டி- பிளாக் – விமர்சனம்!

டி- பிளாக் – விமர்சனம்!

19ஆம் நூற்றாண்டில் மலர்ந்த சினிமாவில் தொடக்கத்தில் சுதந்திர உணர்வு தொடங்கி பாசம், காதல், குரோதம், காமெடி, பக்தி என்பதுடன் தற்போது முழுக்க காமம் வரையிலான பல வகையான கதைகளை திரைவடிவில் வழங்கி வருகிறார்கள்.. இவ்வகைகளில் பெரும்பாலானோருக்குப் பிடித்தது திகிலூட்டும் மர்ம கதைகள் என்று சொன்னால் மிகையல்ல. அந்த கால வீணை பாலச்சந்தர் உருவாக்கிய அந்த நாள் தொடங்கி ஏகப்பட்ட படங்கள் வந்த நிலையில் அந்த எண்ணிக்கையில் ஒன்றை அதிகரிக்க வந்திருக்கும் படமே டி- பிளாக்.

கதை என்னவென்றால் அத்துவானக் காட்டுக்குள் இருக்கும் காலேஜ் ஒன்றி ல் அருள் நிதி மாணவர். அக்கல்லூரி வளாகத்தை விட்டு மாலை நேரத்திற்கு பிறகு வெளியில் வருவது ஆபத்து என கல்லூரி நிறுவனம் எச்சரிக்கிறது. இதனால் எக்ஸைட் ஆனா மாணவர்கள் என்னதான் இருக்கும் என பார்ப்பதற்காக முனையும் போது பல ஆபத்துக்களை சந்திக்கின்றனர். அதன் உச்சமாக அருள்நிதியின் தோழிகளில் ஒருவரான சுவாதி மர்மமான முறையில் உயிரிழக்கிறார். ஆனால் காலேஜ் மேனேஜ்மெண்ட் சுவாதியின் மரணம் காட்டு விலங்குகளால் நேர்ந்திருக்கும் என கூறி மூடி மறைக்க்க முயல்கின்றனர்.. அந்த ஸ்டேட்மெண்டை ஏற்காத அருள்நிதி மற்றும் அவரது நண்பர்கள் மரணத்திற்கான காரணத்தை கண்டுபிடிக்க முயற்சித்து இறுதியில் உண்மையை கண்டறிந்து, தொடர் கொலைகள் நிகழாமல் தடுப்பதே டி- பிளாக்.

காலேஜ் ஸ்டூடண்டாக நடித்திருக்கும் அருள் நிதி, இந்த கேரக்டருக்காக வெயில் லாஸ் எல்லாம் போட்டு வழக்கம்போல கதாபாத்திரத்துக்கு உண்டான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகி அவந்திகா மிஷ்ரா, டைரக்டர் விஜய்குமார் ராஜேந்திரன், ஆதித்யா கதிர், தலைவாசல் விஜய், ரமேஷ் கண்ணா, சரண்தீப் என பலரும் தன் பொறுப்புணர்ந்து பங்களிப்பை சரியாக வழங்கி உள்ளார்கள் . காலேஜ் பாஸ் ரோலி சில நிமிடங்கள் வந்தாலும், தனது வசனம் மூலம் சாமியார்களை கலாய்த்து கைதட்டல் பெறுகிறார் கரு.பழனியப்பன்.

பின்னணி இசை படத்தின் சஸ்பென்ஸ் காட்சிகளுக்கு உயிரூட்டுகிறது. அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவில் கேமிரா புகுந்து விளையாடியிருக்கிறது. கணேஷ் சிவா எடிட்டிங் த்ரில்லர் காட்சிகளுக்கான உணர்வை பார்வையாளர்களுகு கடத்துவதில் பெரும் பலம் சேர்க்கிறது.

காமெடிக்கு பேர் போன எரும சாணி விஜய் இக் கதையை எழுதி இயக்கி இருக்கிறார்., எளிமையான கருதான். அதை தன்னால் முடிந்த அளவு சுவாரஸ்யமான திரைக்கதையுடன் ஒரு முழுமையான சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர் திரைப்படத்தை கொடுத்திருக்கிறார். குறிப்பாக அடுத்தடுத்துமாணவிகளின் மரணங்களுக்கு காரணம் யார்? என்பது இடைவேளைக்குப் பிறகு தெரிந்தாலும், அதற்கான காரணம் என்ன? என்ற கேள்வி படத்தின் க்ளைமாக்ஸ் வரை நம்மை சீட் நுணியில் உட்கார வைப்பதோடு, விடுதிக்குள் நுழையும் அந்த மர்ம உருவத்தால் படம் பார்ப்பவர்கள் கண்கள் விரியவே செய்கிறது.

வழக்கம் போல் படத்தில் ஒரு சில குறைகள் இருந்தாலும், தேவையில்லாத விஷயங்களை திணிக்காமல் தான் சொல்ல வந்ததை நேர்த்தியாகவும் விறுவிறுப்பாகவும் சொல்லி பாஸ் மார்க் வாங்கி விட்டார்(கள்)

மொத்தத்தில், ‘டி பிளாக்’ -பார்க்கத் தகுந்த படம்

ரேட்டிங் 3/5

Related Posts

error: Content is protected !!