எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் தமிழ்ப்பெண் முத்தமிழ் செல்விக்கு முதல்வர் பாராட்டு!
பொதுவாக எல்லா சாதனையின் உச்சத்தையும் நாம் எவரெஸ்ட் சிகரத்தோடுதான் ஒப்பிடுகிறோம். அத்தகைய எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் தமிழ்ப்பெண் என்ற பெருமையை விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள ஜோகில்பட்டியைச் சேர்ந்த 38 வயதான முத்தமிழ்ச்செல்வி பெற்றுள்ளவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சிறுவயது முதலே மலை ஏறுவதில் ஆர்வம் கொண்ட முத்தமிழ்ச்செல்வி அதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். அந்த வகையில் உலகிலேயே மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் உச்சியை அடைய வேண்டும் என்பதே இவரது கனவு. இதற்காக அதிக உயரம் கொண்ட மலைகளில் ஏறி முத்தமிழ்ச்செல்வி பயிற்சி மேற்கொண்டார். அதன்படி கடந்த மாதம் 8-ந்தேதி மகளிர் தினத்தன்று ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள 155 அடி உயர மலை உச்சியில் இருந்து கண்களை கட்டிக்கொண்டு 58 வினாடியில் இறங்கி முத்தமிழ்ச்செல்வி சாதனை படைத்தார்.
இதேபோன்று எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கு முன்னோட்டமாக கருதப்படும் காஷ்மீரில் லடாக் பகுதியில் உள்ள சுமார் 5 ஆயிரத்து 500 அடி உயரம் கொண்ட பனிமலை உச்சியை அடைந்து முத்தமிழ்ச்செல்வி சாதித்தார். அதையடுத்து அவர் எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கான தகுதியை பெற்றார். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் அவர் ஏசியன் டிரெக்கிங் நிறுவனத்தின் 37 பேர் கொண்ட குழுவினருடன் எவரெஸ்ட் சிகரம் ஏறும் தனது பயணத்தை தொடங்கினார்.இவரது தைரியத்தை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது. அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.10 லட்சமும், அமைச்சர் உதயநிதி ரூ.15 லட்சமும் நிதியுதவி அளித்தனர்.

இதை அடுத்து எவரெஸ்ட் சிகரத்தை உச்சியை அடைய தனது பயணத்தைத் தொடங்கிய முத்தமிழ்செல்வி எவரெஸ்ட்டின் அதிகபட்ச உயரத்தை எட்டி சாதனை படைத்துள்ளார். தற்போது, எவரெஸ்ட்டில் ஏறிவிட்டு திரும்பியுள்ள தமிழகத்தை சேர்ந்த முத்தமிழ்செல்விக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். எல்லோருக்கும் சாதனை படைத்து, தாங்களே ‘முதல்’ என முத்திரை பதித்திட வேண்டும் என்ற எண்ணம் உண்டு. மேலும், பல பெண்கள் சாதனை படைக்க முத்தமிழ்ச்செல்வி ஊக்கமாக விளங்கட்டும் என்றும் அவர் தனது சமூகவலைத் தளப் பக்கத்தில் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மே இரண்டாம் வாரத்தில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறத்தொடங்கியவர் தற்போது தனது பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


