பாரதிராஜாவின் ஆஸ்தான கேமராமேன் பி.கண்ணன் மரணம்!

பாரதிராஜாவின் ஆஸ்தான கேமராமேன் பி.கண்ணன் மரணம்!

தமிழ் சினிமாவின் பழம்பெரும் இயக்குநர் பீம் சிங்கின் மகன் கண்ணன். இவரது மற்றொரு சகோதரர் எடிட்டர் பி.லெனின். கண்ணனுக்கு காஞ்சனா என்ற மனைவியும், மதுமதி, ஜனனி என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.

சுமார் 40 படங்களுக்கும் மேல் ஒளிப்பதிவு செய்துள்ள இவர், இயக்குநர் பாரதிராஜாவின் நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இவரை பாரதிராஜாவின் கண்கள் என்றே திரைத்துறையினர் அழைத்தனர். தமிழ் தவிர தெலுங்கு, மலையாள மொழிப் படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவருக்கு இதய அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் உயிரிழந்தார். அவரது மரணம் திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கண்ணனின் உடல் அஞ்சலிக்காக ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. நாளை காலை இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. அவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Related Posts