சென்னை புத்தகக் காட்சி: ஜன.3-ல் தொடங்குகிறது!

சென்னை புத்தகக் காட்சி: ஜன.3-ல் தொடங்குகிறது!

னவரி மாதம் வந்துவிட்டாலே, புத்தகக் கண்காட்சி குறித்த எண்ணங்கள் நமது மூளையில் ஓடதுவங்கிவிடும். சென்னை புத்தகக் கண்காட்சியில், அனைத்து பதிப்பகத்தின் புத்தகங்களும் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல், எங்கும் கிடைக்காத பல புத்தகங்கள் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும். அதுவும் சிறப்புத் தள்ளுபடி விலையில் புத்தகம் விற்கப்படுவதால் புத்தகப்பிரியர்கள் இந்தக் கண்காட்சியைத் தவறவிடுவதில்லை. இதனால் புத்தகக்கண்காட்சி நடைபெறும் நாள் குறித்த எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வந்தது. இந்நிலையில் 47 ஆவது சென்னை புத்தகக் காட்சியை ஜனவரி 3 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என பபாசி அறிவித்துள்ளது.

மக்கள் மத்தியில் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தைப் பரவலாக்கி அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் நூல்களின் விற்பனைகளை அதிகப்படுத்துவதற்காகவும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தினர், 1976ஆம் ஆண்டு ஒரு தனிக் கூட்டமைப்பை உருவாக்கினர். இந்தக் கூட்டமைப்பின் முன்னெடுப்பினால் அதே ஆண்டில் சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள மதரஸா யஏ – ஆலம் மேல்நிலைப்பள்ளியில் மிகவும் சிறிய அளவில் முதன்முதலில் தொடங்கப்பட்ட சென்னை புத்தகக் கண்காட்சி, பின்னர் அதே வளாகத்தில் அமைந்துள்ள சென்னை காயிதே மில்லத் மகளிர் அரசு கல்லூரி மைதானத்தில் தொடர்ந்து 28 ஆண்டுகள் நடைபெற்று வந்தது.

அதன்பின்னர், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் பள்ளியில் சில ஆண்டுகள் நடைபெற்றது. தற்போது தொடர்ச்சியாக சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 2015ஆம் ஆண்டு சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்டதால், ஜனவரி மாதம் நடைபெற வேண்டிய புத்தகத் திருவிழா ஜூன் மாதம் தீவுத்திடலில் நடைபெற்றது. இதன் பின்னர் நந்தனம் ஒய் என் சி ஏ மைதானத்தில் நடந்து வருகிறது.. அந்த வகையில் ஆண்டு தொடங்கும் சூழலில் புக் ஃபேர் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த பபாசி நிர்வாகிகள், “47 ஆவது சென்னை புத்தகக் காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஜனவரி 3ம் தேதி மாலை 4.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். துவக்கவிழாவில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொள்கிறார்கள். புத்தகக்காட்சி விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். மொத்தம் 19 நாட்கள் புத்தகக் காட்சி நடைபெறுகிறது

ஒவ்வொரு நாள் மாலையிலும் சிந்தனை அரங்கில் தமிழகத்தின் தலை சிறந்த அறிஞர்கள், எழுத்தாளர்களின் உரைவீச்சுக்கள் நடைபெற உள்ளது. அதேபோல் சர்வதேச புத்தக திருவிழா நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் ஜனவரி 16 தொடங்கி 18 வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவில் வாசகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 800க்கும் மேற்பட்ட அரங்குகளில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளது. சிறை கைதிகளுக்கான புத்தகங்கள், குழந்தைகளுக்கான புத்தகங்கள், சிறப்புப் பிரிவினர்களுக்கான புத்தகங்கள் உள்ளிட்ட சிறப்பு அரங்குகள் கடந்த ஆண்டு போலவே அத்தனை அரங்குகளும் இந்த ஆண்டும் அமைக்கப்பட உள்ளது”என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!