மருத்துவர்களின் அறிவுரைகளில் முரண்பாடுகள்! என்ன செய்யலாம்?

மருத்துவர்களின் அறிவுரைகளில் முரண்பாடுகள்! என்ன செய்யலாம்?

மது நண்பர்கள், உறவினர்கள் எனப் பலர் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான குழப்பம் இது. “ஒரு மருத்துவர் ஒன்று கூறுகிறார், மற்றொருவர் அதற்கு நேர்மாறாகக் கூறுகிறார். அப்படியானால் எதை நம்புவது?” – இது மருத்துவ ஆலோசனை பெறும் பலரின் கேள்வி. இந்தக் குழப்பம் ஏன் ஏற்படுகிறது, இதிலிருந்து நாம் எப்படித் தெளிவு பெறுவது என்பதைப் பார்ப்போமா?.

மருத்துவ அறிவின் அடுக்குகளும் சிறப்புப் புலங்களும்

மருத்துவத் துறையின் அடிப்படை அமைப்பைப் புரிந்துகொண்டால் இந்தக் குழப்பம் நீங்கும். மருத்துவ அறிவின் அடுக்குகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்:

  1. பொது மருத்துவர் (MBBS): இவர்கள் மருத்துவத் துறை சார்ந்த அனைத்துப் பிரிவுகளிலும் அடிப்படை அறிவு பெற்றிருப்பார்கள் (Something about Everything). உடல்நலப் பிரச்சினைகளுக்கு முதல் நிலை ஆலோசனைகளை வழங்குபவர்கள் இவர்களே.
  2. துறைசார் சிறப்பு நிபுணர்கள் (MD/MS): ஒரு குறிப்பிட்ட துறையில் (எ.கா: சிறுநீரகம், குடல், இதயம்) ஆழமான அறிவு பெற்றிருப்பார்கள் (Everything about Something). தங்கள் துறையில் ஏற்படும் பிரச்சினைகள், நோய்கள் குறித்து முழுமையான புரிதல் கொண்டவர்கள்.
  3. மேம்பட்ட சிறப்பு நிபுணர்கள் (DM/MCh): ஒரு குறிப்பிட்ட துறையில் உள்ள ஒரு குறிப்பிட்ட அம்சத்தில் (எ.கா: சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, குறிப்பிட்ட புற்றுநோய்கள்) இன்னும் ஆழமான நிபுணத்துவம் பெற்றவர்கள் (Everything about Something inside that Something).

இந்த வேறுபாட்டை ஒரு உதாரணத்துடன் புரிந்துகொள்ளலாம்: ஒரு நுண்ணோக்கிக்கும் தொலைநோக்கிக்கும் உள்ள வித்தியாசம் இது. பொது மருத்துவர் தொலைநோக்கி போல பரந்த பார்வை கொண்டவர், சிறப்பு நிபுணர் நுண்ணோக்கி போல ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பெரிதாக்கி ஆழமாகப் பார்ப்பவர்.

முரண்பாடுகள் ஏன் ஏற்படுகின்றன?

ஒவ்வொரு சிறப்பு நிபுணரும் தங்கள் நிபுணத்துவம் பெற்ற உறுப்பு அல்லது அமைப்பு சார்ந்தே அறிவுரைகளை வழங்குவார்கள். அவர்கள் ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைக் கருத்தில் கொண்டு அதற்கான சிறந்த தீர்வைச் சொல்வார்கள்.

