தோற்றுப் போனால் அமெரிக்காவை விட்டு வெளியேறி விடுவேன் : டிரம்ப் அறிவிப்பு!

நடக்க இருக்கும்அதிபர் தேர்தலில் ஒருவேளை தோற்றுப் போனால் நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று அதிபர் டிரம்ப் தமது பிரச்சாரத்தில் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த மாதம் 3ந் தேதி நடைபெற உள்ளது. குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் 2வது முறையாக போட்டியிட அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் களம் இறக்கப்பட்டு உள்ளார். இதற்காக குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சியினரிடையே கடுமையான போட்டி ஏற்பட்டு உள்ளது. இரு கட்சியினரும் தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.
கடந்த 16ம் தேதி ஜார்ஜியாவில் நடந்த பிரச்சாரத்தில் பேசிய டிரம்ப், அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றால் “நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருக்கும்” என்றார். இதனைக் கேட்டு டிரம்ப் ஆதரவாளர்கள் ஆர்ப்பரித்து சிரித்தனர். அதனை அவர் ஒரு ஜோக்காகத்தான் கூறினார்.
பொதுவாக ஜோக்கடிக்கிற பழக்கம் தமக்கு இல்லை என்றும், தமது கூட்டத்தில் குறைந்த அளவில் ஆட்களே இருப்பதாகவும் அவர்கள் அனைவரும் முகத்தையே மூடும்படி முக கவசம் அணிந்திருப்பதாகவும் டிரம்ப் கூறினார்.
வரலாற்றிலேயே மிகவும் மோசமான ஒரு வேட்பாளருடன் தாம் போட்டியிடுவதாகவும் அவரிடம் தோற்று விட்டால் நாட்டைவிட்டு வெளியேறுவதே நல்லது என்றும் டிரம்ப் தெரிவித்தார்