சீனா :காதலிக்கவும் ரொமான்ஸ் செய்யவும் மாணவர்களுக்கு ஒரு வாரம் விடுமுறை அறிவிப்பு!

மக்கள் தொகையை அதிகரிப்பதற்காக, காதலில் ஈடுபட வேண்டும் என்று, சீனாவிலுள்ள கல்லூரி ஒரு வார விடுமுறையை அறிவித்துள்ளது.
சீனாவில் பிறப்பு விகிதம் கவலையளிக்கும் விதமாகக் குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கு, 1980 – 2015-க்கு இடையில் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த ‘ஒரு குழந்தை மட்டும்தான் குடிமக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும்’ என சீன அரசு சட்டமியற்றியதே காரணம் என்கிறார்கள். இதனால் தற்போது சீனாவில் இளைஞர்களைவிட முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
இதைக் கட்டுப்படுத்த சீன அரசு 3 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் தம்பதிக்குச் சிறப்பு மானியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை 2021-ம் ஆண்டுமுதல் அறிவித்து வருகிறது. ஆனால், கொரோனா கால ஊரடங்கின் போதுகூட சீனாவில் பிறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை. அதற்கு குழந்தை பராமரிப்பு, கல்வி செலவுகள், பலவீனமான சமூகப் பாதுகாப்பு, பாலின ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றை முக்கிய காரணிகளாக இளைஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த நிலையில், சீனாவின் மக்கள் அரசியல் ஆலோசனை மாநாடு அண்மையில் நடைபெற்றது. அதில், பிறப்பு விகிதத்தை உயர்த்துவதற்காக இரண்டாவது மற்றும் மூன்றாவது குழந்தைகளை வளர்க்கும் குடும்பங்களைக் காட்டிலும், முதலாவது குழந்தையை வளர்க்கும் குடும்பத்துக்கு மானியங்களை அதிகரித்தல், இலவச பொதுக் கல்வியை விரிவுபடுத்துதல் மற்றும் மேம்படுத்துதல், கருவுறுதல் சிகிச்சைகளுக்கான அணுகல்களை இலகுவாக்குதல் உள்ளிட்ட முன்மொழிவுகள் ஆலோசிக்கப்பட்டிருக்கின்றன.
இந்த நிலையில், சீனாவில் ஒன்பது கல்லூரிகள், இந்த மாதம் மாணவர்களுக்குக் காதலிக்க ஒரு வாரம் விடுமுறை அறிவித்திருக்கின்றன. இது குறித்து பேன் மெய் (Fan Mei) கல்விக் குழுவின்கீழ் இயங்கும் 9 கல்லூரிகளில் ஒன்றான “Mianyang Flying Vocational College” `மாணவர்களுக்கு ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 7-ம் தேதி வரை வசந்தகால விடுமுறை அறிவித்துள்ளது. இதன் மூலம் இயற்கையை நேசிக்கவும், வாழ்க்கையை நேசிக்கவும், அன்பு சார்ந்த எண்ணங்களை வளர்க்கவும் மாணவர்களை ஊக்குவிக்கிறோம். இந்த வசந்தகால இடைவெளி, நாட்டின் மக்கள்தொகை பிரச்னையைத் தீர்ப்பதற்கும் உதவும் என நம்புகிறோம்” என்று தெரிவித்திருக்கிறது.