கொரோனா வைரஸுக்கு அரசியல் புரியுமா.. என்ன?

கொரோனா வைரஸுக்கு அரசியல் புரியுமா.. என்ன?

நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்கிறார் பிரதமர் நரேந்திரமோடி! மார்ச் 25ம் தேதி முதல் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் அடித்தட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுகிறதே என்பதற்காக மன்னிப்புக் கேட்பது தான் அதனுடைய உள்ளடக்கம். ஆனால் மாட்சிமை தாங்கிய பாரதப் பிரதமர் பேச வேண்டியதும் விளக்கம் அளிக்க வேண்டியதும் என்னவென்றால் டிசம்பர் மாதம் 31ம் தேதி கண்டறியப்பட்டு உலகம் முழுவதும் ஜனவரி மாதம் இறுதியில் பரபரப்பாக இருந்த நேரம் எல்லாம் அமைதியாக கை கட்டி வேடிக்கை பார்த்துவிட்டு மார்ச் மாதம் 25ம் தேதி நல்ல பிள்ளையைப் போல நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்பது 130 கோடி மக்களை ஆள்வதாகச் சொல்லிக் கொள்ளும் பிரதமருக்கு அழகா என்பது தான் கேள்வி!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி சீன நாட்டின் வூஹான் நகரில் காரணம் தெரியாத நிமோனியாவால் அதிகமான மக்கள் மருத்துவமனைக்கு வருகிறார்கள். ஜனவரி மாதம் 3ம் தேதிக்குள் அந்த எண்ணிக்கை 44 பேராக ஆகிறது. புதிய வகை கொரோனா வைரஸ் என்று ஜனவரி 7ம் தேதி கண்டுபிடிக்கிறார்கள். ஜனவரி 13ம் தேதி தாய்லாந்தில் முதல் கொரோனா நோயாளி கண்டறியப்படுகிறார்.இவர் சீனாவில் இருந்து வந்தவர். ஜனவரி 20ம் தேதி அமெரிக்கா வில் கொரோனா நோயாளி கண்டறியப்படுகிறார். இவர் சீனா சென்று திரும்பியவர்.இது தொற்றுவியாதி என்பதால் சீனநாட்டுக்குள் தனிமைப்படுத்துதல் தொடங்கிவிட்டது. பொது   மக்கள் கூடுவதற்கு சீனா தடை விதிக்கிறது. ஜனவரி 23ம் தேதிக்குள் சீனாவில் 9 பேர் பலியாகிவிட்டார்கள். 149 பேருக்கு இருப்பதாக சீனா அறிவித்தது.

அதைவிட அதிர்ச்சி என்னவென்றால் இரண்டு வாரங்களுக்குள் தாய்லாந்து, அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா,தைவான்,ஹாங்காங் ஆகிய நாடுகளுக்கும் அது பரவிவிட்டது. ஜனவரி 25ம் தேதி கொரோனா தொற்று தொடர்பாக அனைத்து நாடுகளும் கண்காணிக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவிக்கிறது. ஜனவரி 26ம் தேதி நம்முடைய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் ஒரு பேட்டி கொடுக்கிறார். ”சீனாவில் இருந்து இந்தியாவுக்கு வந்த 11 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறது. அவர்கள் அனைவரும் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்கள்” என்று சொல்லி இருக்கிறார் மத்திய அமைச்சர். இதில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் 7 பேர். முப்பையைச் சேர்ந்தவர் இரண்டு பேர். பெங்களூரைச் சேர்ந்தவர் ஒருவர். டெல்லியைச் சேர்ந்தவர் ஒருவர்.

அன்றைய தினம் மத்திய அரசு சார்பில் ஒரு அறிக்கை வெளியானது. ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் சீனாவில் வந்த அனைவரையும் கண்காணிக்க வேண்டும் என்று அந்த அறிக்கை சொன்னது. ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் வந்தவர்கள் அனைவரையும் அன்றே கண்காணித்திருந்தால் இன்றைக்கு நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்கும் சூழ்நிலை வந்திருக்குமா?

