கான்ஜூரிங் கண்ணப்பன் – விமர்சனம்!
ஹீரோக்களின் ப்ரண்டாகவே வந்து நமக்கு பரிட்சயாமான ஆக்டர் சதிஷ் முக்கிய ரோலில் நடித்து அறிமுக இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் என்பவர் இந்த படத்தின் கதையை எழுதி டைரக்ட செய்திருக்கும் படம் கான்ஜுரிங் கண்ணப்பன். நகைச்சுவைக் கலந்த திகில் கதை அம்சத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஆனந்தராஜ், எல்லி அவ்ரம், ரெஜினா கசாண்ட்ரா மற்றும் VTV கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள்.இந்த திரைப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
வழக்கமான பேய் பங்களா கதை என்றாலும் கனவுப்பேய் என்ற புது ரூட்டை பிடித்து, ரசிக்க வைக்க முயன்று இருக்கிறார் டைரக்டர் செல்வின்.. ஆனால் தன் முயற்சியில் சறுக்கி விட்டார் என்றே சொல்ல வேண்டும்.
வீடியோகேம் டெவலப்பரான ஹீரோ சதீஷ் ஒருநாள் மோட்டார் வேலை செய்யவில்லை என கிணற்றில் நீர் இறைப்பவருக்கு ஒரு வினோதமான ட்ரீம் கேட்சர் கிடைக்கிறது. அதாவது பறவை இறகுகளுடன் கூடிய ஒரு பழங்கால மாலை கிடைக்கிறது. அதில் உள்ள ஒரு இறகை விளையாட்டுத்தனமாக கண்ணப்பன் பீய்த்து விட அன்று முதல் தூக்கத்தில் அவருக்கு பேய் கனவு வருகிறது. முதலில் அதுபற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளாத கண்ணப்பன் தொடர்ச்சியாக ஒரே கனவு வருவதும் அதில் பேய் மிரட்டு வதும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அதிலும் கனவில் ஒரு அரண்மனைக்குள் போன இடத்தில் பேயிடம் சிக்கி ரத்தகாயம் எல்லாம் ஆகிறது. விழித்துப் பார்த்தால் கனவில் பட்ட அடி நிஜத்திலும் அப்படியே இருக்கிறது. இதற்கு உதவிகேட்டு எக்ஸார்சிஸ்ட் ஏகாம்பரத்திடம் (நாசர்) செல்ல, அவர் இந்த ட்ரீம் கேட்சர் சபிக்கப்பட்டது, இதிலிருந்து தப்பிக்க ஒரு சாவி அந்த அரண்மனையில் உள்ளது என சொல்கிறார். எதிர்பாராத விதமாக அந்த ட்ரீம் கேட்சரின் இறகுகளை, கண்ணப்பனின் குடும்பத்தினரும், மற்றும் வட்டிக்காரர், டாக்டர் உள்ளிட்டவர்களும் பிய்த்து இந்த கனவுலகில் சிக்கி விடுகின் றனர். அவர்களால் அதிலிருந்து மீள முடிந்ததா என்பதற்கு காமெடி திகிலுடன் பதில் அளிப்பதே கான்ஜூரிங் கண்ணப்பன்.
டைட்டில் ரோலான கண்ணப்பனாக ரோலில் வரும் சதீஷ் நல்லவேளை முழுக்க சந்தானம் பாணிக்கு மாறாமல் தன் பாணியில் கனவில் குழப்பமான மனநிலை, பேய்களைக் கண்டு அலறுவது என நடிப்பில் அடுத்த லெவல் போகிறார்.. ஆனால் வசங்களில் இன்னும் கொஞ்சம் தனி அக்கறை செலுத்தி இருக்கலாம். கூடவே நடிப்புக்கான பயிற்சியும் தேவை. தூங்கும் போது பேய் கனவு வருவதை தவிர்க்க நாள் கணக்கில் கண் விழித்திருக்க சதீஷ் குடும்பம்படும் அவஸ்தைதான் படத்தில் நகைச்சுவைகளை தெறிக்க விடுகிறது.சதீஷ், விடிவி கணேஷ், ஆனந்தராஜ், சரண்யா, ரெடின் என ஒரு கூட்டமே ஏதோ பிக்னிக் செல்வதுபோல் கனவு பேய் பங்ளாவுக்குள் சென்று வருவதும், அலறியடித்து எழுவதெல்லாம் சிரிப்பலையில் ஏற்படுத்த ஆர்வப்படுகிறது என்பதே பெரிய விஷயம்.
படத்திற்கு உயிர் கொடுத்திருப்பது யுவனின் பின்னணி இசைதான் .. அதிலும் காமெடி காட்சிகளுக்குத் தனியாகக் கொடுத்திருக்கும் சவுண்ட் டிராக் ரொம்பவே ரசிக்க வைக்கிறது.. கேமராமேன் .யுவா. கனவுலகம் நிஜ உலகம் என மாற்றி மாற்றி வரும் காட்சிகளையும், மேஜிக் வேர்ல்டை தனி லைட்டிங்கில் படமாக்கி படத்தின் தரத்தை உயர்த்தி இருக்கிறார்.
ஆரம்ப பேராவில் சொன்னது போல் கையில் கிடைத்த களம் சுவாரஸ்யமாக இருந்தாலும் அதை மேம்ப்டுத்தும் காட்சிகள் எதுவும் சுவாரஸ்யமாக இல்லை. ஒவ்வொரு கேரக்டரும் கிடைக்கும் கேப்பில் போடும் கவுன்ட்டர்கள் தொடங்கி, தூங்காமல் இருக்க எந்தெந்த கதாப்பாத்திரங்கள் என்ன செய்கிறது என்பது வரை முடிந்த அளவு காமெடி படத்துக்குள்ளேயே இருக்கிறது. ஆனால் அதை எப்படி கொடுப்பதில் சொதப்பி விட்டார்.. அத்துடன் இக்கதையில் திகில் கொஞ்சம் தூக்கலாக இருப்பதால் காமெடிகள் எல்லாம் மிரண்டு காணாமல் போய் விடுகிறது. முழு படம் முடியும்போது இது காமெடி படமா, சீரியஸ் சினிமாவா? என்ற டவுட்டுடன் வெளியேறுவதுதான் சோகம்
மொத்தத்தில் கான்ஜூரிங் கண்ணப்பன் – இப்போது(ம்) ஜூனியர் ஆர்டிஸ்ட்தான்: பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்
மார்க் 2.5/5