ரவுடித்தனமாக மாறிய தமிழ் வர்த்தகர்கள் மற்றும் ரத்னா கபே!

ரவுடித்தனமாக மாறிய தமிழ் வர்த்தகர்கள் மற்றும் ரத்னா கபே!

சொமேட்டா நிறுவனமாவது உடனடியாக மன்னிப்பு கேட்டது. ஆனால், உணவு விஷயத்தில் நம்ம ஊர் நிறுவனங்கள் செய்யும் அடாவடிகள் கொஞ்ச நஞ்சமல்ல. கெட்டுப்போன இறைச்சி, அழுகின காய்களில் சாம்பார் – குழம்பு, உருகி மீண்டும் உறைந்த ஐஸ்கிரீம், பூஞ்சை பிடித்த இனிப்பு, கீழே கொட்டி வழித்து எடுத்த சட்னி என எல்லாவற்றையும் வாடிக்கையாளர் தலையில் கட்ட வேண்டும் என்பதை கங்கணம் கட்டிக்கொண்டு செய்வதை கேள்வியே கேட்க முடியாது. இவையெல்லாம் மிகையில்லை, ஒருசிலர் உணவு துறையில் ஆத்மார்த்தமாக இருக்கலாம். ஆனால், இந்த அனுபவங்களை கடந்துதான் வருகிறோம்.

பிரபலமான சைவ உணவகத்தில், சமையல் கூடத்தில் வேலை பார்த்த நண்பர் ஒருவர் சமீபத்தில் தலையில் அடித்துக் கொண்டு சொன்ன சம்பவம்தான் சட்னி மேட்டர். அரைத்து எடுக்கும்போது சட்னி வாளி கை தவறி விழுந்து, கீழே வழிந்தோடியுள்ளது. பரபரப்பான காலை நேரம், ஓனர் (பிரான்சைசி உணவகம்) வந்து பார்த்து திட்டிவிட்டு , வழித்து எடுத்துக் கொண்டு லைன்க்கு போ என விரட்டி இருக்கிறான். உயர்தர சைவம் என விரும்பிச் செல்லும் இடத்தில்தான் இந்த நிலைமை.

அந்த வகையில் கெட்டுப்போன, பூரணம் பிடித்த இனிப்பை பிரபல உணவகமாக ‘ரத்னா கபே ‘யில் வாங்கி, சாப்பிட்டு , அவமானப்பட்ட அனுபவம் எனக்கு. கடந்த வாரத்தில், ஞாயிற்றுக் கிழமை குடும்பத்தோடு திருவல்லிக்கேணி சென்ற வகையில், ஒரு காபி குடிக்கலாம் என ‘ரத்னா கபே’ உணவகத்துக்கு அழைத்துச் சென்றேன். இனிப்பு பிரியரான என் மகனார் குலோப் ஜாமூன் கேட்க, அங்கேயே தின்பதற்காக மினி ஜாமூன் 100 கிராம் ஆர்டர் செய்தேன். இதற்கிடையே அந்த கடை குறித்து, “சுத்தமான நெய்யில் செய்வார்கள், சாம்பார் சூப்பராக இருக்கும் ” என நானே எடுத்துச் சொன்ன பெருமை பீத்தல் வேறு.

குலோப் ஜாமூன் வந்ததும், கடகடவென நான்கு அல்லது ஐந்தை உள்ளே தள்ளி விட்டான் பையன். நாமும் ஒரு வாய் வைக்கலாம் என, அதை எடுத்தால், அந்த இனிப்பில் வெள்ளையாக படலம் இருந்தது. அது சீனிப் பாகாக இருக்கலாம் என நினைத்தால், உற்று நோக்கினால் வெள்ளை பூஞ்சை . எல்லா உருண்டையிலும் அப்படியே இருக்க, மகனிடம் இருந்த இனிப்பை பிடிங்கிக் கொண்டு, கண்ணாடிப் பேழைக்குள் குலோப் ஜாமுன் அடிக்கி வைக்கப்பட்டிருந்த தட்டை பார்த்தேன். அதில், கருப்பும் வெள்ளையுமாக பூஞ்சை பிடித்திருந்தது. அந்த தட்டை எடுக்கச் சொல்லி பிரச்சினை செய்தால், வேலை செய்பவன் எல்லாம் ஹிந்தி வாலாக்கள். எவனிடமும் பதில் இல்லை.

கல்லாவுக்கு அருகில் பணத்தை எண்ணிக் கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தவர் கிளம்பி வந்து, அதை எடுத்து விடுகிறோம் என கூலாக சொல்லி விட்டு நகர்ந்து விட்டார். இதை செய்தியாக்குவேன் என்றால், “நீங்க வேற எதையோ எதிர்பார்த்து பிரச்சினை செய்வதாக” என் மீதே குற்றம் சாட்டினார். சரி, உணவுபாதுகாப்பு துறைக்கு போன் செய்யலாம் என்றால், ஒரு அதிகாரி எடுத்து, “சார் அது நம்ம கன்ட்ரோல்ல வராது, அதுக்கு வேற நம்பர் தருகிறோம் அடிங்க” என்கிறார். அந்த எண்ணுக்கு அடித்தால் போன் எடுக்கவே இல்லை. அது தொடர்பாக விவரங்கள், புகைப்படங்களுடன் ‘வாட்ஸ்அப்’ பில் புகார் அனுப்பினால், அதையும் பார்க்கவில்லை. அந்த எண்ணில் இருந்து அடுத்த நாள் திங்கள்கிழமை அன்று பதில் வருகிறது. உங்கள் புகாரை அந்த கடைக்கு அனுப்பி இருக்கிறோம். அவர்கள் அளிக்கும் விளக்கத்தை உங்களுக்குச் சொல்கிறோம் என பதில் வந்தது. இப்போதுவரை எந்த பதிலும் இல்லை.

ஒரு கடையில், கண் எதிரே தரமற்ற உணவு விற்பனை செய்யப்படுகிறது. அது தொடர்பாக புகாரை அந்த இடத்தில் இருந்தே அளித்தால் தீர்வு காண்பதற்கு நம்மிடம் ஏற்பாடுகள் இல்லை. இத்தனைக்கும், அதற்கான அத்தனை ‘சேனை’களும் நம்மிடம் இருந்தும் நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் இருக்கிறோம்.

மிகச் சமீபத்தில்தான், ஆரணி, நெல்லை போன்ற ஊர்களில் பழைய பிரியாணியை விற்று ரெண்டு உயிர்களை காவு வாங்கிய பிரியாணி கடை செய்திகளை பார்த்திருப்போம்.. இதையெல்லாம் பார்க்கிறபோது ஸொமொட்டோ போன்ற பன்னாட்டு முதலீட்டு நிறுவனங்கள் வாடிக்கையாளர் விஷயத்தில் கவனமாகவும், உடனடி எதிர்வினை ஆற்றும் இடத்தில் இருப்பதை கவனிக்க வேண்டும். மொழியும், உணவும் முக்கியமான உணர்வு என பன்னாட்டு நிறுவனம் பம்மிக் கொண்டது. ஆனால், மொழியும், உணவும் ஒன்றே என்றாலும், நமது உணவு நிறுவனங்களின் ஏமாற்றுத்தனம், தடித்தனத்துக்கு விடிவு காலமே இல்லை என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

நீரை. மகேந்திரன்

error: Content is protected !!