ஜனவரி 27ம் தேதி சீனாவில் பலியானவர் எண்ணிக்கை 56 ஆகிவிட்டது.

பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 109 ஆகிவிட்டது.

அதற்குப் பிறகும் மத்திய அரசு எதுவும் செய்யவில்லை.

ஜனவரி 28ம் தேதி குஜராத்தில் நடந்த சர்வதேச உருளைக்கிழங்கு மாநாட்டில் உரையாற்றிக் கொண்டு இருந்தார் பிரதமர்.

குடியுரிமைச் சட்டத்தை மகாத்மா காந்தியே விரும்பினார் என்று டெல்லியில் பொய் சொல்லிக் கொண்டு இருந்தார் பிரதமர்.

ஜனவரி 29ம் தேதி நிருபர்களைச் சந்தித்த மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்த்தன்,

”இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லை,. மக்கள் அச்சம் அடைய வேண்டாம். 2014ல் எபோலோ வைரஸை இந்தியாவுக்குள் வராமல் தடுத்தோம். அதைப் போல கொரோனாவையும் வரவிடாமல் தடுத்துவிடுவோம்” என்று சொன்னார்.  – இப்படிச் சொல்லிவிட்டு அனைத்து முதலமைச்சர்களுக்கும் மத்திய அரசு கடிதம் அனுப்பியது. ஜனவரி 1ம் தேதிக்குப் பிறகு வெளிநாட்டில் இருந்து வந்த அனைவரையும் மருத்துவமனைக்கு அழைக்க வேண்டும் என்று அதில் சொல்லப்பட்டு இருந்தது. சீனாவில் இருந்து இந்திய மாணவர்களை அழைத்து வரப் போகிறோம், அவர்கள் அனைவரும் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று சொன்னார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர். இதற்குள் சீனாவில் 100 பேர் இறந்துவிட்டார்கள். இதன்பிறகும் மத்திய அரசு விழிக்கவில்லை.

எத்தகைய ஆபத்து இந்தியாவுக்கும் வரப்போகிறது என்பதை உணரவில்லை.

போகட்டும்!

ஜனவரி 30ம் தேதி பிரிட்டன் ஒரு அறிவிப்பை செய்தது. அது என்ன தெரியுமா? கொரோனா வைரஸ் தாக்க வாய்ப்புள்ள 30 நாடுகளின் பட்டியல் தான் அது. அதில் இந்தியா 23 வது இடத்தில் இருந்தது. அப்போதும் மத்திய அரசு விழிக்கவில்லை.சுண்டைக்காய் இலங்கை நாடு, ஜனவரி 29ம் தேதியே சீனா விசா அனைத்தையும் தடை செய்துவிட்டது. ஜனவரி 30 தேதி சீனாவில் பலி எண்ணிக்கை 132 ஆகிவிட்டது. ஜனவரி 31ம் தேதி இந்தியாவின் உச்சந்தலையில் முதல் குண்டு விழுந்தது.
அப்போதும் மத்திய அரசு விழிக்கவில்லை. கேரளா வந்த மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என்று மத்திய சுகாதாரத் துறையே அறிவித்தது.

மரண எச்சரிக்கையின் முதல் மணி இது தான்.

ஜனவரி மாதம் 31ம் தேதியே இந்தியாவுக்கும் உலக நாடுகளுக்குமான தொடர்பை மொத்தமாகத் துண்டித்திருந்தால் இன்று இந்தியா இழவு வீடு போல் காட்சியளிக்க
வேண்டிய அவசியம் வந்திருக்குமா? மார்ச் 25ம் தேதி செய்த தடுப்பை, அன்று அல்லவா செய்திருக்க வேண்டும்?

எது தடுத்தது?

அப்படிச் செய்தால் அமெரிக்க அதிபர் ட் ரம்ப் வருகை ரத்தாகி விடுமே என்ற பதற்றம், கொரோனாவையே மறைக்கச் சொன்னது.

ஆனால் வைரஸுக்கு இந்த அரசியல் புரியாது….!

திருமாவேலன்

Related Posts

error: Content is protected !!