கடவுளுக்குப் பூஜை செய்ய ஊமத்தம் பூ ? – ஓ.பன்னீர் பேச்சு!
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் நேற்று நடந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் ரூ.50 கோடியே 33 லட்சம் மதிப்பில் திட்டப் பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அப்போது, அவர் பேசியதாவது, ”தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்த ஆட்சியை ஏதாவது ஒரு வழியிலே கவிழ்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இங்கே இருக்கின்ற தொண்டர்கள் இருக்கின்ற வரை ஒருபோதும் ஆட்சியை தொட்டுக்கூட பார்க்க முடியாது. எம்ஜிஆர், ஜெயலலிதா, இந்த இரு பெரும் தலைவர்களால்தான் இன்று தமிழகம் தலைநிமிர்ந்து இருக்கிறது. இரு பெரும் தலைவர்களுடைய உழைப்பு நிலைத்து நிற்கின்ற வரை இந்த ஆட்சியையோ, கட்சியையோ யாரும் தொட்டுப் பார்க்க முடியாது. சாதாரண குடிமகனும் ஆட்சியில் அமர முடியும் என்பதற்கு வழிவகுத்தவர் ஜெயலலிதா. அதனால்தான், தன் வாரிசாக யாரையும் அவர் சுட்டிக்காட்டவில்லை. 27 ஆண்டுகள் ஆட்சியில் அமர்ந்திருக்கும் ஒரே கட்சி அதிமுக தான். அதிமுக ஆட்சியை கவிழ்க்க துடிக்கிறார்கள், அதிமுக ஆட்சியை எவராலும் தொட்டு பார்க்க முடியாது”. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பேசினார்.
நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசிய போது, “எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாட வேண்டும் என்பது ஜெயலலிதாவின் ஆசை. தாய் சொல்லைத் தட்டாத பிள்ளைகள் நாம். தாய் எதைச் சேர்க்கச் சொன்னாரோ, அதைச் சேர்த்துக் கொண்டிருக்கிறோம். எதை நீக்கச் சொன்னாரோ, அதை நீக்கிக் கொண்டிருக்கிறோம். எதைக் கொண்டாடச் சொன்னாரோ, அதைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
இந்த மண்ணை விட்டு மறைந்த பிறகும், மக்கள் மனதைவிட்டு மறையாமல், வாழ்ந்து கொண்டிருக்கும் பெரும் பாக்கியத்தை, ஆண்டவன் எல்லோருக்கும் கொடுத்து விடுவதில்லை. ஆண்டவன், எம்.ஜி.ஆருக்கு கொடுத்தான். ஜெயலலிதாவுக்கு கொடுத்தான். எம்.ஜி.ஆர். ஒரு சாதாரண மனிதராக வாழவில்லை. புனிதராக வாழ்ந்தவர்.
சிலருக்கு பேச்சு ஆயுதமாக இருக்கும். சிலருக்கு எழுத்து ஆயுதமாக இருக்கும். எம்.ஜி.ஆருக்கோ பாடல்கள் ஆயுதமாக இருந்தது. பக்கம் பக்கமாக எழுதி எழுச்சியூட்டுவதைவிட, மணிக்கணக்காக பேசிப் பேசி எழுச்சியூட்டுவதை விட, பாடல்களால் வாழ்க்கையின் தத்துவங்களுக்கு எழுச்சியூட்டியவர் எம்.ஜி.ஆர்.அவர், பாடல்கள் மூலமாக அன்பை ஊட்டினார். அறிவை ஊட்டினார். பண்பை ஊட்டினார். பாசத்தை ஊட்டினார். பணிவை ஊட்டினார். துணிவை ஊட்டினார். வீரத்தை ஊட்டினார். விவேகத்தை ஊட்டினார். அதனால்தான் அவர் உருவாக்கிய இந்த கழகம், யாராலும் வீழ்த்த முடியாத அ.தி.மு.க. இரும்பு கோட்டையாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது.
