இலவச தங்கும் விடுதி வசதியுடன், கட்டணமில்லாமல் எம்.பில். படிக்கத் தயாரா?
இன்று வரை தினந்தோறும் தீவிரம் அடைந்துவரும் கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வர மத்திய மாநில அரசுகள் போராடி வருகின்றன. நாட்டில் நோய் பாதிப்பின் தாக்கம் ஒருபுறம் என்றால், மறுபுறம் ஊரடங்கு, மக்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக் குறியாக்கி இருக்கிறது. இந்த சுழலிலும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் தங்கள் மாணவர்களைக் கல்விக் கட்டணத்தை உடனடியாகச் செலுத்தும்படி கட்டாயப்படுத்தி வருவதாக செய்திகள் வெளியாகும் காலக் கட்டத்தில் மாணவ, மாணவியர் இலவசமாக தங்கும் விடுதி வசதியுடன், கட்டணமில்லாமல் எம்.பில். படிக்க விண்ணப்பிக்கலாம் என்று, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை தகவல் இதோ:–
தமிழ்மொழி வளர்ச்சிக்கெனத் தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன், தமிழ் ஆய்வியல் நிறைஞர் பட்டம் (M.Phil.), ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. 2021- 22ம் கல்வியாண்டிற்கான ஆய்வியல் நிறைஞர் பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது.
மாணவர்கள் முதுகலைப் பட்டப்படிப்பில் பெற்ற மொத்த மதிப்பெண்களில் 50% மற்றும் நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் 50% ஆகியவை சேர்த்துக் கணக்கிட்டு, தெரிவுப் பட்டியல் அமைக்கப்படும். தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியல் உயரளவு மதிப்பெண் வரிசையில், தமிழ்நாடு அரசின் இன வாரி சுழற்சி அடிப்படையில் தெரிவு செய்யப்படுவர்.
கட்டணம் இல்லை
தேர்வு செய்யப்படும் மாணவர்கள் உரிய கல்வித் தகுதிக்கான மூலச் சான்றுகளையும் அவற்றின் ஜெராக்ஸ் நகல்களையும் (இரண்டு வீதம்) எடுத்துவர வேண்டும். அசல் சான்றிதழ்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதிக்கப்படுவர். விண்ணப்பங்களை நிறுவன வலைதளத்தில் (www.ulakaththamizh.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அஞ்சல் வழியிலும் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பங்கள் வந்துசேரவேண்டிய கடைசி நாள்- 16.08.2021.நுழைவுத் தேர்வு நடைபெறும் நாள், நேரம் ஆகியன தகுதியுடைய விண்ணப்பதாரர்களுக்குப் பின்னர் தெரிவிக்கப்படும். கல்விக் கட்டணம் – கிடையாது. மாணவ, மாணவியர்க்குத் தனித்தனியே கட்டணம் இல்லாத தங்கும் விடுதி வசதி உள்ளது.
மேலும் விவரங்களுக்கு,
இயக்குநர்,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,
இரண்டாம் முதன்மைச் சாலை,
மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம்,
தரமணி, சென்னை – 113,
போன்: 044-2254 2992.
சேர்க்கை தொடர்பான விதிமுறைகள், தகவல்களை www.ulakaththamizh.in என்ற இணைய முகவரியில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.