  • சிறுநீரக சிறப்பு நிபுணர்: சிறுநீரகத்தின் நலனை மட்டுமே முதன்மையாகக் கருதுவார். சிறுநீரக செயல்பாடு குறைந்திருக்கும் போது, நீரின் அளவு சுமையாக மாறக்கூடும் என்பதால், நீர் அருந்துவதைக் கட்டுப்படுத்தச் சொல்வார்.
  • குடல் நோய் சிறப்பு நிபுணர்: மலச்சிக்கலை மையமாகக் கொண்டு, குடல் இயக்கத்தைச் சீர் செய்ய நீர் அருந்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவார்.
  • உடல் எடை/நீரிழிவு நிபுணர்: உடல் எடையைக் குறைப்பதற்கும், சர்க்கரையைக் கட்டுக்குள் வைப்பதற்கும் நடையின் முக்கியத்துவத்தைச் சொல்வார்.
  • எலும்பியல் நிபுணர்: மூட்டுத் தேய்மானம் உள்ள ஒருவருக்கு, மூட்டுகளின் நலன் கருதி அதிக நடைப்பயிற்சியைத் தவிர்க்கச் சொல்வார்.
  • பொது மருத்துவர்: விட்டமின் டி குறைபாட்டைப் போக்க சூரிய ஒளியின் முக்கியத்துவத்தைப் பொதுவான அறிவுரையாக வழங்குவார்.
  • தோல் நோய் நிபுணர்: தோலில் அலர்ஜி உள்ள ஒருவருக்கு, வெயில் படுவதால் ஏற்படும் தீங்குகளைக் கருத்தில் கொண்டு சூரிய ஒளியைத் தவிர்க்கச் சொல்வார்.

தெளிவு பெறுவது எப்படி? – உங்கள் பொறுப்பு!

இந்த முரண்பாடுகளைக் களைந்து தெளிவான சிகிச்சை பெறுவது நோயாளியின் பொறுப்பே ஆகும். இங்குதான் “ஒருங்கிணைந்த அணுகுமுறை” முக்கியத்துவம் பெறுகிறது.

  1. வெளிப்படையாகப் பேசுங்கள்: ஒரு மருத்துவரிடம் ஆலோசனை பெறும்போது, மற்ற சிறப்பு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் மற்றும் நீங்கள் எதிர்கொள்ளும் பிற உடல்நலப் பிரச்சினைகள் குறித்து முழுமையாகத் தெரிவிக்க வேண்டும்.
    • உதாரணமாக, சிறுநீரக மருத்துவர் நீர் கட்டுப்பாடு பற்றிச் சொன்னதை, மலச்சிக்கலுக்காக குடல் நோய் மருத்துவரிடம் சொல்லுங்கள். அப்போது அவர் மலச்சிக்கலுக்கு மாற்று வழிகளைப் பரிந்துரைப்பார்.
    • மூட்டுத் தேய்மானம் காரணமாக நடப்பதில் உள்ள சிரமத்தை, உடல் எடை குறைப்பு நிபுணரிடம் கூறுங்கள். அவர் அதற்குப் பொருத்தமான வேறு உடற்பயிற்சிகளைப் பரிந்துரைப்பார்.
    • தோல் அலர்ஜி குறித்து, பொது மருத்துவரிடம் தெரிவித்தால், அவர் விட்டமின் டி சப்ளிமென்ட்களைப் பரிந்துரைப்பார்.
  2. குடும்ப நல மருத்துவரின் பங்கு: பல்வேறு சிறப்பு மருத்துவர்களிடம் ஆலோசனை பெறும் சூழலில், ஒரு குடும்ப நல மருத்துவர் (Family Physician) சிறந்த வழிகாட்டியாகச் செயல்படுவார். அவர் அனைத்துத் துறைகள் பற்றிய அடிப்படை ஞானம் கொண்டவர் என்பதால், பல்வேறு மருத்துவர்கள் வழங்கும் அறிவுரைகளை ஒருங்கிணைத்து, உங்களுக்குப் பொருத்தமான, ஒன்றோடு ஒன்று முரண்படாத சிகிச்சைத் திட்டத்தை வகுக்க உதவுவார்.

மொத்தத்தில், ஒவ்வொரு சிறப்பு மருத்துவரும் ஒரு குறிப்பிட்ட உறுப்பின் நலனைப் பாதுகாப்பதில் சிறந்தவர். ஆனால், நமது உடல் ஒரு ஒருங்கிணைந்த அமைப்பு. எனவே, அனைத்துத் தகவல்களையும் வெளிப்படையாகப் பகிர்ந்து, ஒருங்கிணைந்த சிகிச்சை பெறுவதே சிறந்தது. இதுவே உங்கள் ஆரோக்கியத்திற்கான சிறந்த வழி!

டாக்டர் ஃப்ரூக் அப்துல்லா