“ஊருக்கு உழைச்சாலே, ஏழை உரிமையை மதிச்சாலே, பெருமைகள் தேடி வரும். தானே பதவிகள் நாடி வரும்..” என்று எம்.ஜி.ஆர். பாடினார். ஆனால் இப்பொழுது சிலர் மக்களுக்கு உழைக்காமலேயே உள்ளே வர நினைக்கிறார்கள். உத்தரவின்றி உள்ளே வரக்கூடாது என்று ஜெயலலிதா ஆணையிட்ட பிறகும் கூட, உள்ளே வர பல சூழ்ச்சிகள் செய்து கொண்டிருக்கிறார்கள்.
“சிரித்து வாழ வேண்டும். பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே. உழைத்து வாழ வேண்டும். பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே. என்று எம்.ஜி.ஆர். பாடினார். ஆனால், பிறர் உழைப்பிலேயே இதுவரை வாழ்ந்த சிலர், இப்பொழுதும் உழைக்காமலேயே வாழத் துடிக்கிறார்கள். அதைவிடக் கொடுமை, குறுக்கு வழியிலே தமிழகத்தை ஆளத் துடிக்கிறார்கள்.
கனவு காண்கிறார்கள்
எம்.ஜி.ஆர். வகுத்துக் கொடுத்த லட்சியப் பாதையிலே உருவான ஆட்சி. ஜெயலலிதாவின் புனிதப் பாதையிலே உருவான ஆட்சி. இந்த ஆட்சி. ஜெயலலிதாவிடம் தோற்றுப் போனவர்களும், ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்களும், இந்த ஆட்சியை அசைத்துப் பார்த்து விடலாம் என்று கனவு காண்கிறார்கள். அரும்பாடுபட்டு ஜெயலலிதா உருவாக்கிய இந்த ஆட்சிக்கு, சிலர் கெடு விதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஜாதகம் சரியில்லாத சிலர், இந்த ஆட்சி நீடிக்காது என்று ஜோசியம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். துணை முதல்-அமைச்சரும், முதல்-அமைச்சரும் பதவி விலக வேண்டுமாம்.
எதற்காக, ஒரு குடும்பத்தின் ஆட்சி இருக்கக் கூடாது என்று சொன்னதற்காக. துணை முதல்-அமைச்சர் பதவி விலக வேண்டுமாம். விசுவாசத் தொண்டர்களின் வேண்டுகோளை ஏற்று, அந்தக் குடும்பத்தை விலக்கி வைத்ததற்காக, முதல்- அமைச்சர் பதவி விலக வேண்டுமாம். கடவுளுக்குப் பூஜை செய்ய, மல்லிகைப் பூ இருக்கலாம். ரோஜாப் பூ இருக்கலாம். சாமந்திப் பூ இருக்கலாம். ஆனால், ஊமத்தம் பூ இருக்கக் கூடாது. நமது வெற்றிச் சின்னமான இரட்டை இலையில், ஒரு இலையில், எம்.ஜி.ஆரைப் பார்க்கிறோம். ஒரு இலையில், ஜெயலலிதாவைப் பார்க்கிறோம். அந்த இரட்டை இலை நம்மிடம் வரும், தொடர்ந்து நல்லாட்சி தரும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில், ஜெயலலிதாவின் வழியிலே, நாங்கள் கடமையாற்றிக் கொண்டிருக்கிறோம்.
ஜெயலலிதாவின் மேல், பாசம் வைத்திருக்கும் தமிழக மக்களுக்கும், விசுவாசத் தொண்டர்களுக்கும், யாராவது தீங்கு செய்ய நினைத்தால், மக்கள் அவர்களின் துரோகத்தை தடுத்து நிறுத்துவார்கள்.தமிழக மக்களின் நலனுக்காகவே, திட்டங்களை அள்ளி அள்ளிக் கொடுத்த, ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியைக் காப்பாற்றுவதற்காக, எந்தத் தியாகத்தையும் செய்வதற்கு, மக்கள் சக்தியோடு ஜெயலலிதாவின் பிள்ளைகளான நாங்கள் தயங்கவே மாட்டோம்”இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.