இந்த லூப் டிரெயின் சிந்தனை 1900 ஆம் ஆண்டுகளிலேயே தோன்றி விட்டதாம். அதாவது கார், பேருந்து, விமானம் போன்றவற்றிற்கு முன்பே யோசனை பிறந்திருந்தாலும் பெரும் செலவு பிடிக்கும் திட்டம் என்பதால் நிறைவேறவில்லை. நூறாண்டுகளுக்கு முன்னால் ராக்கெட் அறிவியலர் ராபர்ட் கோடார்ட் இந்த யோசனையை அதாவது ‘வாக்குவம் டிரெயின்’ எனும் யோசனையை முன் வைத்தார். பிரான்ஸ் 1960, 1970 களில் இதை பரிசோதனை செய்து பார்த்து கைவிட்டது. பின்னர் பல ஆண்டுகள் கழித்து டெஸ்லாவின் இலான் மஸ்க் இதைக் கையில் எடுத்தார். இப்போது வெர்ஜின் இந்தியாவிற்குள் இதைக் கொண்டு வர திட்டமிட்டு வருகிறது. அமெரிக்காவில் லாஸ் வேகாஸ்சின் வடக்கு பாலைவனப் பிரதேசத்தில் சோதனையையும் செய்து வருகிறது வெர்ஜின். இதன் தலைமைச் செயல் அதிகார் ரீஜெல் முதலில் ஸ்பேஸ் எக்ஸ் (இலான் மஸ்க்கின் நிறுவனம்) சில் வேலைப் பார்த்தவர்.

இந்த டிரெயினின் கம்பார்ட்மெண்டுகள் என்பவை பாட் என்று அழைக்கப்படுகின்றன. இதில் 28 பேர் அமரலாம். பயணத்தின் தூரத்தைப் பொறுத்து பயணியர் எண்ணிக்கையையும் அதிகரிக்கவோ, குறைக்கவோ செய்யலாம். மேலும் சரக்குப் போக்குவரத்திற்கும் பயன்படுத்தலாம். கடந்த 2013 ஆம் ஆண்டில் இலான் மஸ்க் இத்திட்டத்தைக் கையில் எடுத்தப் பிறகு தொழில்நுட்பம் சற்று முன்னேறியுள்ளது என்கிறார் ஜீஜெல். இதற்கு பேட்டரிகள், பவர் எலக்டிரானிக்ஸ் மற்றும் சில சென்சார்கள் தேவைப்பட்டன. அப்போது அவை தயாராக இல்லை.

இந்தியாவின் மக்கள் தொகைக்கு இப்போதிருக்கும் போக்குவரத்து முறைகள் போதுமானவைக் கிடையாது. மேலும் விமானங்களும் அவை வெளியிடும் கரிய அமில வாயுவும் அதிகம் என்பதால் வேகமான அதே சமயம் பாதுகாப்பான போக்குவரத்து முறைகள் தேவை. தற்போது சுமார் 800 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் டிரெயின்கள் வந்துள்ளன. ஆனால் லூப் துவக்கத்திலேயே 1,200 கிலோ மீட்டர் வேகம். அதாவது சென்னை-டெல்லி பயணம் விமானத்தில் 3-4 மணி நேரம். ஏறக்குறைய அதே கால அளவில் லூப்பில் டெல்லி சென்று விடலாம். தவிர பொதுப் போக்குவரத்து முறை இல்லாத சவூதி அரேபியாவிலும் இந்தப் போக்குவரத்து முறை நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது. இதன் பெட்டியான பாட் இக்கோடைக்காலத்தில் வாஷிங்டன் ஃபூயச்சர்ஸ் கண்காட்சியில் வைக்கப்படுமாம். இனி ஆறே வருஷம்தான் தயாரா இருங்க. லூப் டிரெயின்ல அதிவேகமா போகலாம்.

ரமேஷ் பாபு

Related Posts

error: Content is protected !!