டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பதில் ஐபிஎல் போட்டி?
இந்தியாவில் நடைபெற இருந்த ஐ.பி.எல் தொடரும் மார்ச் 29ம் தேதியில் இருந்து ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஏப்ரல் 15ம் தேதிக்குப் பின்னர் ஐபிஎல் தொடர் நடக்குமா என்பது சந்தேகம் தான் . ஏனெனில் இந்த கரோனா வைரஸ் தொற்று முழுவதும் விலக இன்னும் சில மாதங்கள் எடுக்கும் என்று தெரிகிறது. இப்படி இந்த வருடம் ஐபிஎல் போட்டி நடக்குமா இல்லையா என்கிற கவலையில் இந்திய ரசிகர்கள் இருக்க, தற்போது ஆஸ்திரேலி யாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைப் போட்டி குறித்தும் சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இந்த ஐபிஎல் தொடர் நடக்காவிட்டால் பிசிசிஐக்கு பெரும் வருமான இழப்பு (3000கோடி வரை) நேரிடும். மேலும் அறிமுக வீரர்கள் அனைவரது சம்பளமும் அவர்களுக்கு கிடைக்காது. பிரபல மான வீரர்களுக்கு இது ஒரு இழப்பு இல்லை என்றாலும் அறிமுக வீரர்களின் வாழ்க்கையை இந்த தொடர் மாற்றி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதன் காரணமாக ஐபிஎல் தொடரை எப்படியாவது நடத்தி அந்த இழப்பை சரிகட்ட வேண்டும் என்று பிசிசிஐ கடுமையாக போராடி வருகிறது. இந்த கரோனா வைரசை கட்டுப்படுத்த குறைந்தது நான்கு மாதங்கள் ஆகும் என்று பிசிசிஐ கணக்கிட்டுள்ளது. அந்த நான்கு மாதம் முடியும்போது ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் ஐபிஎல் தொடரை நடத்தலாம் என்று திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இதனிடையே ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை டி20 உலகக் கோப்பை நடைபெறுகிறது. மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஒராண்டுக்கு ஒத்திவைக்கப்படுவதாக சா்வதேச ஒலிம்பிக் கமிட்டி, ஜப்பான் போட்டி அமைப்புக் குழு அதிகாரப்பூா்வமாக சமீபத்தில் அறிவித்தது. வரும் ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதாக இருந்தது. விளையாட்டு வீரா்கள், அதிகாரிகள், போட்டி தொடா்புடையவா்கள், சா்வதேச சமூகத்தின் உடல்நலனை பாதுகாக்க ஏதுவாக இந்த முடிவு எடுக்கப்பட்டது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் தொடர்கள், ஐபிஎல் போட்டி என அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைப் போட்டி திட்டமிட்டபடி அதே தேதிகளில் நடைபெறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்திரேலியாவில் சர்வதேச எல்லைகள் ஆறு மாதங்களுக்கு மூடப்பட்டுள்ளன. அடுத்த ஆறு மாதங்களுக்குள் கரோனோவைக் கட்டுப்படுத்தாவிட்டால் இந்தத் தடை மேலும் தொடரவும் வாய்ப்புண்டு. அப்படியெதுவும் நடந்தால் ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பைப் போட்டியை நடத்த முடியாத சூழல் ஏற்படும். பிறகு 2022-ல் தான் டி20 உலகக் கோப்பையை ஐசிசியால் நடத்த முடியும். அடுத்த வருடம் இப்போட்டியை நடத்த தேதிகள் சாதகமாக இல்லை.
ஆஸ்திரேலியாவின் கட்டுப்பாடுகள் அக்டோபரின் தொடக்கத்தில் முடியும். எனவே டி20 உலகக் கோப்பை திட்டமிட்டபடி நடைபெறும் என ஒரு தரப்பு நம்பிக்கை வைக்கிறது. ஆனால் ஒருவேளை கட்டுப்பாடுகள் தொடர்ந்தால்? டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெறுவதாக இருக்கும் தேதிகளில் ஐபிஎல் போட்டியை நடத்த பிசிசிஐ இன்னொரு பக்கம் திட்டமிட்டு வருகிறது.